search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய அனுமதி
    X

    ராமேசுவரம் கோவிலில் தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய அனுமதி

    • கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதையும் மூடப்பட்டதால் பக்தர்கள் பல்வேறு சன்னதிகளில் தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றவும், உள்ளூர் பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் வருகின்ற 31-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன், நகராட்சி சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி தலைமையில் மக்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ராமேசுவரம் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, அப்துல் ஜபார், கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்டாண்டு காலமாக ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள வாசல் வழியாகவே சென்று கட்டணம் செலுத்தாமல் தரிசனம் செய்து வருகிறோம். தற்போது பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இதையடுத்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை பார்வையிட்டனர்.

    பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோபு கூறியதாவது, ராமேசுவரம் கோவிலில் உள்ள உள்ளூர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவிலின் பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்படும். அது போல் உள்ளூர் பக்தர்கள் வழக்கமான விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள பாதை வழியாகவே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல் தரிசனம் செய்ய வசதியாக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். இதனால் வருகின்ற 31-ந் தேதி நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிடுவதாக மக்கள் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×