என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    • சிறுமி கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள சோரோட் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பேபி(வயது68) மற்றும் அவரது பேத்தியான 9 வயது சிறுமி த்ரிஷானா ஆகிய இருவரின் மீதும் அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் மோதியது.

    இதில் மூதாட்டி பேபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த கார் 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எந்த காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி தற்போது வரை கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகவே இந்த வழக்கை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    அந்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேசிய காப்பீட்டு நிறுவனம் ரூ1.15கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்தவும், அதில் ரூ.25 லட்சத்தை அவளது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக எடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
    • தாய், மகள் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. இன்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .

    இவர்களது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது.

    அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    • மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார்.
    • நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.

    முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை 'நாய்' என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தற்கொலைக்கு முயன்றார். அவருடைய பெற்றோர் சடோமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர், சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவருடைய பெற்றோர், தங்கள் மகளின் இந்த நிலைக்கு காரணம் அவர் வேலை பார்த்த நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும்தான் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த டோக்கியோ மாவட்ட கோர்ட்டு, இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு சாதன உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய், தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதையடுத்து அவருக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் மிட்சுரு சகாயும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சடோமியின் குடும்பத்தினரிடம் அந்த நிறுவனம் மன்னிப்பும் கோரியது.

    • 2005-ல் பாலியல் குற்றத்திற்காக சோஹன் சிங்கிற்கு ஆயுள் தண்டனை பெற்றார்.
    • மேல் முறையீட்டுக்கு பின் சோஹன் சிங்கிற்கு 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    மத்தியபிரதேசத்தில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடந்த 2005-ல் பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற சோஹன் சிங்-ன் தண்டனைக்காலம் மேல் முறையீட்டுக்கு பின் 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.

    சோஹன் சிங் 11 ஆண்டுகள் 6 மாதம் 24 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 4 ஆண்டுகள் 7 மாதம் அவர் சிறையில் இருந்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்த சோஹன் சிங்கிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

    • விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.

    பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்நிலையில், பணியிடத்திற்குச் சென்று திரும்பும் போது ஏற்படும் விபத்துகளுக்கும், ஊழியர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பணியாளர் இழப்பீட்டுச் சட்டம், 1923-ன் கீழ் இழப்பீடு வழங்க உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சர்க்கரை ஆலை காவலாளி வேலைக்குச் செல்லும் வழியில் இறந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    வேலைக்குச் செல்லும்போதோ அல்லது திரும்பும்போதோ விபத்து ஏற்பட்டு நீங்கள் காயமடைந்தால், மருத்துவரின் கட்டணம் மற்றும் மருந்துகள் உட்பட சிகிச்சைக்கான அனைத்து செலவையும் அவரது முதலாளி தான் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, பணியிடத்திற்கு செல்லும் அல்லது திரும்பும் பயணத்தை, பணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது.

    எனவே, இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

    பணியாளர்கள் அலுவலகத்திற்கு பயணிக்கும்போது அல்லது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டால் கூட இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தவுடன் இதுகுறித்து முதலாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்துக்கான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவை இழப்பீடு பெற தேவை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.

    • கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

    மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    இந்நிலையில், தாராலி கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் உடனடி நிதியுதவி வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

    • காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    • அஜித்குமார் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது

    அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், அஜித்குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவு படி நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

    ஏற்கனவே அஜித்குமார் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    • ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது.
    • மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.

    இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.

    இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர்.

    நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.

    இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும்.

    இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.  

    • 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது.
    • 2012 ஆம் ஆண்டில் BCCI நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI), கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    RSW நிறுவனம், 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால், 2012 ஆம் ஆண்டில் BCCI நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.

    இதற்கு எதிராக RSW நிறுவனம் நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ரூ.555 கோடி இழப்பீடு கோரப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி வழங்க BCCI-க்கு உத்தரவிட்டுள்ளது.

    இழப்பீடு வழங்கப்போகிறதா அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யபோகிறதா என பிசிசிஐ தரப்பு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

    • வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
    • காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

    இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

    இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    • மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
    • மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டத்தின் பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ணா, திட்ட மேலாளர் டாடா ராவ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பால தூண்கள் விழுந்து உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.5 லட்சமும், எல் அண்ட் டி நிறுவனம் ரூ.20 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    ×