என் மலர்
தேனி
- கடந்த 50 வருடங்களாக அவரது காரில் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட உள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது 2 முறை முதலமைச்சராக அவரால் அமர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் முதலமைச்சரானார்.
பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடினர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் கடந்த 50 வருடங்களாக அவரது காரில் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. வண்ணமான கருப்பு, வெள்ளை, சிவப்பு வரையப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்ததை தொடர்ந்து காட்சிகள் மாறியுள்ளன. அந்த வண்ணம் தி.மு.க. கட்சி கொடியான கருப்பு, சிவப்பு வண்ணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது நுழைவு வாயில் கிரில் கேட்டில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அறுத்து எடுக்கப்பட்டது. மேலும் அங்கு உதயசூரியன் சின்னம் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட உள்ளது.
தி.மு.க.வில் அவர் இணைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வின் சுவடே இல்லாமல் ஓ.பி.எஸ். இல்லம் மாறியுள்ளது. அவர் தி.மு.க.வில் இணைந்தது கடைகோடி அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை எந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்த்த தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். தன்னை 3 முறை முதலமைச்சராக்கிய அ.தி.மு.க.விற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்து விட்டதாக தொண்டர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது என வேதனையுடன் புலம்பினர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
- வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.
போடி:
தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.
- மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் தேவைகளுக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- அணையின் நீர்மட்டம் 41.47 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிது.
கடந்த சில நாட்களாக திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வந்ததாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே சென்றதாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட 900 கன அடி முற்றிலும் நிறுத்தப்பட்டது. மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி குடிநீர் தேவைகளுக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 41.47 அடியாக உள்ளது. வரத்து 340 கன அடி. இருப்பு 1070 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.20 அடி. வரத்து 32 கன அடி. திறப்பு 433 கனஅடி. இருப்பு 2123 மி.கன அடி.
தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வைகை அணை 13.6, போடி 4.6, ஆண்டிபட்டி 2.6, அரண்மனைபுதூர் 2.4, கூடலூர் 1 என மாவட்டத்தில் 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.
- கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
- திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கூடலூர்:
இந்து மத திருமண சடங்குகளால் ஈர்க்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தமிழக எல்லையான குமுளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆஸ்கார் (வயது47). இவர் கடந்த 2010 முதல் ஆண்டுக்கு 2 முறை கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். அவ்வாறு வந்த போது கேரளாவில் வர்க்கலா மற்றும் தேக்கடி ஆகிய இடங்கள் மிகவும் பிடித்துப்போனது.
மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். இந்து மத சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். இதனையடுத்து ஆஸ்கார் மூலமாக இந்து மதச் சடங்குகளைப் பற்றி அறிந்து கொண்ட செலியாவும் (37), கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை இந்தியாவில் இந்து முறைப்படி நடத்தவும் திட்டமிட்டனர். இதை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், ஆஸ்கார் மணமகள் செலியாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணச் சடங்குகளை பூசாரி கண்ணன் முன்னின்று நடத்தினார்.
கோவில் தலைவர் ரவீந்திரன் நாயர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். தங்களின் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த வெளிநாட்டு தம்பதியினருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
- ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
- இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
படத்திற்கு கீழே இருந்த ரோஜாபூவை ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சையது கான் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டபடி இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் இவர் ரோஜாபூவை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைப்போல ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டு இருந்தார். இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- கட்சியில் பலவித சோதனைகளை சந்தித்து விட்டேன்.
- கடந்த 1 ஆண்டுக்கு முன்பே தனிக்கட்சி தொடங்குமாறு என்னிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
போடி:
போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் இறக்கும் வரை மக்களுக்காக உழைத்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மத்திய அரசு நிதியை எதிர்பார்க்காமல் மாநில அரசின் நிதியைக் கொண்டே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். ஆரம்ப கல்வி முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார். பெண்களுக்கு பல்வேறு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
2001ம் ஆண்டு கட்சிக்கு சோதனை காலம் ஏற்பட்ட போது என்னை முதலமைச்சராக நியமித்தார். 6 மாத காலம் அவரது வழியில் அடிபிரளாமல் செயல்பட்டு வந்தேன். அதன் பிறகு ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட நிலையில் எனது பதவியை ராஜினாமா செய்தேன். 2011ம் ஆண்டு மீண்டும் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது என்னையே முதலமைச்சராக அமரவைத்தார். எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தபோதும் அம்மாவின் ஆணையை ஏற்று முதலமைச்சர் பதவியை ஏற்றேன்.
கட்சியில் பலவித சோதனைகளை சந்தித்து விட்டேன். ஒன்றுபட்டால் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி என்பதை ஏற்கவில்லை. தற்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். இப்போது மட்டுமல்ல எப்போதுமே தனிக்கட்சி தொடங்கமாட்டேன். கடந்த 1 ஆண்டுக்கு முன்பே தனிக்கட்சி தொடங்குமாறு என்னிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என தெரிவித்து விட்டேன். என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டி யனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம் பணிக்காலமாக கருதி அவருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிந்த நிலையில் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர் கணேசுக்கு 1½ ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி, ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கோகிலபாண்டியனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் கோகிலபாண்டியன் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
- ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
* 6 மாத கால முதலமைச்சராக இருந்த நான் ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன்.
* ஜெயலலிதா இல்லாதபோது நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை.
* என்னை கட்டாயப்படுத்தி தான் முதலமைச்சராக அமர வைத்தனர்.
* 3-வது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
* அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என வலியுறுத்தி வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
தேனியில் நாதக- தவெக இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
தவெக தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நகர செயலாளர் சலாம் ஆகியோருக்கு போலீசார் வலைவீசப்பட்டுள்ளது.
- பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே நீர்வரத்தாக இருந்து வந்தது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது. வைகை அணையில் இருந்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் 300 கன அடி வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 45.80 அடியாக உள்ளது. வரத்து 442 கன அடி. இருப்பு 1489 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3004 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.36 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது.
- காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார்.
- இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குல்லப்புரம் மேட்டுக்காலனியை சேர்ந்த சங்கிலி மகன் ஜான்பாண்டியன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் காதலை கைவிட்டார்.
அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டதால் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் ஜான்பாண்டியன் தரப்பினரை வரவழைத்து இனிமேல் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜான்பாண்டியன் தப்பி ஓடினார்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ஏட்டு சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜான்பாண்டியனை கைது செய்தனர்.
- வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
- கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல வைகை ஆற்றை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், வைகை ஆற்றில் நீர்வரத்து மிகக் குறைந்து காணப்படுகிறது. விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆறு முழுமையாக வறண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும். அதே சமயம் வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உறைகிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறையும் என்பதால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராமங்களில் சேதம் அடைந்து குடிநீர் வீணாகி வரும் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.60 அடியாக உள்ளது. அணைக்க 277 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை சேடப்பட்டி, திருமங்கலம் குடிநீருக்காக 69 கன அடி மற்றும் பாசனத்துக்காக 300 கன அடி என மொத்தம் 369 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1468 மி.கன அடியாக உள்ளது.






