search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rameshwaram temple"

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் ரூ.400 வரை வசூலிக்கப்படும் எனவும் அதில் இருந்து ரூ.80, ரூ.160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அறநிலையத்துறையின் முடிவு வாபஸ் பெறப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகிற 20-ந்தேதிக்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.2.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    • ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதன் காரணமாக அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது.

    முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி மகாளய அமாவாசைக்காக வெள்ளிக்கிழமை முதலே பஸ், கார் மற்றும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாதசுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.

    தொடர்ந்து பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடியபின் ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் பாதுகாப்புக்காக ராமேசுவரம் நகர் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்கரை கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும், ரோந்து சென்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    • தகவல் அறியும் சட்டத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை மதியம் 1 மணிக்கு சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கோவிலில் பக்தர்கள் 2 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள புண்ணியஸ்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் விதிமுறைகளை மீறி மதியம் 1 மணிக்கு நடை சாத்தாமல் 2 மணி வரை நடை திறக்கப்பட்டு இருப்பதாக பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபி ஆச்சார் என்ற பக்தர் நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். அவர் மதியம் கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டிருந்ததால் கோவில் அலுவலகத்தில் இருந்த துணை ஆணையரை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் தகவல் அறியும் சட்டத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை மதியம் 1 மணிக்கு சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் பக்தர்கள் 2 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறினார்.

    பின்னர் கோபி ஆச்சார் நிருபர்களிடம் கூறும்போது, நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ராமேசுவரம் கோவில் நடை திறக்கும் நேரம், அடைக்கும் நேரம் குறித்து விளக்கம் கேட்டிருந்தேன். அப்போது பகல் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படுவதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் நான் நேரில் வந்து பார்த்தபோது பகல் 1.30 மணி அளவிலும் கோவில் நடை திறக்கப்பட்டுத்தான் இருந்தது. ஆகம விதிகளை மீறி அனைத்து சன்னதிகளும் திறக்கப்பட்டிருந்தது. எனவே இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.

    இந்த நிலையில் உள்ளூர் பக்தர்கள் கூறும்போது, ராமேசுவரம் கோவிலுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவார்கள். தற்போது கோவில் வெளிநடை தினமும் மதியம் 12.50 மணிக்கு மூடப்படுகிறது.

    அப்போது கோவிலுக்குள் இருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் உள்ளே இருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வெளியேவர மதியம் 2 மணி ஆகிவிடுகிறது. அதன் பின்னர் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

    ஆகம விதிப்படி கோவில் நடை அடைக்கப்பட வேண்டும் என்றால் தினமும் 11.30 மணிக்கு கோவில் வெளிநடையை மூடினால்தான் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு 1 மணிக்குள் வெளியே வருவார்கள் என்று தெரிவித்தனர்.

    ராமேசுவரம் கோவில் ரத வீதியில் கட்டணத்துடன் பக்தர்களை ஏற்றி இறக்கி விட்டு இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார்களை நேற்று முதல் இலவசமாக இயக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜே.ஜே.நகரில் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் அக்னிதீர்த்த கடற்கரையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேலவாசல் மற்றும் வடக்கு, தெற்கு, கிழக்குரத வீதிகள் வழியாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ரதவீதிகள் வழியாகவே திரும்பி நடந்து சென்று வருகின்றனர்.

    அதுபோல் பக்தர்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே திருக்கோவில் சார்பில் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன.கிழக்கு ரத வீதியில் இருந்து மேற்கு ரத வீதி சாலை வரையிலும் பேட்டரி கார்களில் செல்ல பக்தர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்பட்டு 3 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ராமேசுவரம் கோவில் ரத வீதியில் கட்டணத்துடன் பக்தர்களை ஏற்றி இறக்கி விட்டு இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார்களை நேற்று முதல் இலவசமாக இயக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.ஆணையரின் உத்தரவை உடனடியாக அமல்படுத்திய ராமேசுவரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, 3 பேட்டரிகார்களிலும் தமிழ்,ஆங்கிலம், இந்தியில் இலவசம் என எழுதப்பட்டு நேற்று முதலே அவற்றில் ரதவீதிகளில் பக்தர்கள் சென்றுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனால் பக்தர்கள் மிகந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது பற்றி திருக்கோவில் இணைஆணையர் கல்யாணி கூறியதாவது:- ராமேசுவரம் கோவில் சார்பில் 3 பேட்டரி கார்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன.மேலும் 2 பேட்டரி கார்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.அந்த பேட்டரி கார்கள் வந்த பின்பு பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள உலகஅளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை சுற்றி பார்க்க வசதியாக இலவசமாக இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். #ChandrasekarRao
    ராமேசுவரம்:

    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார். பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு சென்ற அவர், அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படம், அரிய ஓவியங்களை பார்வையிட்டார்.

    அதன் பின்னர் சந்திர சேகரராவ் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலை சந்திர சேகரராவ் ராமநாத சாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதசாமி - பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார்.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோவிலில் இருந்து அவர் பிரகார மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சந்திர சேகரராவுடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

    தெலுங்கானா முதல்வர் வருகையையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. #ChandrasekarRao
    எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    நம்முடைய முன்னோர்களை அவர்கள் இறந்த நாளில், நினைவு கூர்ந்து வழிபடுவது ‘பித்ரு வழிபாடு' ஆகும். இறந்துபோன மூதாதையர் தென் திசையில் உறைவதாக ஐதீகம். இதன் பொருட்டே பித்ருக்களை ‘தென்புலத்தார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    மகாளய பட்சம், கிரகண காலங்கள், தமிழ் மாத பிறப்பு, அமாவாசை, பித்ருக்களின் திதி நாட்களில், முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, படையல் போட்டு வழிபடவேண்டும். அதிலும் மகாளய பட்சத்தில் தம் சந்ததியினரைத் தேடி பித்ருலோகத்தில் இருந்து பித்ருக்கள் பூலோகம் வருவதாகவும், அப்போது சந்ததியினர் கொடுக்கும் படையலைப் பெற்று நேரில் ஆசி வழங்குவதாகவும் ஐதீகம். இதனால் தான் மகாளயபட்ச அமாவாசை சிறப்புக்குரியதாகிறது. எனவே மகாளய பட்ச நாட்களில் வீடுகளை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    ‘மகாளயம்' என்றால் ‘பித்ருக்கள் வாழும் இடம்’ என்று பொருள். ‘பட்சம்' என்றால் ‘பதினைந்து நாட்கள்’ ஆகும். (சில வருடங்களில் பதினான்கு அல்லது பதினாறு நாட்களும் வரலாம். ‘மகாளய பட்சம்’ என்றால் பித்ருக்கள் பூலோகம் வந்து தங்கியிருக்கும் பதினைந்து நாட்கள் எனப்படும்.

    புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை மகாளயபட்சம் நீடிக்கும். அந்தப் பதினைந்து நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, காகத்திற்கு நண்பகலில் உணவு படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்திடல் வேண்டும். நிறைவுநாளான மகாளய அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து நண்பகலில் படையல் படைத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, அன்று மாலையில் அருகிலுள்ள பழமையான சிவாலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    பெரும்பாலும் பித்ரு தோஷத்தால் தான், சரியான காலத்தில் திருமணம் ஆகாமல் போவது, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாராத விபத்துகள், வியாபார நஷ்டங்கள், வம்ச விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. பித்ரு தர்ப்பணம் செய்வது அனைவரின் கடமை.

    பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு வழிபாடு செய்யவும், பித்ரு சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்களை போக்கிக்கொள்ளவும் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, திருமறைக்காடு, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி, திருக்குற்றாலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், காவிரிப்பூம்பட்டினம், திருப்புவனம், திருவெண்காடு என பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

    தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று ராமர் முடிவு செய்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை, காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் கூறினார். ஆஞ்சநேயர் காசியை நோக்கிப் பறந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆகிப்போனது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமபிரான். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட சீதாதேவி, கடற்கரை மணலிலேயே ஒரு அற்புதமான சிவலிங்கத்தை செய்து முடித்தார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார், ராமபிரான். இந்த லிங்கமே ராமேஸ்வரம் தலத்தில் ‘ராமலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. காலம் தாழ்ந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், ‘விஸ்வ லிங்கம்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இங்கு உள்ள விசாலாட்சி அம்மன் சன்னிதி அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ இருக்கிறது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர் இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரைக் கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.

    கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் ‘பாதாள பைரவர்’ என அழைக்கப்படுகிறார். இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அஷ்டமி, அமாவாசை, மகாளய பட்ச புண்ணிய நாட்களில் பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. ‘ஸ்படிக லிங்க தரிசனம் கோடி பாப விமோசனம்’ என்பர். இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்தல பர்வதவர்த்தினி அம்மனை நவராத்திரி நாட்களில் வழிபடுவது இங்கு சிறப்பாக சொல்லப்படுகிறது. அம்பாள் பீடத்திற்கு கீழ் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது.

    எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

    காசி யாத்திரை செய்பவர்கள் முதலில் இத்தல வழிபாடு செய்து, காசியில் விஸ்வநாதரையும், காசி காலபைரவரையும் வழிபட வேண்டும். பின்னர் கங்கையில் தீர்த்தம் எடுத்து, மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமிக்கு கங்கா அபிஷேகம் செய்து வழிபட்ட பிறகே, காசி யாத்திரை முழுமை பெறும்.

    22 தீர்த்தங்கள்

    ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. ஆலயம் எதிரில் உள்ள கடல் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி, பின்பு வரிசையாக ஆலயத்தின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடவேண்டும். இப்படி செய்தால் ஒருவருடைய பல தலைமுறைகள் செய்த பாவங்கள் அகலும் என்கிறார்கள்.

    ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் வருமாறு: மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கோடி தீர்த்தம்.

    ராமருக்கு ஏற்பட்ட மூன்று தோஷங்கள்


    ராவணனிடம் குணம் தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரையும் விட உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால் தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.

    ராவணன் அசுரனாக வாழ்ந்தாலும், பிராமண குலத்தில் தோன்றியவன். ஆகையால் தான் அவனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.

    ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ராமரை ‘சாயாஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டது.

    சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு `பிரம்மஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.

    மதுரையில் இருந்து 152 கிலோமீட்டர் தூரத்தில் ராமேஸ்வரம் அமைந்து உள்ளது. 
    ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக கோவில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்புதுறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் புனித தலமாகும். மேலும் 12 ஜோதிலிங்க கோவில்களில் 11 ஜோதி லிங்கம் கோவில்கள் வட மாநிலத்தில் உள்ளது. தென் மாநிலத்தில் உள்ள ஒரே ஜோதி லிங்கம் அமைந்துள்ள தலம் ராமேசுவரம் கோவிலாகும்.

    ஆதலால்தான் இந்த கோவிலுக்கு வட மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் செல்போன், பேக் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடையும் விதிக்கப்பட்டு, அனைவரையும் மெட்டல் டிடெக்கர் கருவி மூலம் கண்காணித்து கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்து வருகின் றனர்.

    இந்த நிலையில் கோவில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்புதுறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புதுறையின் கமாண்டர் ஜெகநாதன் தலைமையில் 4 பேர் குழுவினர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    இவர்கள் ராமேசுவரம் மத்திய உளவுப்பிரிவு போலீசார் மற்றும் ராமேசுவரம் கோவில் காவல் நிலைய போலீசார் மற்றும் கோவில் பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் கோவிலின் உள்பகுதிக்கு சென்றனர்.

    அங்கு கோவில் மூன்றாம் பிரகாரம், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் 2-ம் பிரகாரம் ஆகிய பகுதிகளையும், கோவிலின் மேல்தளத்திற்கு சென்று ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களையும், கோவிலை சுற்றியுள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள், கோவில் கோட்டை சுவர் மீது இணைக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் விடுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,கோட்ட பொறியாளர் மயில் வாகணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×