என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி"

    • கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது.
    • 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.

    தல வரலாறு

    முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டச்சாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து உதவினர் என்கிறது புராண நூல்கள்.

    இதன் மூலம், விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.

    இங்கு ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ேஹமாம்புஜவல்லி தாயாருக்கு செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார் பெருமாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருமாலின் திருத்தலங்களில், இக்கோவிலில் தான் நரசிம்மர், சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

    700 ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர், திருவந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.

    இப்பெருமாளை 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். பெரிய திருவடியாகிய கருடாழ்வார் இத்தலத்தில் கையைக் கட்டிக்கொண்டு சேவக பாவத்தில் காட்சி தருகின்றார்.

    • ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.
    • உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம்.

    இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை. அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1-வது, 5-வது சனிக்கிழமையில் போடுவாங்க. பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    புரட்டாசி சனியன்று 'ஓம் நாராயணாய நம' என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

    ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

    கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

    • புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது.
    • பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.

    குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகாலட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று மாவிளக்கு ஏற்றி மகா விஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?

    சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று காலை வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இந்த வழிபாடுகள் துவங்கும். பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.

    அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமாளின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    மாலை சுமார் 5 மணியளவில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.

    • புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
    • செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

    நாளை (அக்டோபர் 4-ந்தேதி) புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.

    "உப" என்றால் "சமீபம்" என்று பொருள். "வாசம்" என்றால் "வசிப்பது" என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.

    பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற் கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். 

    • பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை பைக்குகள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, அரசு பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

    கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாகனங்கள் எந்த வழியாக சென்று வாகன நிறுத்தங்களை அடையாளம் என தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் முடிந்த அளவு அரசு பஸ்களில் திருப்பதி மலைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்ரோவுடன் இணைந்து மேக் எ கால் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 300 போலீசார் வரைய வைக்கப்பட்டுள்ளனர்.

    அவசர உதவி தேவைப்படும் பக்தர்கள் போலீசாரையோ அல்லது தேவஸ்தான அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளலாம்.

    முடியாத பட்சத்தில் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும்.
    • பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டி சாலக்கரை இலுப்பை தோப்பில் மொட்டை அடிக்கும் கூடாரத்தில் திரண்டு மொட்டை அடித்து சென்றனர். சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.
    • வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள்.

    ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற் கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வார்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி. அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களை பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றை கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான். திரிபுரங்களுக்கு அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

    அவர்களை ரட்சிக்க திருவுளம் கொண்ட பிள்ளையார் அசுரன் மீது போர் தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவகணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றில் கலந்தான். அப்படி அவன் பீடுபேறடைந்த திருநாள் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினமாகும்.

    அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்த புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல் இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாைல பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன் விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.

    • திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் நம் வறுமைகள் நீங்கும்.
    • தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இது.

    ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் நம் வறுமைகள் நீங்கும். வாழ்கைக வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து  லட்சுமி ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    மேலும் தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகியயாவையும் நீங்கி புது நம்பிக்கை பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    • திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது.
    • கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது. ஆம்... விழாவில் 5-ம் நாளன்று நடைபெறும் மோகினி அலங்கார சேவையும், கருடசேவையும் மிக பிரசித்தி பெற்றது. அன்று காலை மலையப்பசாமி, மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு, வண்ணமயமான வஸ்திரங்கள் அணிந்து, மலர்கள் சூடி, ஜொலிக்கும் நகைகள் அணிந்து மைசூரு மகாராணி அளித்த பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கருடசேவையின்போது, தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூலவிக்ரகமூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி மகரகண்டி, லட்சுமிஹாரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதேபோல, கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. இக்குடைகள் சென்னையில் இருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அந்த திருக்குடைகள் ஏழுமலையானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

    மோகினி அலங்காரமும், கருடசேவையும் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.

    • பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
    • 5-வது நாள் காலை மோகினி அவதார உற்சவம்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.

    சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.

    பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.

    2-வது நாள்: காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.

    3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.

    4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.

    மோகினி அவதாரம்-கருட சேவை

    5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.

    6-வது நாள்: காலை- 'சிறிய திருவடி' என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.

    தேரோட்டம்

    8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.

    9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும்.

    பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.

    பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

    பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.

    திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல.
    • ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல... திருமலையே திருமால். திருமாலே திருமலை. எனவே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வாழ்வில் 'திருப்பம்' தரும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அவரை தரிசித்தால் திருப்பம் மட்டுமல்ல... வேங்கடவன் பேரருளுடன் வற்றாத செல்வமும் வந்து சேரும் என்கிறார்கள்.

    "ஏழுமலை வாசா... வேங்கடரமணா... கோவிந்தா... கோவிந்தா..!" என்ற பக்தர்களின் பக்தி கோஷம் திருமலையில் மட்டுமல்ல.. நாடெங்கும் எதிரொலிக்கும்.

    • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
    • கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன.

    புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

    கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன. அதன்பிறகு 2023-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. அதன்படி 2026-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது.

    ×