என் மலர்
இந்தியா

ஆபீசுக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டால்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் இழப்பீடு வழங்க வேண்டும்.
- இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.
பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்நிலையில், பணியிடத்திற்குச் சென்று திரும்பும் போது ஏற்படும் விபத்துகளுக்கும், ஊழியர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பணியாளர் இழப்பீட்டுச் சட்டம், 1923-ன் கீழ் இழப்பீடு வழங்க உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்க்கரை ஆலை காவலாளி வேலைக்குச் செல்லும் வழியில் இறந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
வேலைக்குச் செல்லும்போதோ அல்லது திரும்பும்போதோ விபத்து ஏற்பட்டு நீங்கள் காயமடைந்தால், மருத்துவரின் கட்டணம் மற்றும் மருந்துகள் உட்பட சிகிச்சைக்கான அனைத்து செலவையும் அவரது முதலாளி தான் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, பணியிடத்திற்கு செல்லும் அல்லது திரும்பும் பயணத்தை, பணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது.
எனவே, இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.
பணியாளர்கள் அலுவலகத்திற்கு பயணிக்கும்போது அல்லது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டால் கூட இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தவுடன் இதுகுறித்து முதலாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்துக்கான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவை இழப்பீடு பெற தேவை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.






