என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers"

    • மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது.
    • உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நெல், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை தனியார் உப்பளத்தினர் ஆக்கிரமித்ததோடு, தங்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாலங்கள் அமைத்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனால் மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மேல்மாந்தை பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் உப்பள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என பலமுறை அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தற்போது வரை உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

    மேலும், இப்பகுதியில் 2 நாட்கள் பெய்த இந்த தொடர் மழைக்கே நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால், விவசாயப் பயிர்கள் பெருமளவில் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.

    ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உப்பள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மேலும், விவசாயிகள், எஞ்சியுள்ள பயிர்களையாவது பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத மழைக்குள்ளாகவே இங்குள்ள உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

    • வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
    • ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.

    விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

    நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.

    "இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.

    வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

    • விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.
    • விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார்.

    நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி ஆய்வு குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்து அதன் அறிக்கையை வாங்கியது. ஆனால் வழக்கம்போல் மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தாமல் விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

    கடந்த 1972ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் நலம் காக்க அவர்கள் உற்பத்தி செய்த நெல்களை வாங்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உருவாக்கினார். தற்போது அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் இது எதுவும் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார்.

    கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க ஆட்சியில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதி விவசாயிகளை சந்தித்து தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கருணாநிதி முதலமைச்சராக ஆன உடன் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன் வழியிலே தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.

    அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 1.79 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே 1.99 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆண்டுகளில் ரூ.1145 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ரூ.2042 கோடி ஊக்கத்தொகை வழங்கி சாதனை படைத்தது. இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி பாதுகாவலனாக முதலமைச்சர் விளங்கி வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர்.

    அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர்.

    விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்ததால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை.

    சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜீராவால மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது.

    கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.

    கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இது குறித்து தொழிலதிபர்கள் கூறுகையில்:-

    ஏழைகளுக்கு உதவி செய்ய தங்களது தாய் தூண்டியதாகவும் விவசாயிகளின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு போதுமானது என தெரிவித்தனர்.

    • உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
    • அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.

    'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று காலை கும்பகோணத்திற்கு வருகை தந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் பாதிப்பு உள்ளானது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சான்று. ஆய்வு என்ற பெயரில் துணை முதலமைச்சர் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்து பார்த்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது, அவர்களது உட்கட்சி பிரச்சினை. இதில் நான் தலையிட விரும்பவில்லை. அமைச்சர் சேகர் பாபு முதலில் கோவில் பிரச்சினையை சரி செய்யட்டும். அதன் பிறகு, கட்சி பிரச்சினையை பார்க்கட்டும்.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து பா.ஜ.க.-விற்கு ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு மற்றொரு நாள் பதில் அளிப்பதாக கூறி ஒற்றை வரியில் முடித்தார். வடக்கு, தெற்கு எனவும், மொழிவாரியாக திரித்து பேசுவதும், தமிழகத்தில் வன்மத்தை ஏற்படுத்துவதும், கருணாநிதி காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    நானும் டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதனை அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.

    உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
    • மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்துவோர் நலன் கருதியும் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 10-10-2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறு இந்திய அரசைக் தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நம்நாட்டில் இந்த பானத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அதனால் அப்பானத்தின் தரமும் மேம்படும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதிக் கொள்கையானது மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழப் பொருட்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும் அதே வேளையில், மாம்பழக்கூழ் தொழில்களை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இத்தருணத்தில் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவிடுமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மாவட்டங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாற்று நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை.
    • போடி தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 5 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் போடி வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில் முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

    18ம் கால்வாய் தண்ணீர் கடந்த 3 ஆண்டுகளாக தேவாரம் வரை மட்டுமே வருவதாகவும், இதனால் சங்கராபுரம் முதல் போடி வரை உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்காக பலமுறை போராட்டங்கள் நடத்தினார். மேலும் சங்கராபுரம் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    ஆனால் இதற்கு போடி போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்தனர்.

    இந்த நிலையில் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாலையில் தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாற்று நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே 18ம் கால்வாயை சீரமைத்து போடி கடைமடை வரை தண்ணீர் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் சங்கராபுரத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் பாதுகாப்பு உதவிக்கரம் அமைப்பை சேர்ந்த ராஜசேகரன், பொட்டிபுரம் விவசாயிகள் சங்க சிவக்குமார், சிலமரத்துப்பட்டி 18ம் கால்வாய் உயர்திட்ட போராட்டக் குழுவை சேர்ந்த வாசகர் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். போடி தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர்.
    • எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்திற்கு ஐ.டி.பி.எல். எண்ணெய் நிறுவன திட்ட அதிகாரிகள் பொது மேலாளர் தீபக் தலைமையில் 2 கார்களில் வந்தனர். அவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களை அளவீடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள், உடனடியாக மற்ற விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்களை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் மற்றும் தாசில்தார் சபரிகிரி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விவசாயிகள் கூறுகையில், கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு விவசாய நிலத்திற்குள் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டது.

    எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்கக்கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார்.

    இந்தநிலையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய்களுடன் மீண்டும் புதிதாக ஐ.டி.பி.எல். நிறுவனம் எரி காற்றுக்குழாய்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்தநிலையில் எங்களின் எதிர்ப்பை மீறி ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அவர்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
    • மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.

    பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.

    அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.

     இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.

    "வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.

    • வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
    • 990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

    வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி ரேஷனாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

    இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், டிரம்ப் நிறுவனத்திற்கு $5 மில்லியன் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது.

    டிரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

    அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர்.

    வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.

    ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு $3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.

    990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. 

    • வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
    • நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

    டெல்லி:

    டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று, பல்லுயிர் பெருக்கம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. மேலும் அரசுகளும் அதைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் டாக்டர். சுவாமிநாதன் ஒரு படி மேலே சென்று உயிரியல் மகிழ்ச்சி என்ற கருத்தை வழங்கினார். இன்று, இந்த யோசனையையே நாங்கள் இங்கே கொண்டாடுகிறோம். பல்லுயிர் பெருக்கத்தின் வலிமையுடன், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர். சுவாமிநாதன் கூறுவார்.

    எம்.எஸ். சுவாமிநாதனை சந்திப்பது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக இருந்தது. அறிவியல் என்பது வெறும் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்தில் பயன்படுத்துவது மற்றும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றியது. இதை அவர் தனது பணி மூலம் நிரூபித்தார். இன்றும் கூட, அவரது கருத்துக்கள் இந்தியா விவசாயத் துறையில் காணப்படுகின்றன. அவர் உண்மையிலேயே அன்னை பாரதியின் ரத்தினம்.

    பேராசிரியர் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு நமது அரசுக்குக் கிடைத்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

    விவசாயிகள் நலனே இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாகும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

    விவசாயிகள் நலனை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.



    • விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.
    • திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் தான் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை எல்லாம் முறையாக அதிகாரிகளை நியமித்து முழுமையாக தூர்வாரினோம்.

    விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை திமுக அரசு முடக்கிவிட்டது.

    குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை.

    12,000 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுத்தந்தது அதிமுக அரசு.

    விவசாயிகளுக்கு எவ்வளவு இடம் வைத்திருந்தாலும், சேதம் இருந்தாலும் ஒழுங்காக கணக்கிட்டு இழப்பீடு தந்தது அதிமுக அரசு.

    திருவாரூரில் நான் தங்கியிருந்த ரூமில் அடிக்கடி மின்வெட்டு, திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது இயல்பே.

    18,000 நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடிக்கி உள்ளதாக செய்தி பார்த்தேன், மழை வந்தால் வீணாகிவிடும்.

    அதிமுக ஆட்சியில் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து உரிய பணத்தையும் தந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×