search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிமங்கலம் பகுதியில்  மழையால் சேதமான பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
    X

    மழையால் சேதமான பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    குடிமங்கலம் பகுதியில் மழையால் சேதமான பயிர்களை அதிகாரிகள் ஆய்வு

    • வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    • பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.

    உடுமலை:

    குடிமங்கலம் வட்டாரத்தில் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத்,உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் கொண்டம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் சேதம் ஏற்பட்டுள்ளது.சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஒரு மாதம் வயது கொண்ட காலிபிளவர் மழைநீரில் முழுவதுமாய் மூழ்கி விட்டது.அத்துடன் சுமார் 65 முதல் 70 நாள் வயது கொண்ட காலிபிளவர் பூக்கள் முழுவதும் அழுகி வீணாகியுள்ளது.காலிபிளவரைப் பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் மழை பெய்வது மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.தற்போது பெய்துள்ள கனமழையால் இந்த பகுதியில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காலிபிளவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இதுதவிர சில பகுதிகளில் வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.இதுதவிர பலத்த காற்று வீசினால் வாழை மரங்களும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.சேதத்தைத் தவிர்க்க விவசாயிகள் வடிகால் வசதி,முட்டு கொடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதையும் தாண்டி மழை மற்றும் காற்றினால் தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் கண்டறியப்பட்டால் விவசாயிகள் உடனடியாக தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம்-9944937010,உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார்-9789197648,சங்கவி-8111055320,ராஜசேகரன்-8675556865 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

    Next Story
    ×