என் மலர்
நீங்கள் தேடியது "புரட்டாசி மாதம்"
- கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது.
- 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.
தல வரலாறு
முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டச்சாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து உதவினர் என்கிறது புராண நூல்கள்.
இதன் மூலம், விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.
இங்கு ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ேஹமாம்புஜவல்லி தாயாருக்கு செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார் பெருமாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.
திருமாலின் திருத்தலங்களில், இக்கோவிலில் தான் நரசிம்மர், சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
700 ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர், திருவந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.
இப்பெருமாளை 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். பெரிய திருவடியாகிய கருடாழ்வார் இத்தலத்தில் கையைக் கட்டிக்கொண்டு சேவக பாவத்தில் காட்சி தருகின்றார்.
- சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.
- வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள்.
ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற் கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வார்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி. அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களை பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றை கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான். திரிபுரங்களுக்கு அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்க திருவுளம் கொண்ட பிள்ளையார் அசுரன் மீது போர் தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவகணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றில் கலந்தான். அப்படி அவன் பீடுபேறடைந்த திருநாள் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினமாகும்.
அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்த புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல் இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாைல பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன் விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.
- கடன் பிரச்சினைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
- விநாயகரையும் வழிபட வேண்டும்.
புரட்டாசியில் கடைபிடிக்க வேண்டிய பல வழிபாடுகள் உண்டு. அவைகளில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.
சித்தி விநாயக விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந் நாளில் உடல் - உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.
அன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும், சர்க்கரை பொங்கலும் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இதனால் காரிய தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும். கடன் பிரச்சினைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
தூர்வாஷ்டமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாட்களில் வடக்கு நோக்கி படர்ந்திருந்து நன்கு வெண்மை படர்ந்த அருகம் புற்களை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
ஞான கவுரியை வழிபடுவோம்
கவுரி என்ற திருநாமம் அம்பாளை குறிப்பது. கிரிகுலங்களின் அரசியான தேவியை கவுரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீகவுரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களை வழிபடுவதற்கு சமமாகும். வீட்டில் ஸ்ரீகவுரி தேவியை வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னி பெண்கள் கவுரி தேவியை வழிபடுவதால் அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான்.
கவுரி தேவியை சோடச கவுரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள். ஞான கவுரி, அமிர்த கவுரி, சுமித்ர கவுரி, சம்பத் கவுரி, யோக கவுரி, வஜ்ர சருங்கல கவுரி, த்ரைலோக்கிய மோஹன கவுரி, சுயம்வர கவுரி, கஜ கவுரி,கீர்த்தி கவுரி, சத்யவீர கவுரி, வரதான கவுரி, ஐஸ்வரிய கவுரி, ஐஸ்வரிய மகா கவுரி, சாம்ராஜ்ய மகா கவுரி, அசோக கவுரி, விஸ்வ புஜா மகா கவுரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன.
இந்த தேவியரில் ஸ்ரீஞான கவுரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால் தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்த படி வெற்றி பெறும். வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர் பிறை பிரதமையில் வழிபடுவார்கள். நாமும் புரட்டாசியில் இந்த அம்பிகையை வழிபட்டு அளவிலா ஞானமும், செல்வமும் பெற்று மகிழ்வோம்.
நவகிரக நாயகியாக திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல் சந்திர மண்டலத்தில் அமிர்த கவுரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கவுரியாகவும்,புதன் மண்டலத்தில் ஸ்வர்ண கவுரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கவுரியாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கவுரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசுவர கவுரியாகவும் திகழ்கிறாளாம்.
அவ்வகையில் குரு மண்டலத்தில் அன்னை ஞான கவுரியாக அருள் பாலிக்கிறாள். ஆகவே இந்த தேவியை தினமும் வழிபட்டு வந்தால் ஞானத்தையும், திருமணப் பேற்றையும்,நல்வாழ்வையும் தருவாள்.
- பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
- திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.
திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.
இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.
விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.
பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.
இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.
- சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர்.
- ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை அருகே பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
குரும்புக்கோட்டை மன்னன் பட்டம் என்ற பெயர் கொண்ட 2-ம் குலோத்துங்கன் திருவ நகரத்தில் பெண் எடுக்க சென்றபோது இருவேளையும் திருஅரங்கனை தரிசித்த திருமண பெண்ணுக்கு திருமணத்துக்கு பின் அப்பெருமானை தரிசிப்பது எப்படி? என பெண் வீட்டார்கள் கேட்க, குலோத்துங்கனும் கவலை வேண்டாம் ஸ்ரீரங்கரைப் போல அதே மாதிரி கோவிலை அதிகாபுரியில் நிறுவிய பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
அதன்படி காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் இடையே அரங்கன் இருப்பதுபோல திருவதிகையில் கருடன் நதி-தென்பெண்ணையாற்றின் நடுவில் அதிகாபுரியில் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு 2-ம் குலோத்துங்கனின் திருமணம் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
அரங்கன் ஆலயம் தோன்றுவதற்கு முன்பு இந்த இடத்தில் அய்யனார் சிலை இருந்ததாகவும், அவர் காவல் தெய்வமாக வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகாமண்டபத்தின் முகப்பில் அய்யனார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது. மூலவர் ஸ்ரீரங்கன் வார்த்தைகளால் எட்டமுடியாத நெடுமால் இங்கே பாம்பணையில் பள்ளிகொண்டவந்தாய் அனந்தசயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் அருள் பாலிக்கிறார்.
சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்த கோவிலில் உள்ள தாயார் அரங்கநாயகி, அமிர்தவல்லி, அதிகவல்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மூலவர் சிலை 8 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக அஷ்டோத்திரம் அர்ச்சனை செய்தல், புது மலர்கள் சாத்துதல், வஸ்திரங்கள் சாத்துதல், பால் பாயாசம் அமுது செய்தல் போன்றவற்றை செய்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள ஆண்டாள் பல்லவர் கால படைப்பு சத்திரமாய் காட்சி அளிக்கிறார். ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன. இங்கு மூலவர், உற்சவ மூர்த்திகளாய் ராமர் எழுந்தருளியுள்ளார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மரும் அருள் புரிகின்றனர். கோவிலின் எதிரே திருக்குளமும், அனுமார் சன்னதியும் உள்ளன. மாதாந்திர திருக்கார்த்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் போது மூலவருக்கு அவதார நட்சத்திரம் திருமஞ்சனம் நடைபெறும்.
குழந்தை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீரங்கநாயகியிடம் சகஸ்ர நாம அர்ச்சனையும், பால் பாயசமும் அமுது படைப்பதாய் வேண்டி அவ்வாறே குழந்தை பேறு பெற்றதுடன் தங்கள் நேர்த்தி கடனை செய்கின்றனர். புது வஸ்திரமும் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரும், ஆறாவமுதம் பொதிந்த கோவில் என்று சிறப்பு பெற்றது இந்த கோவில்.
தினமும் காலை 7 மணி முதல் 11.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
- புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
- முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11-ந்தேதிகளில் 4 புரட்டாசி சனி வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. என்றாலும் பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளய பட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும். இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்ந்து, புரட்டாசியில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால் உரிய பலன்களை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.
புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
- ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
- அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராயபுரம்:
புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த இந்த மற்றும் முழுவதும் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரி யவகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இதனால் மீன்விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காசிமேடு மீன்மார்க் கெட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
பெரிய இறால் - ரூ. 300.
இதேபோல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகம் தான். அடுத்த மாதம் முழுவதும் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. அதைசமாளித்து தான் ஆக வேண்டும்.விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. என்றார்.
- ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
- திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
- புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
- இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
- புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
- சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.
- படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
- பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில்.
இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார்.
இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.
ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.
சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது.
போனாலும் பூஜை முறையும் தெரியாது.
தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.
ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது.
பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.
பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.
படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.
எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.
பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.
பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார்.
அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார்.
அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார்.
அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.
பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார்.
அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.
இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.






