என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை தூர்வாஷ்டமி: மன அமைதி தரும் அருகம்புல் வழிபாடு!
    X

    நாளை தூர்வாஷ்டமி: மன அமைதி தரும் அருகம்புல் வழிபாடு!

    • உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
    • விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

    தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

    'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

    இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.

    இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.



    விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.

    ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.

    உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.

    Next Story
    ×