என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விளாத்திகுளம் அருகே மழைநீரில் மூழ்கிய 1500 ஏக்கர் பயிர்கள்- விவசாயிகள் வேதனை
- மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது.
- உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நெல், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை தனியார் உப்பளத்தினர் ஆக்கிரமித்ததோடு, தங்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாலங்கள் அமைத்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனால் மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மேல்மாந்தை பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் உப்பள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என பலமுறை அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தற்போது வரை உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் 2 நாட்கள் பெய்த இந்த தொடர் மழைக்கே நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால், விவசாயப் பயிர்கள் பெருமளவில் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உப்பள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், விவசாயிகள், எஞ்சியுள்ள பயிர்களையாவது பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத மழைக்குள்ளாகவே இங்குள்ள உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.






