என் மலர்
நீங்கள் தேடியது "மகாளய அமாவாசை"
- பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
- காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர்:
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உள்ளது.
அதன்படி இன்று மகாளய அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையில் கல்லணை கால்வாய் படித்துறையிலும் திரளான பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக்குள கரையிலும் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடியக்கரை ஆதிசேது கடலிலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மணிக்கர்ணிகை தீர்த்தத்திலும் புனித நீராடி வழிபட்டனர்.
பச்சரிசி, எள், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணிக்கர்ணிகையை தீர்த்தத்தில் இருந்து மோட்டார் மூலம் பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. அமாவாசையை ஒட்டி வேதாரண்யம் காவல்துறையினர், கடலோர காவல் நிலைய காவலர்கள், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வேதாரணயம் கோடிக்கரைக்கு பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன், கார், பஸ்களில் வந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர். இன்று அதிகாலை 6 மணிக்கு அடிவார நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் சுமார் 5 மணி நேரம் மலை பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரிக்கு செல்ல மலை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் மலை பாதைகளில் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மற்றும் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தினர். மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
- அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.
ராமேசுவரம்:
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
- மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும்.
- தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.
மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம்.
மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்–தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.
மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.
உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.
எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.
மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.
அதாவது 15 நாட்கள் பித்ருக்களை வழிபட வேண்டியதை மகாளய அமாவாசை குறிக்கிறது. பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து மகாளய அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் பித்ருக்கள் பூலோகத்தில் இருக்கும் காலமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 8- ந்தேதி மகாளயம் தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரையிலான 14 நாட்கள் பித்ருக்கள் நம்மை நெருங்கி இருக்கும் மகாளயபட்ச தினங்களாகும்.
திதி என்னவென்று தெரியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணத்தை மிகவும் சிரத்தையாக செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக செய்தாலே போதும், பித்ருக்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.
அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள். மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.
மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம். தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.
வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.
அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்.
- பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
- திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.
திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.
இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.
விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.
பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.
இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.
- இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை.
- மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையையே 'மகாளய அமாவாசை' என்று போற்றுகிறோம். பொதுவாக நாம் அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபடுவது வழக்கம். எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மூன்று அமாவாசைகள் கருதப்படுகிறது. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை' மற்றும் தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை' ஆகும்.
இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்துசேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசை என்றும், மீண்டும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்றும் நம்பப்படுகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.
நமது முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும், நமது முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அதுதவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நமது ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமை ஆகும். எனவே அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தல் வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாம் மிகவும் எளிய முறையில் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முதலில் கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை போன்ற புனித நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிப்பதாக கருதப்படும் திசையான தெற்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.
மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். வாழ்க்கை பிரகாசமாக அமையும். அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். நாம் காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.
மகாளய அமாவாசை தினத்தன்று, நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
- நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
- பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது என்பதால்தான் அவர்களுக்காக ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குகிறாரோ அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உருவகிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், சமுத்திரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மகாளயபட்சத்தில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது. பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகத் தன்மையாகும்.
மகாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் உள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ருட தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக் கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மகாளயபட்ச தர்ப்பண தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
- அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள்.
இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிட கூடாது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.
தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
நமது பித்ருகளிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
- கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர்.
- பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசு வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது.
அந்த குதிரையைத் தேடி சுமதியின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.
கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபிலமுனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும்படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 ஆயிரம் பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள்.
கேசினியின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந்தான். அவனது மகன் பகீரதன். பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால், பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே அவன் சிவபெருமானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.
அவனது தவ வலிமையை மெச்சிய சிவபெருமான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார்.
அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மாபுத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது.
கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.
அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது.
கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர்களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.
பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன.
- அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் சுலோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம் எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...
"என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன.
எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும். நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
- எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
- பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.
மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-
பொருட்கள் - பலன்கள்
அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்
துணி- ஆயுள் அதிகமாகும்
தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம்- கண்பார்வை தெளிவாகும்
அரிசி- பாவங்களை போக்கும்
நெய்- நோய்களை போக்கும்
பால்- துக்கம் நீங்கும்
தயிர்- இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி- மனக்கவலை நீங்கும்
பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்
பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்
சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.
பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.
பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.
அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.
கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.
அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.
- பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.
- சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன.
மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்.
பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.
காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.
சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.
பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.
தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசைக்கு ஏற்ற இடமாகும்.






