என் மலர்
நீங்கள் தேடியது "சத்குரு"
- ஈஷா சார்பில் தமிழகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது.
- உலகில் அனைத்திலும் சிறந்த, சக்திவாய்ந்த, அற்புதமான கருவி மனித மனம்தான்.
சென்னை:
உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களும் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களும் பங்கேற்றனர்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை மற்றும் தி சவேரா ஹோட்டல் சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" எனும் தியான நிகழ்ச்சி, சவேரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. அதே போன்று ஈஷா சார்பில் தமிழகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்ற "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல், சவேரா ஹோட்டலின் தலைவர் விவேக், நிர்வாக இயக்குனர் நினா ரெட்டி மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனுடன் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சித்தா கல்லூரி உள்பட மயிலாப்பூர், அடையார், அண்ணா நகர், அம்பத்தூர், புரசைவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் இம்மானுவேல் அரசர் குரூப் ஆப் இன்ஸ்டியூசன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவையில் விமானப்படை நிர்வாக கல்லூரி, சிங்காநல்லூர் ரேபிட் ஆக்சன் போர்ஸ் வளாகம், சூலூர் விமானப்படைத்தளம், குன்னூர் ராணுவக் கல்லூரி, ஐஎன்எஸ் அக்ரானி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும், திருப்பூரில் நிஃப்ட் கல்லூரி மற்றும் கோத்தகிரியில் இன்டர்நேஷனல் கம்யூனிட்டி பள்ளியிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் சேலம், ஓசூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மிராக்கிள் ஆப் மைண்ட் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனநலப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உலக மனநல தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சத்குருவின் உலக மனநல தினச் செய்தியில், "நம் மனம் நம் பொறுப்பாகும் - நமது முக்கியமான பொறுப்பாகும். உலகில் அனைத்திலும் சிறந்த, சக்திவாய்ந்த, அற்புதமான கருவி மனித மனம்தான். வியக்க வைக்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அசாதாரண தொழில்நுட்ப முன்னேற்றங்களும், மனித மனத்தின் வெளிப்பாடுகளே. இருப்பினும், உலகம் முழுவதும் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும், மோதல்களும், பேரழிவுகளுமே மனித மனத்தின் தயாரிப்புதான் .இந்த உலக மனநல தினத்தன்று, அற்புதமான கருவியான மனத்தை நம் வசமாக்கிக்கொள்ள உறுதி கொள்வோம்! நலமாக உள்ள மனம், பல அதிசயங்களை வெளிப்படுத்தி மனித வாழ்வை மேம்படுத்தும். மனதின் அதிசயத்தை அனுபவிக்க ஒரு நாளைக்கு 7 நிமிடங்கள் முதலீடு செய்வோம் என உறுதியளிப்போம்" எனக் கூறியுள்ளார்.
https://x.com/SadhguruTamil/status/1976608679228227632
உலகளவில் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் மனநல பிரச்சனைகளை கையாள தியானம் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தி சத்குரு அவர்கள் 'மிராக்கிள் ஆப் மைண்ட்' எனும் இலவச தியான செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த இலவச செயலி மூலம், வழிகாட்டுதலுடன் வெறும் ஏழே நிமிடங்களில் மக்கள் தியானம் செய்ய முடியும். மக்கள் இந்த தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தம், பயம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுதலை, ஆழ்ந்த உறக்கம் மற்றும் மன அமைதி உள்ளிட்ட பலன்களைப் பெற முடியும்.

மிராக்கிள் ஆஃப் மைன்ட் தியான செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அம்சங்களும் உள்ளன. இதில், மனஅழுத்தம், உறவுகள், உடல் மன ஆரோக்கியம் தொடர்பான சத்குருவின் உரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இச்செயலியில் துவக்கத்தில் 7 நிமிடங்கள் மேற்கொள்ளும் தியானத்தை 21 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம். கண்கள் மூடியிருந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவை நாம் அறிந்து கொள்ள உதவும் நினைவூட்டல் வசதிகளும் உள்ளன. இந்த செயலியை isha.co/mom
என்ற இணைப்பில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
- வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.
கோவை:
சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.
ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் "இந்த விழாவை பார்க்கும் போது, இதன் பின்பு இருக்கும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை உணர முடிகிறது. ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நம் தேசத்தை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.
கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்க சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். பாரதத்தின் உண்மையான திறமைகள் கிராமங்களில் தான் இருக்கிறது. அதே போன்று போதை ஒழிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளிலும் ஈஷா உதவ வேண்டும்" எனக் கூறினார்.
விழாவில் சத்குரு பேசுகையில், "நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஆனால், மக்களை உடல் ரீதியாக பலவீனமான, மனரீதியாக குழப்பமான, கவனக்குறைவான மற்றும் திறமை, தகுதி, திறன்கள் இல்லாத சமூகமாக விட்டுவிட்டால், நாம் பெரிய பேரழிவாக இருப்போம்.

இதுவே சரியான நேரம், நம்மிடம் இருப்பது பெரும் மக்கள்தொகை, நம் மக்களில் 50% இப்போது 30 வயதுக்குக் கீழ் உள்ளனர். அவர்களைத் திறம்படுத்தி, குறிப்பிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தினால், இந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டியிட முடியாது. உற்சாகமான மனிதர்களை நீங்கள் உருவாக்கி விட்டால் அவர்களை யாரும் நிறுத்த முடியாது.
உற்சாகமான மனிதர்கள் மற்றும் இணைந்து செயல்படும் தன்மையை உருவாக்க வேண்டும். விளையாட்டு இதனை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உருவாக்கும். ஈஷா கிராமோத்சவம் 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.
சாய்னா நேவால் பேசுகையில், "இங்கு இருக்கும் 15, 000-க்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகம் என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். ஆனால் இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அதன் பிறகு இங்கு தான் நடக்கிறது என அமைச்சரிடம் கூற நினைத்தேன். நம் தேசத்தில் விளையாட்டை வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஈஷா கிராமோத்சவம் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் சத்குருவிற்கு நன்றி" எனக் கூறினார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் வைசாலி பேசுகையில், "சத்குருவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி தோல்விகளை கடந்து களத்தில் விளையாடியதே வெற்றி தான். எனக்கு செஸ் விளையாட்டு, வெற்றி தோல்வி என்பதை தாண்டி என்னை வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. வெற்றி தோல்விகளை எவ்வாறு சமமாக எடுத்துக்கொள்வது, சவாலான சூழல்களில் அமைதியாக நடந்து கொள்வது போன்றவற்றை விளையாட்டு கற்றுத் தரும்." எனக் கூறினார்.
17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வென்றது. கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.
வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது.
இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.
இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப் போட்டிகள் சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன.
- போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.
ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பங்கேற்று பேசினார்.

ஈஷா கிராமோத்சவம் வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆகிய பலன்களை விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் பெற முடியும்.
இதன் அடிப்படையில் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளையாட்டை கொண்டு வரும் நோக்கில், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா சத்குருவால் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஈஷா கிராமோத்சவம்-2025:- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம்
ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் 17-ஆவது பதிப்பான "ஈஷா கிராமோத்சவம்-2025" தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்
ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். இதில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட மற்றும் மண்டல அளவிலான இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன.
இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன. இதில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன.
முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினர்கள்
இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
பரிசுத்தொகை
ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளின் முதல் 2 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. அதே போன்று இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹ 5,00,000, ₹ 3,00,000, ₹ 1,00,000, ₹ 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம்பெறவுள்ளன.
வண்ண கோலப் போட்டி
மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.
- ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
- விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது.
மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
இது குறித்து முன்பு ஒரு முறை சத்குரு கூறுகையில், "ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை, உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.
அந்த வகையில் இதுகுறித்து, ஈஷா கிராமோத்சவ போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த மிதுன் என்ற இளைஞரிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறோம். இந்த வருடம் நாங்கள் இரண்டு அணிகள் மூலம் பங்கேற்றோம்.
ஆனால், ஒரு அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. மற்றொரு அணி கிளஸ்டர் அளவில் வெற்றி பெற்று, தஞ்சாவூரில் நடந்த டிவிஷனல் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால், தஞ்சாவூரில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
எங்கள் அணியில் விளையாடிய இருவர் காவல்துறையில் வேலை பெற்றுள்ளார்கள். இதனால், விளையாட்டில் ஈடுபடுவது அரசு வேலைவாய்ப்புக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியூர்களுக்கு விளையாடச் சென்றாலும், எங்கள் அணியில் வேறு அணியைச் சேர்ந்த வீரர்களைச் சேர்த்து விளையாடுவதில்லை.
ஈஷா கிராமோத்சவப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்து விளையாட வைப்பது விதிமுறையாக உள்ளது. இது கிராம இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது, இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
விளையாட்டை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதனால், மது, பாக்கு, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் அணியில் மூன்று மூத்த வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
நாங்கள் மூவரும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்து, புதிய வீரர்களை உருவாக்கி வருகிறோம். முன்பு எங்கள் ஊரில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. அருகிலுள்ள ஊருக்கு சென்று விளையாடி வந்தோம்.
எல்லா இளைஞர்களும் ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்கள் ஊர்மக்கள் இணைந்து எங்களுக்கு மைதானம் அமைத்துத் தந்துள்ளனர். மைதானத்தில் மின்விளக்கு வசதியும் செய்து தந்துள்ளனர்.
இதனால், இரவு நேரத்திலும் விளையாட முடிகிறது. அவ்வப்போது போட்டிகளையும் நடத்தி வருகிறோம். எந்தவித பாகுபாடும் பார்க்காமல், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இதனால், வீரர்கள் மட்டுமல்லாமல், ஊரே ஒற்றுமையாக உள்ளது.
வெளியிடங்களில் விளையாடச் சென்றால், நுழைவுக் கட்டணமாக ஐநூறு முதல் ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். ஆனால், ஈஷா கிராமோத்சவப் போட்டிகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை. இலவசமாக விளையாட வைக்கிறார்கள். மேலும், வீரர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்கிறார்கள்.
இவையெல்லாம் ஈஷாவின் மீது எங்களுக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
- ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு பின்னால் செல்வது என்பது தான், இன்று நம் சமூகத்திற்கு முன் இருக்கும் மாபெரும் சவால். சட்டங்கள் மற்றும் காவல்துறை மூலம் போதை வஸ்துக்களின் புழக்கத்தை வேண்டுமானால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. இளைஞர்கள் அதனை நாடாமல் இருக்க செய்வதே, சரியான தீர்வாக இருக்க முடியும். இதற்கு ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில், போதை வஸ்துக்களை இளைஞர்கள் நாடாமல் இருக்க, விளையாட்டை ஒரு தீர்வாக ஈஷாவின் கிராமோத்சவம் முன்னெடுப்பு முன் வைக்கிறது. போதையில் இருந்து விடுபட, ஈடுபடாமல் இருக்க விளையாட்டு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி நம் எல்லாருக்கும் எழ வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால், ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒருசேரிபுதூரைச் சேர்ந்த வாலிபால் வீரர் பூபதி என்ற இளைஞரிடம் பேசினோம். "எங்கள் ஊரில் இரண்டு வாலிபால் அணி உருவாக்கினோம். அதில் ஒரு அணிக்கு நான் கேப்டனாக உள்ளேன்.
15 வருஷமாக வாலிபால் விளையாடுகிறேன். நான் சிவில் சைட் இன்ஜினியராக வேலை செய்கிறேன். எங்க அப்பா வாலிபால் விளையாண்டு வந்தாங்க. அதை நானும் பின்பற்றி விளையாடி வருகிறேன். விளையாடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியுது.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகளுக்கு முன்பு எங்க ஊர்ல ரொம்ப காலமாக விளையாட்டில் ஆர்வமில்லாம இருந்தோம். அந்த சமயத்துல எங்க பசங்க சிலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க. ஈஷா கிராமோத்சவம் போட்டி அறிவிப்புக்கு பிறகு, எங்க ஊர் இளைஞர்களைத் திரட்டி 2 வாலிபால் டீம் அமைத்தோம். அதுல ஒரு டீமுக்கு நான் கேப்டனானேன்.
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்க ஊர் இளைஞர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுனாங்க. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதால், நிறைய பசங்க குடிப்பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துட்டாங்க. ஈஷா விளையாட்டுப் போட்டி இளைஞர்களின் வாழ்க்கையை மாத்திடுச்சு. இதற்கு ஈஷாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
இந்த வருஷம் அந்தியூரில் நடைபெற்ற கிளஸ்டரில் ஜெயித்து விட்டோம். அதன் பிறகு, கோவையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தோற்று விட்டோம். போன வருஷம் மண்டல அளவில் ரன்னர் வந்த நாங்க, இந்த வருஷம் காலிறுதியில் தோற்றது வருத்தமா இருக்கு.
ஆனாலும், என்ட்ரன்ஸ் பீஸ் இல்ல. போக்குவரத்து செலவுக்கு ஈஷா பணமும் தர்றாங்க. ஈஷாவோட இதுபோன்ற சேவைகள் தான், மக்கள் கிட்ட ஈஷாவை கொண்டு போய் சேர்க்குதுன்னு நினைக்கிறேன்.
தொடர்ந்து கிளஸ்டர் போட்டிகளில் ஜெயிக்கும் எங்கள் ஊரில் கிளஸ்டர் போட்டிகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது, எங்க ஊர்ல இருக்கும் விளையாட்டு ஆர்வமுள்ள பெண்களும் த்ரோபால் போட்டிகளில் பங்கேற்பாங்க. அதேபோல், ஆண்டுதோறும், ஒவ்வொரு கிராமத்தில் கிளஸ்டர் போட்டிகள் நடத்துனா, கிராமப்புற மக்களிடையே ஈஷா கிராமோத்சவம் பல மாற்றங்களை கொண்டு வரும். என் அனுபவத்தில் மற்ற போட்டிகளுக்கு போனால் வீட்டில் அனுமதிப்பதில்லை.
ஈஷா போட்டிகளுக்கு வீட்டில் மட்டுமில்ல. சமுதாயத்திலும் நல்ல பெயர் உள்ளது. அதனால, ஈஷா கிரோமத்சவம் போட்டிகளில் விளையாட எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது." என்றார்.
- ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.
- ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள்.
ஒரு பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள், எனக்குள் மற்றும் என்னை சுற்றி இருக்கும் பெண்களுக்குள் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்ட பிறகு, இது உலகையே மாற்றும் வல்லமை உடையது என்பதை உணர்ந்தேன் என ஈஷா கிராமோத்சவ அனுபவம் பகிர்கிறார் ஆயிஷா.
ஈஷா கிராமோத்சவம் தன்னுடைய வாழ்விலும், கிராமத்திலும் உருவாக்கிய மாற்றங்கள் குறித்து நெல்லூர் மாவட்டம், கோட்டால் கிராமத்தை சேர்ந்த ஆயிஷா நம்மிடம் கூறுகையில், "ஈஷாவில் இருந்து விளையாட வாருங்கள் என்று அழைத்த போது, நான் மிகவும் தயங்கினேன், சின்ன வயதில் விளையாடியது பிறகு விளையாட்டு என்பதே என் வாழ்வில் இருந்தது கிடையாது.
ஆனால் இது கிராம மக்களுக்கான குறிப்பாக பெண்களுக்கானது எனக் கூறிய போது, என் வீட்டில் இருந்த அம்மா, பெரியம்மா, அண்ணி ஆகியோர் இணைந்து விளையாடத் துவங்கினோம். முதல் நாள் அந்த பந்து என் கைகளுக்கு வந்த உடனே விளையாட்டின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நேரம் சென்றது தெரியாமல் நாங்கள் விளையாடினோம்.
எங்களின் கிராமத்தில் இருந்து முதலில் என்னுடைய குடும்பத்தில் இருந்து மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதில் 13 வயது முதல் கிட்டத்தட்ட 60 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். என் அம்மாவுக்கு 50 வயது, பெரியம்மாவிற்கு 60 வயது, என் உறவுக்கார சிறுமிக்கு 18 வயது. நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடினோம். நாங்கள் போட்டிகளில் தோற்றாலும் இப்படி விளையாடியது எங்களுக்குள் பெரிய மகிழ்ச்சியை தந்தது.
என் பெரியம்மாவிற்கு ஒரு டிபன் கடை உள்ளது, அவரின் வாழ்க்கை முழுவதும் கடையில் வேலை செய்வது, பிறகு வீட்டில் வேலை செய்வது என்றே பார்த்து இருக்கிறேன். நாங்கள் விளையாடிய போது அவரின் முகத்தில் பெரிய புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்தேன்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே விளையாடும் போது பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும், அதனாலேயே வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால் ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.
நாங்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இருந்து எங்கள் உறவினர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி விளையாடினோம். ஆனால் அடுத்த ஆண்டே மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களும் எங்கள் அணியில் இணைந்தனர். சமூக வேற்றுமை என்பது எல்லாம் கடந்து நாங்கள் அனைவரும் ஒரே அணியாக விளையாடினோம்.
தனிப்பட்ட வகையில் நான் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்தவுடன், அப்படி ஒரு பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் மாறி உள்ளது.
ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள். அந்த பந்து என் கைகளுக்கு வருவதற்கு முன்பு அது எனக்கு புரியவில்லை, ஆனால் தற்போது ஒரு விளையாட்டு எப்படி எனக்குள் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, சமூக பிரிவினைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது, உடல் ரீதியாக நம்மை உறுதியாக வைக்க உதவுகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது, பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நிஜத்தில் அனுபவபூர்வமாக பார்த்துக் கொண்டிருகிறேன்." எனக் கூறினார்.
- சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
- ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கூக்கால் கிராமம் அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான இடம். சுற்றுலா சார்ந்த தகவல்களையும் பயண அனுபவங்களையும் புது இடங்களையும் பகிரும் 'டிராவல் வீ-லாகர்ஸ்' மூலம் இந்த கிராமம் பிரபலமானது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கூக்கால் கிராமத்து இளைஞரின் ஆசையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
விளையாட்டு மூலம் கிராம மக்கள் மத்தியில் உற்சாகம், கொண்டாட்டம், ஈடுபாடு, ஒற்றுமை, உடல் உறுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில், சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
அடிப்படையாக மக்களின் தினசரி வாழ்க்கையில் விளையாட்டை ஒரு அங்கமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
இந்த ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 3 வருடங்களாக விளையாடி வரும் மணி என்ற கூக்கால் கிராமத்து இளைஞர் இது குறித்து நம்மிடம் கூறுகையில், "கொடைக்கானலில் இருந்து 48 கிலோ மீட்டர் தாண்டி கூக்கால் ஊராட்சியைச் சேர்ந்தவன் நான். கொடைக்கானல் சுற்றுவட்டாரத்துல ஒரு ஊருக்கு 3 டீம் இருக்கு. 4 வயசுல இருந்து நான் வாலிபால் விளையாடுறேன்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டியில பிளஸ் 2 முடிச்சேன். இப்ப விவசாயம் பாக்குறேன். தினமும் தீவிரமா பிராக்டிஸ் பண்ணுவேன். எனக்கு இப்போ 37 வயசாச்சு, திருமணமாகி 3 குழந்தைகள் இருக்காங்க. என் வயசு உடையவங்க எல்லாரும் விளையாடுறத நிறுத்திட்டாங்க. நான், சின்ன பசங்களுக்கு வாலிபால் சொல்லித் தந்துட்டு, அப்டியே விளையாடிட்டு வறேன்.
எங்க டீம் சின்னாளப்பட்டியில் கிளஸ்டர்ல ஜெயிச்சோம். ஆனா, மதுரைல நடந்த டிவிஷனல் மேட்ச்ல தோத்துட்டோம். கிராமத்துல உள்ளவங்கள ஊக்குவிச்சு, விளையாட்டு வீரர்கள உருவாக்கும் நோக்கத்துல ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துறது நல்ல விஷயம். குறிப்பா, என்ட்ரன்ஸ் பீஸ், வேற பீஸ்ன்னு எதுவுமே எங்ககிட்ட எதுவும் அவங்க வாங்கல.
எங்க டீம் 3 வருஷமா ஈஷா கிராமோத்சவம் போட்டிகளில் கலந்துக்குறோம். போன ரெண்டு வருஷமா கிளஸ்டர்லயே தோத்துட்டோம். இந்த வருஷம், கிளஸ்டர்ல ஜெயிச்சு, டிவிஷ்னல் வரைக்கும் போயிருக்கோம். கிராமத்துல திறமை இருக்குற விளையாட்டு வீரர்களை ஈஷா கண்டெடுக்குது.
கிளஸ்டர், மண்டலப் போட்டிகளில் ஜெயிச்சு, அப்படியே கோவை ஈஷா ஆதியோகி வளாகத்துல பைனல்ஸ் விளையாடனும்ன்னு ஆசை. இந்த வருஷம் நடக்கல. வரும் வருஷங்கள்ல தீவிரமா முயற்சி செய்வோம். விளையாட்டு ஆர்வம் குறையும்போது, பசங்க போதை, கஞ்சா போன்ற வழியில போயிடறாங்க. குரூப்பா சேர்ந்து விளையாடும்போது, அந்த எண்ணம் மாறிடுது. விளையாடிட்டே இருக்குறதால உடம்ப ஆரோக்கியமா வெச்சுக்க முடியுது" என்றார்.
ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது. மணி போன்ற இளைஞர்களுக்கு விளையாட்டின் மூலம் உற்சாகமும் நம்பிக்கையும் பரப்புகிறது இவ்விளையாட்டுத் திருவிழா.
- சத்குருவிற்கு அண்மையில் 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது என்றார் சத்குரு.
சத்குரு புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், "மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது" எனக் கூறினார்.
சத்குருவிற்கு அண்மையில் 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, முதன்முறையாக 17 நாட்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் அவர் கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.
இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய சத்குரு, "கடந்த ஆண்டு தலையில் அடிப்பட்டதால், இரண்டு முறை மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 2 வருடம் மோட்டார் சைக்கிள் பயணம் கூடாது என்றார்கள். 5 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு கைலாய யாத்திரை செல்வதற்கான பாதை திறக்கப்பட்டு உள்ளதால் மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை போக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஏனென்றால் யோக விஞ்ஞானத்தின் சக்தியை என்ன என்பதை காட்டவே இந்த யாத்திரையை மேற்கொண்டேன். யோகா என்றால் உடலை வளைப்பது, மூச்சை பிடித்துக்கொள்வது அல்ல, உயிர் மூலத்துடன் தொடர்பு கொள்வது. அந்த சக்தியை கையில் எடுத்துக்கொள்வது.
மருத்துவ ரீதியாக இது முடியவே முடியாது என்று சொல்கிறார்கள், இதை அதிசயம் என்று சொல்லவில்லை, உயிரே அதிசயமானது தான். அந்த உயிருக்கு மூலமானது அதை விட பெரிய அதிசயம். யோகா என்பது அதனுடன் இணைந்து வாழும் தன்மை. ஆகையால் இது யோகாவின் சக்திக்கு ஒரு சாட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி குறித்த கேள்விக்கு, "இது நமக்கு பாதிப்பு தான். ஆனால் நம் நாட்டின் மதிப்பு மற்றும் மரியாதையை நாம் இழந்து விட முடியாது. சாவல்கள் வரும் போது தோல்வி என எண்ணக் கூடாது. நம் நாட்டு மக்கள் உறுதியாக நிற்க வேண்டும்.
நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு. இது எதிர்காலத்தில் எப்படி செல்லும் என்று நான் கணிக்க விரும்பவில்லை. யார் எதை செய்தாலும் நம் நாட்டை செழிப்பாக நடத்திக் கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமக்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே செழிக்க முடியும் என்றில்லாமல் எப்படிபட்ட சூழலிலும் செழிப்பாக நம் தொழில்களை நடத்திக்கொள்ளும் திறன்களை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்." எனக் கூறினார்.
ஈஷா கிராமோத்சவம் திருவிழாவிற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்த கேள்விக்கு, "ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஈஷா கிராமோத்சவத்தை 2026-2027-க்குள் நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கின்றது. 2027ஆம் ஆண்டுக்குள் கட்டாயமாக 20 மாநிலங்களுக்கு மேல் இது நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." எனக் கூறினார்
நம் கலாச்சாரத்தில் கைலாய யாத்திரை என்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கைலாய மலையை தரிசித்து திரும்பி வருபவர்களை ஊரெங்கும் மக்கள் பெரும் பக்தியுடன் வணங்கி வரவேற்பர்.
அந்த வகையில் புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து தமிழகம் திரும்பிய சத்குருவை, கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பக்தியுடன் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை போலவே மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் வழிநெடுங்கிலும் நின்று சத்குருவிற்கு வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவின் நுழைவாயிலான மலைவாசல் முதல் ஆசிரம வளாகம் வரை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வரிசையாக நின்று சத்குருவை வரவேற்றனர்.
சத்குரு உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர்-இல் இருந்து கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து நேபாளத்தின் காத்மாண்டு, பக்தபூர், துளிகேல் ஆகிய பகுதிகள் வழியாக நேபாள-திபெத் எல்லை பகுதியை அடைந்தார்.
அதன் பின்பு திபெத்தின் ஜாங்மு, நாயலம், சாகா வழியாக மானசரோவர் ஏரியை அடைந்து அங்கிருந்து பாதயாத்திரையாக சென்று கைலாய மலை தரிசனம் செய்தார். சத்குரு யாத்திரை மேற்கொண்ட பாதையானது, மண் சரிவு, தொடர் மழை உள்ளிட்ட ஆபத்துகள் நிறைந்த, கரடுமுரடான பாதை மற்றும் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 15,000 இருந்து 20,000 அடி வரையுள்ள உயரமானப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த யாத்திரையின் இடையில் சத்குரு நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடினர். இந்தியா - சீனா மோதல்கள் தொடர்ந்து வந்ததால் கடந்த 5 வருடங்களாக நேரடியாக கையலாய யாத்திரை செல்ல முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போது உருவாகி வரும் இணக்கமான உறவினால் கடந்த ஜூன் மாதம் முதல் திபெத் வழியாக கைலாய யாத்திரைக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் கைலாஷ் மலைக்கு ஆன்மீக பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
- சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது.
- உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை:
விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள். இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.
கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன் - அவர் பரமயோகி - தன் இல்லத்தையும், மனைவி பார்வதியையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும், தாய்மைக்கான ஏக்கமும் அதிகரித்ததால் அவள் அசாதாரண படி ஒன்றை எடுக்கிறாள். தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை சேகரித்தாள். தனது தோலின் அம்சங்களை கொண்டிருந்த அந்த சந்தனத்தை மண்ணுடன் கலந்தாள், அதை ஒரு பிள்ளை வடிவத்தில் பிடித்து வைத்தாள். அவள் வடித்த இந்த உருவத்திற்கு உயிர் ஊட்டினாள்.
சிவன் பல வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார். தன் தாய்க்கு காவலாக வாசலில் ஒரு பாலகன் நின்று கொண்டிருந்தான். இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. கோபத்தில் சிவன் பாலகனின் தலையை துண்டித்துவிடுகிறார். பார்வதியின் துக்கமும் ஆத்திரமும் தீவிரமாக இருந்தது. இந்த துன்பத்தை சரிசெய்ய நினைக்கிறார் சிவன். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் கணங்கள், அந்த கணங்களின் தலைவரான ஒருவரின் தலையை எடுத்து பாலகனின் தலைக்கு பதிலாக மாற்றிவைத்தார் சிவன்.
சிவ கணங்கள் - அவர்கள் விசித்திரமான வேற்றுகிரக வாசிகள் - இவர்களின் உடல் அமைப்பு மனிதர்களைப் போல் அல்லாமல் எலும்புகளற்ற கைகள் கொண்டவர்களாக கூறப்படுகிறார்கள். இதுவே ஓவியர்கள் விநாயகரை தும்பிக்கை கொண்டவராக, ஆனைமுகத்தானாக சித்தரிக்க காரணமானது. ஆனாலும், இன்றும் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு பக்திப் பாடலும், அவரை கணபதி என்றுதான் சொல்கிறதே தவிர, கஜபதி என்று அல்ல.
விநாயகர் தோன்றியது இப்படித்தான்: பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார் - புத்திசாலித்தனம், உயிர்மூலம் ஆகியவற்றின் அறிகுறி ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.
விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும். அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை - இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது - உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.
இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள். அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது - சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன - உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.
விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல. அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது - அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.
பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது - சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.
மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது. உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் - எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.
இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் - தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக விருது எனப் புகழாரம்.
- கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'க்ரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு "ப்ளூ டங்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக க்ரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெர்மனியில் செயல்பட்டு வரும் "க்ரேட்டர் (Greator)" எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் "ப்ளூ டங்" (Blue tongue) என்ற விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து க்ரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன. நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.
அதனால்தான் இந்த ஆண்டின் "ப்ளூ டங்" விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், " உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தை விட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சத்குருவும் ஈஷா அறக்கட்டளையும் பதிவு செய்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சத்குரு தொடர்பாக பரப்பப்படும் போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவினை இன்று பிறப்பித்தது.
உலகளாவிய அளவில் சத்குருவிற்கு இருக்கும் செல்வாக்கினை கருத்தில் கொண்டு அவரின் பெயர், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட செய்திகளும், காணொளிகளும் பல்வேறு மோசடி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஈஷா அறக்கட்டளை இதற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது, குறிப்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY), சைபர் காவல்துறை மற்றும் சமூக ஊடக நிறுவனங்களிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு சுற்றறிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகள் மூலம் இவை யாவும் மோசடிகள் என்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையும், சத்குரு மற்றும் சில பிரபலங்களின் பெயரால் நடைபெறும் இம்மாதிரியான மோசடிகளைப் பற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டது. எனினும், சில தளங்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டே உள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக சத்குருவும் ஈஷா அறக்கட்டளையும் பதிவு செய்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "சத்குருவின் பெயர், உருவம் மற்றும் ஆளுமையை தவறாக பயன்படுத்தும் பதிவுகளை ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க" இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவை வரவேற்று ஈஷா அறக்கட்டளை பதிவிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சத்குருவின் தனியுரிமைகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த மோசடி செயல்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலியாக வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்களை உள்ளடக்கியவை. ஈஷா அறக்கட்டளை இத்தகைய போலியான பதிவுகளை அகற்றவும், மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்தத் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஆனால் ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது, பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும்.
நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக் கரத்துடன், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.
ஆனால், இப்போதைக்கு, மதம், சாதி, அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது.
இங்கு தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.






