என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுர்த்தி விழா கோலாகலம்: தங்க கவசத்தில் ஜொலித்த புதுச்சேரி மணக்குள விநாயகர்
    X

    சதுர்த்தி விழா கோலாகலம்: தங்க கவசத்தில் ஜொலித்த புதுச்சேரி மணக்குள விநாயகர்

    • வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.

    சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×