என் மலர்
நீங்கள் தேடியது "விநாயகர் வழிபாடு"
- உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
- விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.
இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.

விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.
ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.
உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.
- திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
- பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக நடிகர் நடிகைகள் பலர் தங்களது வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது. நடிகர், நடிகைகள் பலர் பூஜை செய்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஹன்சிகா நேற்று மும்பை வீதிகளில் விநாயகர் சிலையை புதிதாக வாங்கி காரில் எடுத்துச் சென்றார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னாணியுடன் இன்று காலை விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதுபோன்று ஷ்ரத்தா கபூர், கத்ரீனா கைப் ஆகியோர் விநாயகர் சிலை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நடிகை ராதா இன்று காலை அவரது வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.
- வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.
சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
- அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும்.
- கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்கு தேவையானபொருள்
வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்டமனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.
பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-
1) முல்லை- அறம்
2) கரிசலாங்கண்ணி- இல்வாழ்க்கைக்குத் தேவையானபொருள்
3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும்
4) அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும்
5) இலந்தை -கல்வி
6) ஊமத்தை - பெருந்தன்மை
7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்
8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு
9) கண்டங்கத்திரி - வீரம்
10) அரளி- வெற்றி
11) எருக்களம்- கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு
12) மருதம் - குழந்தைப்பேறு
13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு
14) மாதுளை- பெரும்புகழ்
15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம்
16) மருவு - இல்லற சுகம்
17) அரசு - உயர் பதவி, மதிப்பு
18) ஜாதி மல்லிகை - சொந்த வீடு, பூமி பாக்கியம்
19) தாழம் இலை - செல்வச்செழிப்பு
20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை
21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும். மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது.
- விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
- சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.
விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.
`சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
`அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!'
- தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி.
- சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம்.
கல்வியை வழங்கும் தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி ஆவார். உலகில் உள்ள பெரிய புத்தகமாக மகாபாரதத்தை தம் கைப்பட எழுதி பெருமை சேர்த்தவர். அவர் அனேக அன்பர்களுக்கு ஞானத்தை போதிக்கும் குருபிரானாக இருப்பதை காண்கிறோம். தமிழ் வேதமான திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிக்கு அவர் ஆசிரியனாக இருந்து கல்வி கற்பித்ததை அவருடைய வரலாறு கூறுகிறது. சில தலங்களில் அவருக்குப் பள்ளிக்கூட விநாயகர் என்ற பெயரும் வழங்குகிறது.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் வாழ்ந்து வீடுபேறு பெற்றதால், திருச்செங்காட்டாங்குடி. அதற்கும் அதன் அருகிலுள்ள தலமான மருகலுக்கும் இடையே சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம் உள்ளது. அந்த இடத்தில் இப்போது விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அது பள்ளிக்கூட பிள்ளையார் கோவில் என வழங்குகிறது.
ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை தலத்தில் பூஜித்து வந்த அந்தணர்கள், குழந்தைகளுக்கு வேத ஆகமங்களைப் பயிற்றுவிக்க நல்ல குருமாரைத் தேடி வந்த அவர்களின் பெருமைகளை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் தானே வயோதிக ஆசிரியனாகத் தோன்றினார்.
அத்தலத்து சிறார்களுக்கு அவர் உயர்ந்த பாடங்களை நடத்தி ஞானமூட்டினார். அப்படி அவர் வீற்றிருந்து பள்ளிக்கூடம் நடத்திய இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பள்ளிக்கூடப் பிள்ளையார் என்றே பெயர் பெற்றது. இப்படி தமிழக மெங்கும் பல ஊர்களில் பள்ளிக்கூடப் பிள்ளையார் எனும் பெயரில் பல விநாயகர் ஆலயங்கள் இருந்து வந்துள்ளன.
விநாயகரின் அகன்ற காதுகள் நிறைய விஷயங்களை விடாமல் கேட்க வேண்டும் என்பதையும் துதிக்கையால் மூடியவாய் அதிகமாகப் பேசாமல் ஞானத்தைச் சிந்திக்க வேண்டும் என்பதையும், அவரது உடைந்த கொம்பு எழுதும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு நல்ல விஷயங்களைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதையும், கையிலுள்ள மோதகம் எப்போது அறிவில் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகக் கூறுவர். அவர் கையிலுள்ள பாச, அங்குசம் மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி அடக்கி ஒருமுக சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த மனஅடக்கம் ஒருமுக சிந்தனை எழுதும் ஆற்றல், ஆசிரியர்கள் சொல்வதை ஒன்றுவிடாமல் கேட்டுக் கொள்ளுதல், நன்கு சிந்தித்தல் எப்போது அறிவைத் தேடுவதில் கவனம் கொள்ளுதல் ஆகியவை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் தேவையான குணங்களாகும். அவற்றை நினைவூட்டலே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அவர் வீற்றிருந்து அவர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
- 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது.
- அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்.
விநாயகர் சதுர்த்தி அல்லது சங்ககடஹர சதுர்த்து அல்லது சதுர்த்தி திதி அன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. 21 பதிரங்களைத் தெரிந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பதிரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
8. நாயுருவி இலை: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்திரி இலை: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.
12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.
14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
17. அரச இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
20. அகத்தி இலை: கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.
- தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார்.
- சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.
விஷ்ணு பகவான் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று தான் சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு பகவான் வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.
அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றுவிட்டார். இதனால் விஷ்ணு பகவான் மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு பகவான், சிவபெருமானை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.
இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கர படைப்பை விஷ்ணு பகவானுவுக்கு கொடுத்தார். விஷ்ணு பகவான் சுதர்சனசக்கரத்தை வாங்கிக்கொண்டு வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணு பகவானின் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.
அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு பகவான், தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சன சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசிபெற்றார் விஷ்ணு பகவான். (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சிபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.
- பிள்ளையாருக்கு ‘விக்னகர்த்தா’ என்ற பெயரும் உண்டு.
- `விக்னம்’ என்பதற்கு ‘இடையூறு’ என்று பொருள்.
விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை. 'விக்னம்' என்பதற்கு 'இடையூறு' என்று பொருள். இந்த இடையூறுகளை நீக்குவதற்கு, விநாயகர் வழிபாடு முக்கியமான ஒன்று.

எந்த காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது, இந்து சமயம் சொல்லும் ஆகம விதி. பிள்ளையாருக்கு 'விக்னகர்த்தா' (விக்னங்களை உண்டாக்குபவர்), 'விக்னேஸ்வரன்' (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு.
நாம் ஒரு காரியத்தை தொடங்கும் போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைப்போம். அந்த நினைப்பை வணங்குதலாக, விநாயகரை நோக்கி வைக்க வேண்டும். விநாயகரை வழிபடாது தொடங்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படும் என்பதை பல புராணக் கதைகள் நமக்கு சொல்கின்றன.
வள்ளியை மணம் முடிக்கச் சென்ற முருகப்பெருமான் கதை நம்மில் பலருக்கும் தெரியும். வள்ளியை மணம் முடிக்கும் அவசரத்தில், அவர் தன் அண்ணனான விநாயகரை வணங்காமல் சென்று விட்டார். வள்ளியை மணம் முடிக்க அவர் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக என்று பல உருவங்கள் எடுத்தும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
அப்போது நாரதரின் மூலமாக தன் அண்ணனை வழிபடாமல் வந்த விஷயம் தெரியவர, உடனடியாக விநாயகரை நினைத்து வழிபட்டார் முருகப் பெருமான். அப்போது யானை வடிவில் வந்த விநாயகர், முருகப்பெருமானையும், வள்ளியையும் சேர்த்து வைத்தார்.
இதேபோல ஒவ்வொரு கடவுளரும், விநாயகரை வணங்க மறந்த போதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதை நமது புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

விநாயகரை திருப்திப்படுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் மட்டுமே போதுமானது. இவற்றைக் கொண்டு விநாயகரை நினைத்து, தலையில் குட்டிக்கொண்டு 'சுக்லாம் பரதரம்..' என்ற சுலோகத்தை சொல்லி வழிபட்டால், அவர் உடனடியாக நம்மை தேடி வந்து நன்மைகளைச் செய்வார்.
- மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும்.
- விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.
ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.
அந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், 'பெற்றோரை சுற்றி வந்தால், உலகத்தைச் சுற்றியதற்கு சமம்' என்று கூறி, பழத்தைப் பெற்றுக்கொண்டார், விநாயகர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில், கனியை கையில் ஏந்தியிருக்கும் விநாயகரை நாம் தரிசிக்க முடியும்.
இந்த விநாயகரை வழிபட்டால், மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற நினைப்பவர்கள், இந்த விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

வாழ்வை வளமாக்கும் அரச மரம்
எத்தனை மரங்கள் இருந்தாலும், 'மரங்களின் அரசன்' என்று போற்றப்படுவது அரசமரம் தான். இந்த மரத்தில் மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்வதாக சொல்கிறார்கள். இந்த மரத்தை 'தேவலோகத்து மரம்' என்றும் வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள் நமக்குக் கிடைக்கும்.
அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரச மரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால், ஆயுள் வளரும்; ஆரோக்கியம் சீராகும்.
அரச இலைகளின் சல சலப்பு ஆலய மணி போல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப்பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும்.
- வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
- விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சந்திரனின் நான்காவது திதியை சதுர்த்தி என்றும், பவுர்ணமிக்குப் பிறகு குறைந்து வரும் சந்திரனின் நான்காவது திதியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பது வழக்கம்.
இதில் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இதை மகா சங்கட ஹர சதுர்த்தி என்பார்கள். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

ஒரு வருடத்தில் 12 சங்கடஹர சதுர்த்திகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் அற்புத விரதம் இது ஆகும்.
புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.
இந்த ஆண்டு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் மாலை 6.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்குகிறது. மறுநாள் பகல் 3.48 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் இன்றே மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.
பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.

இன்று அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
அடுத்த ஆண்டு மகா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதேபோல் அடுத்த ஆண்டும் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேறத் தொடங்குவதற்கான அறிகுறி தெரியத் தொடங்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தொடங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், சர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

அதேபோல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது. ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், சந்திரன் உதயமாகும் நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் தோன்றிய பிறகு விநாயகரை வழிபடுவது எல்லா விதமான தோஷங்களையும் போக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.






