என் மலர்
இந்தியா

2 மணிநேர தாமதம் - 7 ஆண்டுகளுக்கு பின் உ.பி. பெண்ணுக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!
- கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பெண் ரூ.20 லட்சம் இழப்பீடு கோரினார்.
- இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது
உத்தரப் பிரதேசத்தில் 2 மணி நேரம் தாமதமாக வந்த ரயிலால் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை தவறவிட்ட பெண்ணுக்கு, ரூ.9.10 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை ரயில்வேத்துறை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 12% வட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்ரிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மே.7ஆம் தேதியன்று லக்னோவில் நடந்த தனது கல்லூரி சேர்க்கைக்கான பிஎஸ்சி பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வைத் தவறவிட்டார். சம்ரிதிக்கு லக்னோவில் உள்ள ஜெய் நாராயண் பி.ஜி கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இதற்காக பஸ்தி ரயில் நிலையம் வந்த சம்ரிதி, 11 மணிக்கு லக்னோ சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். தேர்வு 12.30 மணிக்கு. இந்நிலையில் இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் ரயில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்துள்ளது.
இதனால் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்லமுடியவில்லை. தேர்வு எழுத முடியாமல் போனதால் அந்த வருடம் சம்திரியால் கல்லூரியில் சேரமுடியாமல் போயுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 11, 2018 அன்று மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த சம்ரிதி ரூ.20 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது நுகர்வோர் நீதிமன்றம். ரயில்வே சேவையில் குறைபாடு இருந்ததையும், தாமதத்திற்கான முறையான காரணத்தை ரயில்வே விளக்கத் தவறியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதுதொடர்பாக பேசிய சம்ரிதியின் வழக்கறிஞர் பிரபாகர் மிஸ்ரா,
இரயில் தாமதம் காரணமாக அவரால் சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்தை அடைய முடியவில்லை, இதனால் அவரது முழு கல்வி ஆண்டும் வீணானது. இந்த நீண்ட சட்டப் போராட்டம் மிகவும் சோர்வளிப்பதாக இருந்தாலும் அவசியமான ஒன்றாக இருந்தது என்றார்.
மேலும் "இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, நீதிமன்றம் ஒரு கணிசமான அபராதத்தை விதித்துள்ளது," என்று அவர் கூறினார்.






