என் மலர்
நீங்கள் தேடியது "சத்குரு ஜக்கி வாசுதேவ்"
- வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.
கோவை:
சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.
ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் "இந்த விழாவை பார்க்கும் போது, இதன் பின்பு இருக்கும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை உணர முடிகிறது. ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நம் தேசத்தை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.
கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்க சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். பாரதத்தின் உண்மையான திறமைகள் கிராமங்களில் தான் இருக்கிறது. அதே போன்று போதை ஒழிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளிலும் ஈஷா உதவ வேண்டும்" எனக் கூறினார்.
விழாவில் சத்குரு பேசுகையில், "நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஆனால், மக்களை உடல் ரீதியாக பலவீனமான, மனரீதியாக குழப்பமான, கவனக்குறைவான மற்றும் திறமை, தகுதி, திறன்கள் இல்லாத சமூகமாக விட்டுவிட்டால், நாம் பெரிய பேரழிவாக இருப்போம்.

இதுவே சரியான நேரம், நம்மிடம் இருப்பது பெரும் மக்கள்தொகை, நம் மக்களில் 50% இப்போது 30 வயதுக்குக் கீழ் உள்ளனர். அவர்களைத் திறம்படுத்தி, குறிப்பிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தினால், இந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டியிட முடியாது. உற்சாகமான மனிதர்களை நீங்கள் உருவாக்கி விட்டால் அவர்களை யாரும் நிறுத்த முடியாது.
உற்சாகமான மனிதர்கள் மற்றும் இணைந்து செயல்படும் தன்மையை உருவாக்க வேண்டும். விளையாட்டு இதனை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உருவாக்கும். ஈஷா கிராமோத்சவம் 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.
சாய்னா நேவால் பேசுகையில், "இங்கு இருக்கும் 15, 000-க்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகம் என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். ஆனால் இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அதன் பிறகு இங்கு தான் நடக்கிறது என அமைச்சரிடம் கூற நினைத்தேன். நம் தேசத்தில் விளையாட்டை வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஈஷா கிராமோத்சவம் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் சத்குருவிற்கு நன்றி" எனக் கூறினார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் வைசாலி பேசுகையில், "சத்குருவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி தோல்விகளை கடந்து களத்தில் விளையாடியதே வெற்றி தான். எனக்கு செஸ் விளையாட்டு, வெற்றி தோல்வி என்பதை தாண்டி என்னை வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. வெற்றி தோல்விகளை எவ்வாறு சமமாக எடுத்துக்கொள்வது, சவாலான சூழல்களில் அமைதியாக நடந்து கொள்வது போன்றவற்றை விளையாட்டு கற்றுத் தரும்." எனக் கூறினார்.
17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வென்றது. கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.
வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது.
இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.
இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
- கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன.
சத்குருவின் பிறந்த தினமான இன்று 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை" (BSSFPC) தொடங்கி உள்ளனர். இது இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.
மண் வளத்தை மேம்படுத்த சத்குரு கடந்த 2022-ஆம் ஆண்டு "மண் காப்போம்" எனும் உலகளாவிய இயக்கத்தை தொடங்கினார்.
இவ்வியக்கத்தினால் உந்தப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டதே "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்".

இந்நிறுவனத்தை குஜராத் மாநில சட்டமன்றமான 'விதான் சபாவின்' சபாநாயகரும், பனஸ் டெய்ரியின் தலைவருமான ஶ்ரீ சங்கர்பாய் செளத்ரி இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் தராத் பகுதியில் 'பனஸ் மண் பரிசோதனை ஆய்வகம், கிமானாவில் 'பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம்' மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வுக்கு காணொளி மூலம் சத்குரு வாழ்த்து செய்தியில், "குஜராத் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக, மண் காப்போம் பனஸ் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை உருவாக்கி உள்ள பனஸ் டெய்ரியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மக்களுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி நம் வாழ்வின் ஆதாரமாக விளங்கும் மண்ணுக்கும் ஊட்டமளித்து அதை வளம் கொழிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் செய்யும்.
நிச்சயமாக FPO-க்கள் பாரதம் மற்றும் கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன. ஏனெனில் அவை நமது 65% மக்கள்தொகையின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. சங்கர்பாய் மற்றும் பனஸில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்துகளும், ஆசிகளும்" எனக் கூறியுள்ளார்.
https://x.com/SadhguruJV/status/1830887859282420019

மண் காப்போம் இயக்கம் மற்றும் பனஸ் டெய்ரி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ சங்கர்பாய் செளத்ரி பேசுகையில் 'இது பனஸ் டெய்ரியின் வழக்கமான தினம் அல்ல. இது ஒரு முக்கியமான நாள்.
தராத் மற்றும் கிமானாவில் அமைந்துள்ள பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நாம் ஏற்படுத்தியுள்ள புதிய வசதிகள் நமது நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.
நம்மை தாங்கி நிற்கும் மண்ணை காப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட தேவையான அறிவு, கருவிகள் மற்றும் ஆதரவை நாம் வழங்குகிறோம்." எனக் கூறினார்.
இந்நிகழ்வில் மண் காப்போம் இயக்கத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரவீணா ஶ்ரீதர் பேசுகையில் "பனஸ்கந்தாவில் நிலவி வரும் சவாலான மற்றும் வறண்ட சூழலுக்கு இடையே மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் ஏற்படுத்த போகும் மாற்றம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள மண் சிதைவுற்ற பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான உலகளாவிய தரநிலை முன்னுதாரணமாக அமையும்" எனக் கூறினார்.
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளை இணைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மண் காப்போம் இயக்கம் தொடர்ந்து களத்தில் இயங்கி வருகிறது.
பனஸ் டெய்ரி குழுவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தொடர்ச்சியான கருத்தரங்கங்களை நடத்தி உள்ளது.
அதிகம் வறண்ட பகுதியாக அறியப்படும் இந்த தராத் மற்றும் லக்கானி பகுதியில் உள்ள விவசாயிகள் மோசமான மண் வளம், குறைவான நிலத்தடி நீர் மற்றும் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.
இந்த பகுதியில் அளவுக்கு அதிகமான ரசாயன பயன்பாட்டால் மண் வளம் குறைந்துள்ளது. மண்ணின் ஆரோக்கியம் குறித்த துல்லியமான கணக்கீடு இல்லாததால் விவசாயிகள் தேவையில்லாத ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கவும் தவறி உள்ளனர்.
இந்த இடைவெளியை சரி செய்ய 'அதி நவீன மண் பரிசோதனை ஆய்வகம்' தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள முதன்மை ஆய்வகங்கள் சிலவற்றுள் ஒன்றாக மண் குறித்த முழுமையான அறிக்கையை இந்த ஆய்வகம் வழங்கும்.
இந்த அறிக்கையின் மூலம் விவசாயிகள் தங்கள் மகசூலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த சரியான தகவல்களை அறிந்து, தேவையான உரங்களை தேர்வு செய்ய முடியும்.
இதே போல் பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், நிலைத்த நீடித்த உரங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்யும். இந்த ஆய்வகத்தை பார்வையிட்ட விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உரங்கள் இங்கே உருவாக்கப்படுவதை நேரடியாக கண்டனர்.
உயிர் உரங்கள் நிலத்தின் விவசாய உற்பத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
கிமானாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் மண் தன்மைக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் செயல்படும்.
முதல் கட்டமாக இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 3000 விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கான பதிவுகள் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரவிருக்கும் பருவ காலத்தில் முதன் முறையாக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதை குறுகிய கால இலக்காக இந்த நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருக்கும் 911 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்தப் பயிற்சி பல மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் முதல் வருடத்திற்கான மண் பரிசோதனையை இலவசமாக பெறுவார்கள். மேலும் தொடர்ச்சியான பரிசோதனைகள் அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
மேலும் விவசாயிகள் ட்ரோன் சேவைகள், பயிர் சார் மண் மேலாண்மை பயிற்சிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்ளிட்ட பலன்களை பெறுவார்கள்.
பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நீண்ட கால இலக்கு, பனஸ்கந்தா மாவட்டம் முழுவதும் விரிவடைந்து அனைத்து விவசாயிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே ஆகும்.
இதன் மூலம் விளைநிலங்களின் மண் வளத்தை கூட்டுவது, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பகுதியின் உணவு மற்றும் நீர் தேவைகளும் பாதுகாக்கப்படுகின்றன.






