என் மலர்
நீங்கள் தேடியது "Rameshwaram Ramanathaswamy Temple"
- ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
- அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.
ராமேசுவரம்:
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
- தங்கத்தேர் இழுக்க ரூ.2000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
- அதிகாரப்பூர்வமாக புதிய கட்டணம் பின்னர் தெரிவிக்கப்படும்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் சுமார் 17 அடி உயரத்தில் புதிதாக தங்கத்தேர் ஒன்று செய்யப்பட்டது. இந்த தங்க தேரை இழுப்பதற்கு ரூ.2,000 திருக்கோவில் நிர்வாகத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த தங்கத்தேரை மூன்றாம் பிரகாரத்தில் இழுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாகதங்க தேர் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ராமேசுவரம் கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தங்க தேரை உடனடியாக பராமரித்து பாலிஷ் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து திருப்பணிகள் முடிந்து பாலிஷ் செய்யப்பட்ட தங்க தேரை நேற்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் புதுப்பொலிவு பெற்ற தங்கத்தேரில் பர்வதவர்த்தினி அம்பாள் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தங்கத்தேரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து தங்க தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
மூன்றாம் பிரகாரத்தின் அம்மன் சன்னதி மைய மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்த தங்கத்தேரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இழுத்தபடி மூன்றாம் பிரகாரத்தை சுற்றி நிலைக்கு வந்தது. தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை செய்தி துைற உதவி இயக்குனர் நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி, நகரசபை தலைவர் நாசர் கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ராமநாதபுரம் ராஜாநாகேந்திர சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறிய தாவது:- ராமேசுவரம் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தங்கத்தேர் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தங்கத்தேர் பராமரித்து பாலிஷ் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பக்தர்கள் இழுக்க பயன் பாட்டுக்கு கொண்டுவரப் பட்டு உள்ளது.
இதே போல் திருத்தணி மற்றும் சமயபுரத்தில் உள்ள கோவில்களில் உள்ள தேர்களும் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
ராமேசுவரம் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் தேய்மானம் குறித்து விளக்கம் கேட்டு பலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு பின்னர் தான் தங்கம் மற்றும் வெள்ளி குறைவதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவிலுக்கு சொந்தமான பொருட்களில் யார் தவறு செய்து இருந்தாலும் கண்டிப்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தங்கத்தேர் இழுக்க ரூ.2000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க ஆலோசனை நடத்தி அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக புதிய கட்டணம் தெரிவிக்கப்படும். கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எதிரே பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் நிரந்தரமாக அகற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
- கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்க ளில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று ஐதீகம் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இன்று கார்த்திகை மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.
- இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாக விளங்கி வருகிறது.
- கோவிலின் மேல்தள பகுதிக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாக விளங்கி வருகிறது.
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் செல்போன், கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவிலின் மேல்தள பகுதிக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் தெற்கு கோபுர வாசலின் வளாகத்தில் இருந்து கோவிலின் மேல் தளத்திற்கு செல்லும் பாதையில் தடுப்பு கம்பிகள் மற்றும் கதவுகள் எதுவும் இல்லாததால் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கோவிலின் மேல்தளத்திற்கு சென்று செல்போனில் செல்பி எடுத்து விளையாடினர்.
மேல்தளத்தில் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் சர்வ சாதாரணமாக ஏராளமான பக்தர்கள் கோவிலின் விமானம் மற்றும் கோபுரங்கள் உள்ள பகுதிக்கு சென்று செல்பி எடுத்து கொண்டிருந்தது கோவிலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. உடனடியாக தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலின் மேல்தளத்திற்கு பக்தர்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுபோல் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலின் மேல் தளத்திற்கு சென்று செல்பி எடுத்தபடி வேடிக்கை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- பக்தர்கள் செல்போன், கேமரா பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்தே ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன், கேமரா பொருட்கள் கொண்டு செல்ல தடை அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கூடுதலாக சோதனை செய்யப்பட்டது.
குறிப்பாக செல்போன்களுடன் வந்த பக்தர்களிடம் செல்போனை கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் லாக்கரில் வைத்துவிட்டு வர வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி பக்தர்களை திருப்பி அனுப்பினர். போலீசாரின் அறிவுரை ஏற்று செல்போனுடன் வந்த ஏராளமான பக்தர்கள் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலில் தரிசனம் செய்து சென்றனர்.
- நாளை தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை.
- நாளை அதிகாலை 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. காலை 4.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்று தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 7 மணிக்கு ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பக்தர்களுக்கு படி அளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவிலில் இருந்து எழுந்தருளும் சுவாமி-அம்பாள் வர்த்தகன் தெரு, நடுத்தெரு, ராமதீர்த்தம், லட்சுமணத்தீர்த்தம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
சுவாமிஅம்பாள் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது.
- சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
காலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதர்த்தினிஅம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
கோவிலில் இருந்து எழுந்தருளிய சுவாமி-அம்பாள் தெற்கு ரத வீதி, மேற்குரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக ராமதீர்த்தம், லட்சுமணதீர்த்தம் வரை ஊர்வலமாக வந்து அங்கிருந்து வர்த்தகன் தெரு, மார்க்கெட் தெரு, நகரின் பல முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சுவாமி-அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சாமி-அம்பாள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்கு நேரில் வந்து படி அளப்பதாக கூறப்படுகின்றது. அதுபோல் நேற்று சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து எழுந்தருளிய நிகழ்ச்சியை தொடர்ந்து 7 மணி முதல் 12.30 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 6-ந்தேதி நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.
- நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா திருவிழா கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டின் திருவாதிரை ஆருத்ரா திருவிழா நேற்று முன்தினம் இரவு நடராஜருக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ஆருத்ரா திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று ருத்ராட்ச மண்டபத்தில் வீற்றிருந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. அதுபோல் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் வைத்து மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், திரவியம், மஞ்சப்பொடி, இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
- ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- அன்னதான திட்டத்தில் தூய்மை பணியாளர்கள்தான் உணவு பரிமாறி வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பிரகாரங்களில் பல்வேறு பாதைகளில் தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய சென்றுவர முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகர் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி சன்னிதி பிரகாரங்களில் பக்தர்கள் சுற்றிவர முடியாத அளவுக்கு தடுப்பு கம்பிகளை வைத்து பாதைகள் மறைக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன பாதையிலும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் செல்ல முடியாத அளவுக்கு கட்டண தரிசன பாதையாக மாற்றி அமைப்பது மட்டுமல்லாமல் ஆகம விதிமுறைகளை மீறி கோவில் மூடப்பட்ட பின்பும் கோவில் பணியாளர்களை வைத்து கோவிலுக்குள் வேலை பார்க்கும் செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கோவிலில் நடைபெற்று வரும் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு தூய்மை பணியாளர்கள்தான் சீருடை அணிந்து அன்னதான உணவு பரிமாறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் உள்ளூரை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து கோவில் துணை ஆணையரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே ராமேசுவரம் கோவில் பிரகாரங்களில் பக்தர்கள் செல்ல முடியாத அளவுக்கு மூடப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றுவதற்கும், உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தவும், அன்னதானத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாற தனியாக கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், மேலும், ராமேசுவரம் கோவில் துணை ஆணையரை இடமாற்றம் செய்யவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நாளை அக்னிதீர்த்த கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அமாவாசை அன்று, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.
தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாசையையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தை மறைத்து வைத்துள்ளனர்.
- பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் காசிக்கு நிகராகவும் கருதப்படுவது ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே பக்தர்கள் பல சன்னதிகளுக்கு சென்று நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு கோவிலின் பிரகாரங்களில் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தற்போது பக்தர்கள் கிழக்கு வாசல் சாமி சன்னதி வழியாக செல்ல கோவில் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 மற்றும் ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்லும் பக்தர்கள் மட்டுமே கிழக்கு வாசலின் சாமி சன்னதி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமி சன்னதி வழியாக அனுமதிக்கப்படாமல் அம்மன் சன்னதி வாசல் வழியாக தடுப்பு கம்பிகள் அமைத்து அதன் வழியாக வரிசையில் செல்கிறார்கள். இதனால் கூடுதல் நேரம் கோவிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மூன்றாம் பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம், சாமி சன்னதி பிரகாரம் வரை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் வழியாக முதல் பிரகாரம் சென்று அதன் பின்னர் இலவச தரிசன பாதையில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பொதுவாக ஆகம விதிமுறைபடி சிவன் கோவிலில் முதலில் சாமியை தரிசனம் செய்து விட்டு தான் பக்தர்கள் அம்பாளை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே வெளியே வரவேண்டும் என்பது ஆகம விதிமுறை.
ஆனால் ராமேசுவரம் கோவிலிலோ ஆகம விதிமுறைகளை மீறி பக்தர்களை சாமி சன்னதி வாசல் வழியாக அனுமதிக்காமல் அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே கோவில் நிர்வாகம் அனுமதித்து வருவதோடு மட்டுமல்லாமல் மூன்றாம் பிரகாரத்தின் குறுக்கே மைய பகுதி மற்றும் அம்மன் சன்னதி உள்பகுதி வாசல் அருகே என கோவிலின் உள்ளே பல இடங்களில் தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தையும் மறைத்து வைத்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல் பக்தர்கள் காசி விஸ்வநாதர், முருகன் சன்னதி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்தையும் சுற்றிவர முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயல் பக்தர்களை வேதனைக்குள்ளாக்கிறது. எனவே தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதையும் மூடப்பட்டதால் பக்தர்கள் பல்வேறு சன்னதிகளில் தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றவும், உள்ளூர் பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் வருகின்ற 31-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன், நகராட்சி சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி தலைமையில் மக்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ராமேசுவரம் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, அப்துல் ஜபார், கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டாண்டு காலமாக ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள வாசல் வழியாகவே சென்று கட்டணம் செலுத்தாமல் தரிசனம் செய்து வருகிறோம். தற்போது பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை பார்வையிட்டனர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோபு கூறியதாவது, ராமேசுவரம் கோவிலில் உள்ள உள்ளூர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவிலின் பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்படும். அது போல் உள்ளூர் பக்தர்கள் வழக்கமான விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள பாதை வழியாகவே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல் தரிசனம் செய்ய வசதியாக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். இதனால் வருகின்ற 31-ந் தேதி நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிடுவதாக மக்கள் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர்.






