என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே: பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை
    X

    விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே: பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை

    • தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 10,000-க்கும் அதிகமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    • மரம் என்பது விவசாயிகளுக்கான காப்பீடு, இதனால் அவர்களின் பொருளாதார அமைப்பு பாதுகாக்கப்படும்.

    ஓசூர்:

    "விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் அதனை தடுக்கும் விதமாக இருக்கும் பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற வேண்டும்" என மத்திய வேளாண்துறை அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை விடுத்தார்.

    ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் 'நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் - ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு' எனும் தலைப்பில் பிரம்மாண்ட விவசாய கருத்தரங்கு இன்று (27/12/2025) நடைபெற்றது.

    சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடையே சிறப்புரையாற்றினர். மேலும், மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    இதில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 10,000-க்கும் அதிகமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இக்கருத்தரங்கில் சத்குரு பேசுகையில், "இந்த நாடு செழிக்க வேண்டுமானால், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 55 சதவீத மக்கள் செழிக்க வேண்டும். மண்ணை நாம் 'தாய் மண்' என்று அழைக்கிறோம். இதை நாம் உணர்வுப்பூர்வமாக உணரும்போதுதான், அதை மீட்டெடுக்க எதையாவது செய்ய முடியும்.

    விவசாய நிலங்களில் மரங்களும் விலங்குகளும் இல்லாமல் மண்ணைப் பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. ஆகையால் மரம் சார்ந்த விவசாயம் மிகவும் முக்கியமானது. மரம் என்பது விவசாயிகளுக்கான காப்பீடு, இதனால் அவர்களின் பொருளாதார அமைப்பு பாதுகாக்கப்படும்.

    ஒரு விவசாயி தனது நிலத்தில் எதை வளர்த்தாலும் அது அவருக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். எட்டு அடிக்குக் கீழே உள்ள மண் அரசாங்கத்திற்கு சொந்தம் என்ற பிரிட்டிஷ் காலத்து சட்டம் மாற்றப்பட வேண்டும். நிலத்தில் தங்கம் கிடைத்தால் கூட அரசு வரி விதிக்கலாமே தவிர, அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    விவசாயத்தை தாராளமயமாக்குவது பற்றி நான் பேசவில்லை, விவசாயத்தை நீங்கள் விடுவிக்க வேண்டும் எனக் கேட்கிறேன். காடு மற்றும் விவசாயத்திற்கு இடையே தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஒரு விவசாயி தனது நிலத்தில் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. இதனை அரசு கொள்கையாக மாற்ற வேண்டும்.

    இங்கு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உயிரின் அடிப்படை என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றே. வாழ்வின் அடிப்படை ஆதாரத்தைப் பற்றிப் பேசும்போது நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கக் கூடாது.

    இதனை வேளாண்துறை அமைச்சர் முதல் அனைத்து தலைவர்களிடமும் நான் கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் நீங்கள்தான் கொள்கைகளை உருவாக்குபவர்கள். தயவுசெய்து, இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக, நாம் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும்." எனப் பேசினார்.

    முன்னதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் பேசுகையில், "ஓசூர் நகரம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் சங்கமிக்கும் ஒரு அற்புதமான திருவேணி சங்கமமாகத் திகழ்கிறது. இங்கு சத்குரு அவர்களின் ஈடு இணையற்ற பணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக, தென்னாட்டின் உயிர்நாடியான காவிரியை மீட்டெடுக்க சத்குரு அவர்கள் முன்னெடுத்துள்ள 'காவிரி கூக்குரல்' இயக்கம் இன்று ஒரு பேரியக்கமாக வளர்ந்துள்ளது.

    அவரது வழிகாட்டுதலின்படி காவிரியின் வடிநிலப்பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுப்பதன் மூலம் மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை நான் நேரடியாகக் கண்டு வியந்துள்ளேன். ஆகையால் அவரின் வழிகாட்டுதலில் மரம் சார்ந்த விவசாயத்தை இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கியக் கொள்கையாகவே முன்னெடுத்துச் செல்ல நான் உறுதிபூண்டுள்ளேன். " எனக் கூறினார்.

    இந்த கருத்தரங்கில் ஐந்து தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த வேளாண விஞ்ஞானிகள் மற்றும் நான்கு மாநில முன்னோடி விவசாயிகள் பங்கேற்று உயர்வருமானம் தரும் மரப்பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் வெற்றி அனுபவங்களை விவசாயிகளிடையே பகிர்ந்து கொண்டனர்.

    அந்த வகையில் இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைவர் ரவி, சந்தன சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரை உள்ள நுணுக்கங்கள் மற்றும் அதன் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

    இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் கண்டியண்ணன் மிளகு சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் முறைகள் குறித்தும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் முனைவர் செந்தில் குமார் மற்றும் சங்கரன் ஆகியோர் அவகேடோ, மாம்பழம், சீத்தாப்பழம், கொய்யா பழங்களின் சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்தும் உரையாற்றினர்.

    மேலும், பூச்சியியல் வல்லுநர் செல்வம் ரசாயனமில்லா பூச்சி மேலாண்மை குறித்தும், சென்னை ஐஐடி சிவசுப்பிரமணியன் மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பம் குறித்தும் செயல்முறை விளக்கங்களை அளித்தனர்.

    முன்னோடி விவசாயிகளில், மரங்களை அறுவடை செய்யாமல் வருமானம் ஈட்டும் முறைகள், ஜாதிக்காய் விவசாயம் மூலம் ஒரு மரத்தில் ரூ.30,000 வருமானம் ஈட்டுவது குறித்தும், ஏக்கருக்கு ரூ.12 முதல் 30 லட்சம் வரை வருவாய் ஈட்டும் மிளகு சாகுபடி மாதிரிகள் குறித்தும் விவசாயிகள் பழனிச்சாமி, சரவணா ஆனந்தன், சொப்னா சிபி கள்ளிங்கள் ஆகியோர் விளக்கினர்.


    சந்தன சாகுபடி குறித்து கர்நாடக விவசாயி ரமேஷ் பாலூட்டிக்கி விளக்கினார். தென்னைக்குள் பல அடுக்கு பயிர் சாகுபடி செய்து வெற்றி கண்ட இராஜாக்கண்ணு மற்றும் வள்ளுவன் ஆகியோரின் அனுபவப் பகிர்வுகள் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தன.

    இந்த கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற விவசாய கண்காட்சியில் மியாசகி மா, சந்தனம், மிளகு, அவகோடா மற்றும் 54 வகையான பழ மரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் கருத்தரங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் மூலம் விவசாய விளைப் பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் நவீன வேளாண் கருவிகள், மரச்சாமான்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

    Next Story
    ×