search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பராசக்தி புற்றுவாக எழுந்தருளிய தலம்
    X

    சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பராசக்தி புற்றுவாக எழுந்தருளிய தலம்

    • சரஸ்வதியின் சாபப்படி அகோர உருவம் அடைந்த பார்வதி, நாடெங்கும் அலைந்த திரிந்து திருவண்ணாமலை வந்தடைந்தாள்.
    • தன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் பேரானந்தமடைந்த சிவன், சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.

    சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிய தலம் சிதம்பரம் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்க, அன்னை பராசக்தி புற்றுவாக எழுந்தருளிய தலம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

    அது, அம்மனின் சிறந்த பிரார்த்தனை தலங்களுள் ஒன்றாக விளங்கும் மேல்மலையனூர். இங்குதான் சிவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும்; அதன் பின்னர் சிதம்பரம் சென்று அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாகவும் அங்காளம்மன் ஆலய தல வரலாறு கூறுகிறது.

    பராசக்தி இங்கு அங்காளம்மனாக எழுந்தருளியதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

    ஆதியில் சிவன், பார்வதியின் மூலம் அறிந்து கொண்ட பஞ்சமுக மந்திரத்தை உச்சரித்து, பஞ்சமுக சிவன் ஆனார். அதைக் கண்ட பிரம்மனுக்கும் பேராசை பிடித்துக் கொண்டது. தனக்கும் ஐந்தாவது தலை வேண்டுமென்ற வரத்தை சக்தியிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

    ஐந்தாவது தலை கிடைத்ததும், தலைக்கணமும் ஏறியது பிரம்மாவுக்கு சிவனுக்குச் சமமாக தாமும் இருக்கிறோம் என்ற ஆணவத்தோடு நடக்கத் தொடங்கினார். ஆகவே, பிரம்மாவின் ஐந்தாவது தலையை அழித்துவிடச் சொல்லி, பரமசிவனிடம் முறையிடுகிறாள் பார்வதி.

    இறுதியில் விஷ்ணுவின் யோசனைப்படி பிரம்மாவிடம் வலியச் சண்டைக்குச் செல்கிறார் பரமன். சண்டையில் பிரம்மாவின் தலையை அறுத்த சிவன், அதைக் கீழே போடாமல் கையிலேயே தாங்கிக் கொண்டார். பிரம்மா முன்பு போல் நான்கு தலைகள் கொண்டவரானார். ஆனால், இந்தச் சம்பவத்தால் சிவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

    தன் கணவரின் நிலையறிந்த சரஸ்வதி, சிவன் மீது கடும் கோபம் கொண்டாள். அவரை நோக்கி, "என் கணவரின் ஐந்தாவது தலையை உன் கையை விட்டு கீழே விழாமல் ஒட்டிக் கொள்ளட்டும். உனக்கு உணவு, படுக்கை, தூக்கம் எதுவும் இல்லாமல் போகட்டும். சுடுகாட்டின் மூன்று பிடி சாம்பல்தான் உன் பசி தீர்க்கும்' என்றும்; பார்வதியிடம், "என் கணவர் அலங்கோலமாய் போனதற்குக் காரணமான நீயும் அலங்கோலமாய் போவாய். உனது தாதிப்பெண்கள் பூதகணங்களாகப் போவார்கள். நீ பிணத்தைத் தின்று, மதுவைக் குடித்து அகோர உருவம் தாங்கி அலைய வேண்டும்' என்றும் சாபமிட்டாள்.

    இவை அனைத்தையும் மகாவிஷ்ணு மோகினி அவதாரத்தில் வந்து அறிந்தார். பார்வதியிடம் "நீ மேல்மலையனூரில் பூங்கா வனத்தில் புற்றில் பாம்பு உருவாக இருக்கும்போது உனக்கு சாபவிமோசனம் கிட்டும்' என்று சொல்லி, ஆறுதல் கூறினார்.

    சரஸ்வதியின் சாபப்படி அகோர உருவம் அடைந்த பார்வதி, நாடெங்கும் அலைந்த திரிந்து திருவண்ணாமலை வந்தடைந்தாள். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்தபோது அவளுடைய அகோர உருவம் நீங்கி, மூதாட்டி உருவம் பெற்றாள். பூதகணங்களும் பழையபடி பெண்களாயினர்.

    திருவண்ணாலையிலிருந்து மேல்மலையனூருக்குக் கிளம்பினாள் பார்வதி. வழியில் மேல்மலையனூர் ஏரியை வந்தடைந்த அம்மன், அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த தாசன் மற்றும் அவனுடைய மகன்களான வீரன், சூரன், உக்கிரன் ஆகியோரிடம், "உங்களுக்கு கிடைக்கும் மீனை எனக்கு படையுங்கள்' என்றாள்.

    வீரனின் வலை ஓட்டையாக இருந்தாலும் மீன்களைப் பிடித்து அன்னைக்குப் படைத்தான். மகிழ்ச்சியடைந்த பார்வதி புற்றாக உருவெடுத்து அவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.

    "நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கு இருக்கிறேன். என்னை பூஜித்து வந்தால் உங்கள் பரம்பரையை வாழ வைப்பேன். இந்தப் புற்றுமண்ணை பிரசாதமாக உட்கொண்டால் பலவித பிரச்னைகள் தீரும்' என்று அருள்வாக்குக் கூறி மறைந்தாள்.

    புற்றுமண்ணின் ஆற்றலை அறிந்த சிவன் மேல்மலையனூர் வந்தார். மயானத்தில் மூன்று பிடி சாம்பல் சாப்பிட்டார். அவரது பித்தம், பசி ஓரளவு நீங்கியது. கணவர் பழைய நிலையை அடைய, அண்ணன் விஷ்ணுவை தியானித்தாள் பார்வதி.

    பார்வதி முன் விஷ்ணு தோன்றி, "உன் கணவருக்குக் கிடைக்கும் உணவுப்பொருள்களை அவரது கையில் உள்ள பிரம்ம கபாலமே தின்றுவிடுகிறது. எனவே நீ அறுசுவை உணவை சமைத்து, அதை மூன்று கவளமாக்கி, அதில் இரண்டு கவளத்தை பிரம்ம கபாலத்திற்குப் போடு. மூன்றாவது கவளத்தை கைத்தவறி கீழே போடுவதுபோல் தரையில் போடு. பிரம்ம கபாலம் அதை எடுக்க உன் கணவரின் கையைவிட்டு கீழே இறங்கும்போது, நீ பிரமாண்ட உருவமெடுத்து அதை காலால் நசுக்கி விடு. நீ உணவு தயாரிக்க லட்சுமியும் அவளிடம் உள்ள அமுதசுரபி பாத்திரமும் உதவுவார்கள்' என்று சொல்லி, சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்கான வழிமுறையைக் கூறினார்.

    பார்வதியும் அதன்படியே காலால் நசுக்க, அலறிய பிரம்ம கபாலத்திடம், "உனக்கு வேண்டிய உயிர்ப்பலி எல்லாம் பிறகு வரும்' என்று கோபமாகக் கூறினாள். அன்றிலிருந்து பிரம்ம கபாலம் அன்னையின் காலடியிலேயே கட்டுண்டுக் கிடக்கிறது.

    தன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் பேரானந்தமடைந்த சிவன், சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார்.

    பிரம்ம கபாலத்தை காலால் நசுக்கியும் அன்னையின் கோபம் தணியாததால் தேவர்களும் முனிவர்களும் அம்மனை தேரில் எழுந்தருளச் செய்து அவளது கோபத்தைத் தணித்தார்கள். பின் சுய உருவம் பெற்ற அம்மன் அன்றிலிருந்து அங்காள பரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அரசாட்சி நடத்தி வருகிறாள்.

    மகாமண்டபத்தில் அங்காளம்மன் புற்றாகவும் கருவறையில் திருவுருவம் கொண்டு சிவனுடனும் அருள்பாலிக்கிறாள். அவளது உற்சவத் திருமேனி கல்மண்டபத்தில் உள்ளது இங்குள்ள சுயம்பு புற்றுருவம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. முற்காலச் சோழர்களால் மூலவர் திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி, கோபால விநாயகர், பாவாடைராயர், தெற்குக் குளக்கரையில் பெரியாயி ஆகியோருக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது.

    இங்கு தேர்த்திருவிழா, மயானக்கொள்ளை விழா, தீமிதி விழா என மகாசிவராத்திரியன்று தொடங்கி 13 நாள் உற்சவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தீமிதி விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வது கண்கொள்ளாக் காட்சி. அது தவிர அமாவாசை, பௌர்ணமி, ஆடி வெள்ளி, நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல் ஆகிய முக்கிய விழாக்களும் சிறப்பிக்கப்படுகின்றன.

    அமாவாசையன்று நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப்பாடல்களும் தாலாட்டுப்பாடல்களும் பாடி ஆராதனை செய்வதிலிருந்து அங்காளம்மனின் ஆற்றலை அறிந்துகொள்ளலாம்.

    மயானக்கொள்ளையன்று பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ள விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனைச் சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்றுகூடி தேரின் பாகங்களாக இருந்து தேர்த்திருவிழா எடுப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தேரில் பவனி வரும் அங்காளம்மனை வணங்கும்போது சகலதேவர்களையும் வழிபட்ட புண்ணியம் கிட்டுகிறதாம்.

    பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் செய்யப்படுகிறதாம். மாட வீதிகளில் தேர் உலா வரும்போது பக்தர்கள் நாணயங்கள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தேரின் மீது எறிந்து நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பில்லி சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு மயான சாம்பலுடன் குங்குமம், புற்றுமண் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு. இவை பல நோய்களைக் குணப்படுத்துவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.

    பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற கபால வேடமிட்டு மஞ்சள் ஆடையுடுத்தி வருவதும், பெண்கள் வேப்பஞ்சேலை கட்டிக் கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்வதும் இத்தலத்தில் வாடிக்கை. மேலும் பிரகாரங்களில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், ஆடு, மாடு, கோழியை காணிக்கையாகச் செலுத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

    தினசரி தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்; அமாவாசையன்று இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.

    Next Story
    ×