search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    • பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது.

    ஆண்டு தோறும் ஆடி அமாவாசை மற்றும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கோவில் குளக் கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்கள் தங்கும் இடம், விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமா னோர் கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் தூங்கினர். இரவில் திடீரென சிறிது நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    ஆடிஅமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலை வீரராகவர் கோயில் அருகில் உள்ள ஹிருத்தா பநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் வீரராகவப் பெருமாளை வழி பட வந்தனர். ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெரு மாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் காரண மாக திருவள்ளூர் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.
    • கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
    • ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    திருச்சி:

    தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மே ற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். மேலும் காவிரியில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு செல்வதால் ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

     தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும் மண்டப கரைகளில் அமரவைக்கப் பட்டனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்ட னர்.

    திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இதனால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நள்ளிரவு முதலே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தந்ததால், அப்பகுதியில் எந்த விதமான அசம்பா விதமும் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு இருந்தது.

    மேலும், இருசக்கர வாகனம் மட்டுமே அம்மா மண்டபம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. கார், வேன், ஆட்டோ போன்ற எந்த வாகனங்களையும் அம்மா மண்டபம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக, சாலையில் முழுவதும் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா அமைத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக, ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதும க்களுக்கு அறிவு ரைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டு வருகிறது.

    காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் அம்மா மண்டபத்தில் அமைக் கப்பட் டிருந்த தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மற்றொரு புறம் தடுப்புக்கட்டைகள் கட்டி அதில் நீராட அனுமதிக்க ப்பட்டனர்.

    தர்ப்பணம் கொடுத்தவர் கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலா ண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    கரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் நெரூர், மாயனூர், வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலை முறை முன்னோ ர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர்.

    அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர். பின்னர் அவர்களின் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

    • ஒகேனக்கல் பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
    • கரையோரங்களில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

    ஒகேனக்கல்:

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய தமிழ் மாதங்களில் வரும் மகளாய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஐதீகம். மேலும் நாம் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் நம்பிக்கையும் உண்டு .

    அதன்படி ஆடி அமாவாசை இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விடுவர்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக உள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனம் மடம் சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் பஸ்சில் தர்ப்பணம் கொடுக்க வரும் மக்களை கரையோர பகுதிகளான சத்திரம், நாகர்கோவில், முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

    இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே கரையோரங்களில் பூஜை செய்து வழிபட்டனர். இதனால் ஒகேனக்கல் ஆடி அமாவாசை என்று வெறிச்சோடி காணப்பட்டது. 

    • பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
    • அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    • ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.
    • வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூச நட்சத்திர தினத்தையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.

    ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.

    ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

    • 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
    • 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

    அத்துடன் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி கொள்கின்றனர். பின்னர் காலையில் எழுந்து அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்தி மலையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு மற்றும் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். களைப்படைந்த மாடுகளுக்கு பெருமாள் கோவில் அருகில் வண்டிகளுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் மாட்டு வண்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிக அளவில் திருமூர்த்திமலைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருமூர்த்திமலை பகுதியில் 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி செல்ல தடை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படும். இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன், திருவிழாவை யொட்டி வனப்பகுதியில் குடில் அமைத்து அங்கேயே தங்குவார்கள். அப்போது பூக்குழி இறங்குதல், கிடா வெட்டு என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.

    திருவிழாவையொட்டி கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குடிலில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்வதற்காக இன்று மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி இன்று அதிகாலை 6 மணி முதலே வாகனங்களில் பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இன்று 8 மணி அளவில் சுமார் 200 வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பாபநாசம்-நெல்லை சாலையில் டானா பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் அதிக அளவிலான வாகனங்கள் செல்லும் என கூறப்படுகிறது. இந்த வாகனங்கள் இன்று மாலை 5 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை முதல் அரசு பஸ்களில் பக்தர்கள் செல்ல வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்கிடையே திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், வனத்துறை, சிங்கை, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.மேலும் தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடில்கள் அமைக்கப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பணம் செலுத்தி குடிலை வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளலாம்.

    மேலும் 97 நிரந்தர கழிப்பறைகளும், 130 மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படையல் உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
    • ஐந்து பேருக்கு தானம் கொடுக்க வேண்டும்.

    * ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது.

    * ஆடி அமாவாசை அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவோ, சமையல் அறையை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது.

    * காலையில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது. காலை 5 முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் குளித்து விட வேண்டும்.

    * நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    * முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

    * வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.

    * முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.

    * பித்ருக்கள் போட்டோக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கக் கூடாது. ஒரே இடத்தில் வைத்தே படையல் போட வேண்டும்.

    * காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.

    * ஆடி அமாவாசை அன்று நகம் வெட்டக் கூடாது.

    * பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.

    * நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.

    * பெண்கள் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது.

    * ஆடி அமாவாசை படையல் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக செய்யக் கூடியது என்பதால் நைட்டி நோன்ற உடைகள் அணிந்து சமைக்கக் கூடாது. புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைப்பதும், விளக்கேற்றுவதும் நல்லது.

    தானம் செய்ய வேண்டியவை :

    ஆடி அமாவாசை அன்று 5 பேருக்கு, 5 விதமான பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். ஒரு கிலோ அரிசி ஒருவருக்கு, ஒரு கிலோ பாசிப்பருப்பு ஒருவருக்கு , ஒரு கிலோ வெல்லம் ஒருவருக்கு , அரை கிலோ நெய் ஒருவருக்கு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஒருவருக்கு என ஐந்து பேருக்கு அன்றைய தினம் தானம் கொடுக்க வேண்டும்.

    இந்த ஐந்து தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறினாலும், அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போதும் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பித்ருதோஷமானது ஆடி அமாவாசையில் இந்த ஐந்து தானங்களை கொடுப்பதால் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

    • 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
    • ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) ஆடி அமாவாசை தினம்.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.


    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்றுபடுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டுமொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே 4-ந்தேதி நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.


    அடுத்து, தானம்...

    உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை வருகிற ஞாயிற்றுக்கிழமை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோபேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை - எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.


    இதையடுத்து தர்ப்பணம்...

    நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.56 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை 5.32 மணி வரை அமாவாசை திதி நேரம் தான். எனவே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் செய்து கடமைகளை நிறைவேற்றலாம்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும் தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினி போடலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்? இந்த பாவ மூட்டைகளை நீக்க 4-ந்தேதி மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.

    சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்ம தர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.

    முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும் மற்றும் தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.

    அப்பா, அம்மா, உறவு என அனைவருக்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.

    • பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்.
    • பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

    சென்னை:

    மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசித்தாா். அப்போது அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மழைக் காலத்தில் மலை பகுதியில் உள்ள இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து, மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பல்துறை மண்டலக் குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினா் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்ப வேண்டும்.

    நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக விழும் மரங்களை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்க வேண்டும். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையினையும் பயன்படுத்தி மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும்.

    தேவைப்படும் சூழலில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தீயணைப்பு படை வீரா்களை அனுப்பி வைக்க வேண்டும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் 2 குழுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும், சாலை சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    மேட்டூா் நீா்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்படுகிறது. ஆறுகள், கால்வாய்களில் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் நீரில் இறங்குவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையின்போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீராட அனுமதிக்க வேண்டும். அத்தகைய இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க போதுமான தடுப்புகள் ஏற்படுத்தி, காவலா்களை பணியமா்த்த வேண்டும். மேலும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் நீச்சல் வீரா்கள் மற்றும் மீனவா்களை நிலைநிறுத்த வேண்டும்.

    ஆபத்தான மற்றும் அபாயகரமான இடங்களில் ஆறுகள், கால்வாய்களில் மக்கள் செல்வதைக் கட்டுப் படுத்த மாவட்ட நிா்வாகம் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் செல்லும் தாழ்வான பாலங் கள் மற்றும் தரைப்பாலங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×