என் மலர்
நீங்கள் தேடியது "பயிர்கள் சேதம்"
- மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது.
- உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நெல், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை தனியார் உப்பளத்தினர் ஆக்கிரமித்ததோடு, தங்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாலங்கள் அமைத்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனால் மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மேல்மாந்தை பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் உப்பள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என பலமுறை அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தற்போது வரை உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் 2 நாட்கள் பெய்த இந்த தொடர் மழைக்கே நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால், விவசாயப் பயிர்கள் பெருமளவில் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உப்பள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், விவசாயிகள், எஞ்சியுள்ள பயிர்களையாவது பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத மழைக்குள்ளாகவே இங்குள்ள உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்த ஆண்டு மட்டுமில்லை ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது.
- வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொடர் மழையால் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?
விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது?
ஏழை விவசாயிகள் தாங்கள் காலங்காலமாகச் செய்து வரும் உழவுத் தொழில் மூலமே விளைவித்த பொருட்களை விற்று அதைப் பணமாக்கித் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும் என்றால் அதற்கு முழு மூலதனம் என்பது விவசாயமும் அதற்கான உழைப்பும் மட்டுமே! ஆனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இது இந்த ஆண்டு மட்டுமில்லை ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது.
வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள்...
டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன?
பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்தப் பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?
விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும், அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?
கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!
வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும்.
- நகையை அடமானம் வைத்து நெல் சாகுபடி செய்ததாக கண்ணீர் வடிக்கின்றனர்.
- விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம்.
டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பை ஆய்வு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்யவில்லை.
* சாலைகளில் நெல்லை கொட்டி வைத்து 20 நாட்கள் விவசாயிகள் காத்திருந்தனர்.
* காட்டூரில் மட்டும் 4000 மூட்டைகள் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
* திருவாரூர் வடுவூரில் 7500 மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யவில்லை.
* தற்போது நெல்மணிகள் அனைத்தும் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
* விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
* நாள் ஒன்றிற்கு 800 முதல் 900 நெல்மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் கூறினர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
* நாள் ஒன்றிற்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் பொய் கூறுகிறார்.
* விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாவிட்டால் எதற்காக அரசு இருக்கிறது.
* நகையை அடமானம் வைத்து நெல் சாகுபடி செய்ததாக கண்ணீர் வடிக்கின்றனர்.
* விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம்.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்ட் 18-ந்தேதியே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.
* தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெற்று விளம்பரமாகவே உள்ளது.
* ஆதாரவிலையை உயர்த்தினாலும் இடு பொருட்கள் விலையும் உயரதானே செய்கிறது.
* உற்பத்தி அதிகரிக்கும் போது அதற்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களையும் அதிகரிக்க வேண்டும்.
* கொள்முதல் செய்த நெல்லை கூட முழுமையாக பாதுகாக்க முடியாத அரசாங்கம்.
* வேளாண் பட்ஜெட்டில் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும்.
- சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
ஏற்கனவே, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல், கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், இப்போது அறுவடைக்கு தயாராக உள்ள குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களும் தொடர் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இது உழவர்களுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்திருக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கி விடும். சம்பா மற்றும் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கி விடும். இதனால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும். நடப்பாண்டில் குறித்த காலத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உழவர்கள் இருந்தனர். அறுவடைக்கு முன்பாக மழையால் பயிர்கள் சேதமடைந்தால் அவர்கள் செய்த முதலீடு அனைத்தும் வீணாகி பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே உழவர்களைக் காப்பாற்ற முடியும்.
காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்காத நிலையில், அடுத்த பருவமழையிலும் காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
- பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.
உடுமலை:
குடிமங்கலம் வட்டாரத்தில் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத்,உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குடிமங்கலம் வட்டாரத்தில் கொண்டம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் சேதம் ஏற்பட்டுள்ளது.சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஒரு மாதம் வயது கொண்ட காலிபிளவர் மழைநீரில் முழுவதுமாய் மூழ்கி விட்டது.அத்துடன் சுமார் 65 முதல் 70 நாள் வயது கொண்ட காலிபிளவர் பூக்கள் முழுவதும் அழுகி வீணாகியுள்ளது.காலிபிளவரைப் பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் மழை பெய்வது மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.தற்போது பெய்துள்ள கனமழையால் இந்த பகுதியில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காலிபிளவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இதுதவிர சில பகுதிகளில் வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.இதுதவிர பலத்த காற்று வீசினால் வாழை மரங்களும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.சேதத்தைத் தவிர்க்க விவசாயிகள் வடிகால் வசதி,முட்டு கொடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதையும் தாண்டி மழை மற்றும் காற்றினால் தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் கண்டறியப்பட்டால் விவசாயிகள் உடனடியாக தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம்-9944937010,உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார்-9789197648,சங்கவி-8111055320,ராஜசேகரன்-8675556865 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
- பொருளாதார இழப்போடு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
- பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது.தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் துவங்கும் போது அணைக்கு நீர் வரத்து அதிகரித்து ஜுன், ஜூலை மாதத்தில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் திறக்கப்படும்.
முன்னதாக இந்த அணை மூலம் திறக்கப்படும் நீர் மூலம் உடுமலை ,மடத்துகுளம் ,தாராபுரம் தாலுகா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட கல்லாபுரம்-ராமகுளம் கால்வாய் மூலம் சுமார் 3200 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பாசன வசதி செய்து வருகின்றனர்.இப்பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக நெற்கதிர்கள் உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மேலும் இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும் சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும் மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்போடு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில் தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கூறி முறையிடுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:- நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்து இருந்தோம். இந்த நிலையில் தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி இருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து, பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது.
காங்கயம்:
பொதுவாக வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்களில் முயல், கீரி, உடும்பு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வாழும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேய்ச்சல் நிலங்கள் அதிகளவில் இருந்தன. அதில் செம்மறியாடுகள், மாடுகள் மேய்வதற்காக மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைத்து சொந்தப் பயன்பாட்டுக்கு அறுவடை செய்தது போக மீதமுள்ளவற்றை ஆடு, மாடுகளை மேயவிடுவது வழக்கம்.
அது போன்ற மேய்ச்சல் நிலங்களில் பாம்புகள், உடும்பு, கீரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக காணப்படும். இதில் பாம்புகளை கணிசமான அளவில் கீரிகள் வேட்டையாடிவிடும். கீரி, முயல், உடும்பு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்துவர். இதனால் முயல், கீரி உள்ளிட்ட விலங்குகளின் பெருக்கம் என்பது கட்டுக்குள் இருந்தது.
காலப்போக்கில் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், தொழில் கூடங்களாகவும் மாறத் தொடங்கியதும் வன விலங்குகளின் வாழ்விடங்களும் குறையத் தொடங்கின. அதே நேரத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுதல் தடையை அதிகாரிகள் உறுதியாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதால் வேட்டையாடுதல் என்பது குறைந்து போனது. இதனால் முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக காங்கயம் பகுதி கிராமங்களில் முயல்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. காடுகள் அழிக்கப்பட்ட நிலையிலும் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் முயல்கள் குட்டிபோட்டு தங்கள் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக முயல்கள் பசுந்தீவனத்தைதான் அதிகமாக விரும்பி உண்ணும் என்பதால் கொழுக்கட்டை புற்கள் வளர்ந்து நிற்கும் காடுகள், ஆடு, மாடுகளுக்காக பயிரிட்டுள்ள நிலங்கள், வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்கள் செய்யப்பட்ட நிலங்களில் இரவு நேரத்தில் மேய்ந்துவிட்டு பகல் நேரங்களில் சிறிய புதர்களுக்குள் சென்று ஓய்வெடுத்து வருகிறது.
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது:-
தற்காலத்தில் முயல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. வேட்டையாடுதல் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவில் யாரும் வேட்டையாடுவது இல்லை. அதிகரித்து வரும் முயல் கூட்டம் இரவு நேரங்களில் விவசாய பயிர்களையும் கடித்து சேதப்படுத்துகிறது. தொடர்ந்து முயல்களின் பெருக்கம் அதிகரித்தால் அது விவசாயிகளுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள் சில கோவில்களில் வளர்ப்பு பிராணிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும். ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது காக்கை,குருவிகளுக்கு நிகராக கிராமங்கள் தோறும் பலநூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன. பல்லி, ஓணான், தவளை, சிறுபாம்புகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வாழும் மயில்கள் தானியங்களையும் கொத்தித் தின்று வருகின்றன. தானியங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, தட்டைப் பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றையும் உணவாக உட்கொள்ளும்.
மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் மயில் கூட்டம் அபரிமிதமாக பெருகிவிட்டது. குறிப்பாக கிராமங்களில் காக்கை, குருவிகளை காட்டிலும் மயில்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. புதர்களுக்குள்ளும், ஆள் நடமாட்டமில்லாத இடங்களிலும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. முன்பு நரிகள் அதிகமாக இருந்ததால் அவைகள் மயில்கள் இடும் முட்டைகளை தின்று விடும்.ஆனால் தற்ேபாது நரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் மயில்களின் பெருக்கம் அதிகமாகி மதிய நேரங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்களில் சென்று ஓய்வெடுத்துவிட்டு காலை,மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் படையெடுத்து சென்று பயிர்களை கொத்தி சேதப்படுத்துவதுடன் பயிர்களை மிதித்தும் சேதம் செய்வதாக விவசாயிகள் கவலை ெதரிவித்தனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "கடந்த 10வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் 3 முதல் 4 மயில்களே செல்லும். ஆனால் தற்போது அதிக பெருக்கத்தால் ஒரு மயில் கூட்டத்தில் 10 முதல் 15 மயில்கள் செல்கின்றன. மக்காச்சோளம், சோளம், தட்டை உள்ளிட்ட பயிர்களை கொத்தி தின்பதோடு கால்களால் மிதித்தும் சேதம் செய்து விடுகிறது. தவிர சோளம், தட்டை உள்ளிட்ட விதைகளை விதைத்து அது முளைவிடும் தருணத்தில் வேரோடு பிடிங்கித் தின்றுவிடுகின்றன. முன்பெல்லாம் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் மயில்கள் தற்போது விரட்டினால் கூட ஓடுவதில்லை. பட்டாசுகளை வெடித்தாலும் சாதாரணமாக தலையை தூக்கி பார்த்துவிட்டு பயிர்களை கொத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் நாங்கள் தற்போது இந்த மயில் கூட்டம் பயிர்களை சேதம் செய்வதால் செய்வதறியாது தவிக்கிறோம். எனவே மயில்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.
- அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.
- நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.
குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.
இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை டெல்டா மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்தார். அவர்களுடன் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உணவுத்துறை விவசாயத்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
இவர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதங்களை பார்வையிட்டனர்.
ஒவ்வொரு மாவட்டங்களாக சென்ற இவர்கள் விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் விவரங்களை கேட்டு அறிந்தனர். இதுபற்றி முதலமைச்சருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிற மாற்றம் மற்றும் முளைத்தை நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை சம்பா பயிருக்கும் குறைக்கவும் விதிமுறைகளில் தளர்வை அறிவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் சேத மதிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிாரிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்தனர்.
அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.
* கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
* நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.
* நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.
* கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.
* பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி:
மேற்பரப்பு சுழற்சியின் தாக்கத்தால் ஆந்திராவில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
உத்தராந்திரா முதல் ராயலசீமா வரை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மழைநீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், மிளகாய், உளுந்து, தினை பயிர்கள், வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று காரணமாக சாலையோரம் இருந்த பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்து மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏலூர் மாவட்டம் ஜங்காரெட்டிகுடம் பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 38) என்ற பெண் தனது வீட்டின் அருகே சிறிய கொட்டகை அமைத்து கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மரம் ஒன்று கடை மீது விழுந்தது. கடையில் இருந்த சந்தியா மீது மரம் விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அனந்தபுரத்தில் மின்னல் தாக்கி ஸ்ரீவித்யா (38) என்ற பெண் உயிரிழந்தார். அல்லூர் மண்டலம் மணல்மேட்டில் இடி தாக்கி 4 கால்நடைகள் இறந்தன.
ஸ்ரீகாகுளம் மற்றும் நெல்லூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள தானியங்களை அரசு கொள்முதல் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் இருப்பு வைத்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் தானியங்கள் நனைந்து நிறம் மாறிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல்நாடு பிரகாசம், என்டிஆர், கர்னூல், அனந்தபூர், அல்லூரி சீதாராமராஜ், ஒய்எஸ்ஆர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல 100 ஏக்கரில் மிளகாய் அறுவடை செய்து இருப்பு வைத்திருந்தனர்.
மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தராந்திரா, மத்திய ஆந்திரா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மீதமுள்ள மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது.
- செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பக தோப்பு பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் காட்டாறுகள் வறண்டு காணப்படுகிறது.
கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வெயில் அடிப்பதால் ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மலை அடிவாரத்திற்கு வருகின்றன. அடிவா ரப்பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக மலை அடிவாரத்திற்கு தண்ணீர் தேடி வரும் ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள வாழை, மா, பப்பாளி உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் அடிவாரத்தில் அமைக்கப்பட்டது போல் மலைப்பகுதியிலும் தண்ணீரை தேக்கி வைத்தால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- காட்டு பன்றிகள், குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
- விவசாயி களின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மதுரை
மதுரை மேற்கு வட்டாட்சி யர் அலுவ லகத்தில் விவசா யிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
சேதமடைந்துள்ள துவரிமான் கண்மாய் ஷட்டரை சரி செய்ய வேண்டும். கீழமாத்தூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கீழக் குயில்குடி தட்டானூர் பொட்டக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், துவரிமான் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது.
அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






