search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Product"

    திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி 1936-ல், உருவாக்கப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை சட்டத்தை சீராய்வு செய்ய விவசாயிகள், தங்கள் ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என வேளாண் வணிகத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில், 1928-ல் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் மெட்ராஸ் வணிகப்பயிர் சட்டம், 1933ல், தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக திருப்பூர் காட்டன் மார்க்கெட் கமிட்டி 1936-ல், உருவாக்கப்பட்டது.

    வேளாண் விளைபொருள் விற்பனையை முறைப்படுத்திட 1933-ல் இயற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகு சமூக பொருளாதாரத் தேவையை கருத்தில் கொண்டு 1959 மற்றும் 1987 ஆண்டுகளில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

    தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருளை விற்பனை செய்ய 27 விற்பனை குழுக்களின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் 1987ல் இருந்து அவ்வப்போது ஏற்படும் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மின்னணு சந்தை, மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம், ஒருமுனை மார்க்கெட் கட்டண வசூலிப்பு உள்ளிட்ட மாற்றங்கள் 2017ல் கொண்டு வரப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும், இதர வணிக இடங்களிலும் விற்பனை செய்யும் வகையில் கடந்த, 2020ல் மீண்டும் மாற்றப்பட்டது.

    தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு, வேளாண் விற்பனை சந்தையை மேம்படுத்திட, மேற்படி சட்டத்தைச் சீராய்வு செய்ய அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் மாநில வேளாண்மை விற்பனை சந்தை முறை மற்றும் அதன் வழிமுறைகளை உருவாக்க தேவையான மாற்றங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்க அரசால் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர் விவசாயிகள், வியாபாரிகளிடம் இருந்து, சட்ட சீராய்வுக்கான கருத்து மற்றும் ஆலோசனைகளை வரவேற்றுள்ளனர். வரும் ஜூன் 6-ந் தேதிக்குள், தங்கள் கருத்துகளை விவசாயிகள் தெரிவிக்கலாம்.

    விவசாயிகள், 93848 76300 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாகவும், உழவன் மொபைல் செயலி, agrimarketing.rm@gmail.com என்ற இ-மெயில் வாயிலாகவும் அனுப்பலாம்.

    மேலும், தபால் வாயிலாக, வேளாண்மை இணை இயக்குனர் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சிப்பெட் ரோடு, கிண்டி, சென்னை -600032 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×