வறண்ட மூல வைகை ஆறு - கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும்.
வறண்ட மூல வைகை ஆறு - கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வைகை ஆற்றை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், வைகை ஆற்றில் நீர்வரத்து மிகக் குறைந்து காணப்படுகிறது. விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆறு முழுமையாக வறண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும். அதே சமயம் வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உறைகிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறையும் என்பதால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

எனவே அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராமங்களில் சேதம் அடைந்து குடிநீர் வீணாகி வரும் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.60 அடியாக உள்ளது. அணைக்க 277 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை சேடப்பட்டி, திருமங்கலம் குடிநீருக்காக 69 கன அடி மற்றும் பாசனத்துக்காக 300 கன அடி என மொத்தம் 369 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1468 மி.கன அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com