என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar"

    • உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
    • விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

    தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

    'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

    இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.

    இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.



    விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.

    ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.

    உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை

    * சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.

    * விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

    • சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது.
    • உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள். இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.

    கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன் - அவர் பரமயோகி - தன் இல்லத்தையும், மனைவி பார்வதியையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும், தாய்மைக்கான ஏக்கமும் அதிகரித்ததால் அவள் அசாதாரண படி ஒன்றை எடுக்கிறாள். தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை சேகரித்தாள். தனது தோலின் அம்சங்களை கொண்டிருந்த அந்த சந்தனத்தை மண்ணுடன் கலந்தாள், அதை ஒரு பிள்ளை வடிவத்தில் பிடித்து வைத்தாள். அவள் வடித்த இந்த உருவத்திற்கு உயிர் ஊட்டினாள்.

    சிவன் பல வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார். தன் தாய்க்கு காவலாக வாசலில் ஒரு பாலகன் நின்று கொண்டிருந்தான். இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. கோபத்தில் சிவன் பாலகனின் தலையை துண்டித்துவிடுகிறார். பார்வதியின் துக்கமும் ஆத்திரமும் தீவிரமாக இருந்தது. இந்த துன்பத்தை சரிசெய்ய நினைக்கிறார் சிவன். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் கணங்கள், அந்த கணங்களின் தலைவரான ஒருவரின் தலையை எடுத்து பாலகனின் தலைக்கு பதிலாக மாற்றிவைத்தார் சிவன்.

    சிவ கணங்கள் - அவர்கள் விசித்திரமான வேற்றுகிரக வாசிகள் - இவர்களின் உடல் அமைப்பு மனிதர்களைப் போல் அல்லாமல் எலும்புகளற்ற கைகள் கொண்டவர்களாக கூறப்படுகிறார்கள். இதுவே ஓவியர்கள் விநாயகரை தும்பிக்கை கொண்டவராக, ஆனைமுகத்தானாக சித்தரிக்க காரணமானது. ஆனாலும், இன்றும் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு பக்திப் பாடலும், அவரை கணபதி என்றுதான் சொல்கிறதே தவிர, கஜபதி என்று அல்ல.

    விநாயகர் தோன்றியது இப்படித்தான்: பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார் - புத்திசாலித்தனம், உயிர்மூலம் ஆகியவற்றின் அறிகுறி ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.

    விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும். அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை - இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது - உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.

    இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள். அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது - சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன - உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.

    விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல. அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது - அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.

    பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது - சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.

    மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது. உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் - எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.

    இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் - தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
    • பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக நடிகர் நடிகைகள் பலர் தங்களது வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.

    பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது. நடிகர், நடிகைகள் பலர் பூஜை செய்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

    நடிகை ஹன்சிகா நேற்று மும்பை வீதிகளில் விநாயகர் சிலையை புதிதாக வாங்கி காரில் எடுத்துச் சென்றார்.

    நடிகை ரகுல் பிரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னாணியுடன் இன்று காலை விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.

    இதுபோன்று ஷ்ரத்தா கபூர், கத்ரீனா கைப் ஆகியோர் விநாயகர் சிலை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

    நடிகை ராதா இன்று காலை அவரது வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.

    தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.

    சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.

    சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.

    • அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.

    இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 



    • வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.

    சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    • பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    • 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு.
    • அருகம்புல் அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

    பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக் கம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு: -

    1) முல்லை-அறம், 2) கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், 3) வில்வம்-இன்பம்; விரும்பியவை அனைத்தும், 4) அருகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும், 5) இலந்தை - கல்வி, 6) ஊமத்தை - பெருந்தன்மை, 7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள், 8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு, 9) கண்டங்கத்திரி - வீரம், 10) அரளி-வெற்றி.

    11) எருக்கம் கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு, 12) மருதம் - குழந்தை பேறு, 13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு, 14) மாதுளை- பெரும்புகழ், 15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம், 16) மருவு - இல்லறசுகம், 17) அரசு - உயர் பதவி, மதிப்பு, 18) ஜாதி மல்லிகை -சொந்த வீடு, பூமி பாக்கியம், 19) தாழம் இலை - செல்வச்செழிப்பு, 20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை, 21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்.

    இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவையால் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை பிடித்தமானது.

    • விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.
    • விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.

    காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்...

    விநாயகரை வழிபடும் முறைக்கு 'காணாபத்யம்' என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர், ஆதிசங்கரர்.

    விநாயகர் ஒரு கொம்பு, இரண்டு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள், ஆறெழுத்துகள் உடையவர்.

    விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. தும்பிக்கையில் தண்ணீர் குடம் தாங்கியும், பின் இரண்டு கரங்களில் அங்குசம், பாசம் ஏந்தியும், முன் வலது கரத்தில் தந்தம், முன் இடது கரத்தில் மோகமும் வைத்திருப்பார்.

    அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கி இருப்பதை, அவருடைய மத்தள வயிறு வெளிப்படுத்துகிறது.

    விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபடுவதே சிறப்பு.

    மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் எழுதினார்.

    விநாயகருக்கு மூஷிகம் (எலி) வாகனத்தைத் தவிர, மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளன.

    வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் கொண்டு பூஜிப்பதோடு, கணபதி ஹோமம் செய்து வந்தால் நீண்ட ஆயுளும், செல்வமும் வந்துசேரும்.

    'ஓம் ஹம் கணபதியே நமஹ' என்ற விநாயகர் மந்திரத்தை, காலையும், மாலையும் 108 முறை சொல்லி வந்தால், சகல நன்மைகளும் உண்டாகும்.

    பஞ்சபூதத்தோடு தொடர்புடையவராகவும் விநாயகர் இருக்கிறார். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவமாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆலய மரத்தடியில் மண் வடிவமாகவும், வன்னி மரத்தடியில் நெருப்பு வடிவமாகவும் விளங்குகிறார்.

    விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார்.

    விநாயகரின் உருவத்தில் அனைத்து கடவுள்களும் வாசம் செய்கின்றனர். நாபி (தொப்புள்)- பிரம்மதேவர், முகம்- விஷ்ணு, கண்- சிவன், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம்- சூரியன் உள்ளனர்.

    விநாயகப் பெருமான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் அருள்கிறார். இச்சா சக்தி என்பது ஆசையையும், கிரியா சக்தி என்பது செயலையும், ஞான சக்தி என்பது அறிவையும் குறிக்கும்.

    சந்தனம், களிமண், சாணம், மஞ்சள் போன்ற எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு விநாயகரை செய்து வழிபட்டால் அனைத்துவித நலன்களும் கிடைக்கும்.

    விநாயகருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும் விட தேங்காய் எண்ணெய் காப்புதான் பிரியமானது.

    'விநாயகர்' என்ற சொல்லுக்கு 'இவரை விட மேலானவர் இல்லை' என்று பொருள்.

    விநாயகருக்கும், சனி பகவானுக்கும் பிரியமானது, வன்னி மரம். இந்த மரத்தின் இலைகளால் விநாயகரை பூஜித்து வழிபட்டால் சனி பகவான் தோஷம் நம்மை நெருங்காது.

    • சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும்.
    • திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும்.

    மூல முழு முதற் கடவுளான கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார். எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும் பூஜிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சிவ பெருமானுக்கு உரிய விரதங்களில் பிரதோஷ விரதம் எப்படி உயர்வானதாக கருதப்படுகிறதோ, அதே போல் விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். 'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

    விநாயகரை போலவே விரதங்களில் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும். பின் வெள்ளெருக்கன் பூவை மாலையாக கோர்க்க வேண்டும். அம்மாலையில் உள்ள பூக்கள் 1008 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு கோர்க்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து அவரை வணங்க வேண்டும்.

    மேலும் இன்று விநாயகருக்கு நெய்வேத்தியமாக மோதகத்தை படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பண கஷ்டம், மன கஷ்டம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும். கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.

    சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.

    • பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
    • திருமண தடை அகலும்.

    விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர தினமான இன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

    ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

    ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

    மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

    அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

    சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

    ×