search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief"

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
    • வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    சென்னை:

    சமீபத்தில் சென்னை யில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு நாளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு நிவா ரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    அரிசி பெட்ஷீட் மற்றும் நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட செயலாளர் அசோக், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.முல்லை செல்வம், சா.சங்கர் வட்டச் செயலாளர் கே.ஆர்.மணி, ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர், குட்டி உள்பட ஏராளமான பகுதி வட்ட நிர்வாகிகள், மகளிரணி, வடிவேலு, ஜிம்பாபு, ஆறு, மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.
    • உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

    இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

    உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    • சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.
    • மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிக்ஜம்... மிக் ரக போர் விமான போல் சுழன்று வந்தது. சென்னையை போட்டு தாக்கி விட்டு சென்றது. அது ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து மீள முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.

    இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

    சேறும், சகதியும் நிறைந்து கிடக்கும் இந்த வீடுகளை சுத்தம் செய்து, மின் சாதனைங்களை பழுது பார்த்து மீண்டும் குடியேற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க வேண்டும்.

    பல வீடுகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    அம்பத்தூர் பகுதியில் 1,800 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தொழில் நிறுவன சங்க தலைவர் கன்னியப்பன் தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இனி வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் வந்தால்தான் இந்த பழுதை சரி செய்ய முடியும் என்கிறார்கள்.


    பெருங்குடியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க தலைவர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

    திருமுடிவாக்கத்தில் 600 நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. 6 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போல் திருமழிசையில் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களிலும் டீ கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை சுமார் 8 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களை 3 நாட்கள் மூடியது மற்றும் பொருட்கள் சேதம் காரணமாக சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்த காய்கறிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமலும், மழைத் தண்ணீரில் அழுகியும் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்டது. கொட்டிய காய்கறிகள் மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரி எஸ்.எஸ்.டி. ராஜேந்திரன் கூறினார்.


    அழுகிய பூக்களும், பழங்களும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது. இதன் மதிப்பும் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 மாவட்டங்களிலும் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை 60 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் பாதிப்பு, பொருட்கள் சேதம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மீனவ தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நாகை துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் 27 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கல்லார், நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், ஆற்காட்டுதுறை வேதாரண்யம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிக ஒளி வீச்சும் டார்ச் லைட், மழைக்கான கோட்,மற்றும் துறைமுகத்தில் பணியாற்றும் மீனவ பெண் பயனாளிகளுக்கு புடவை உள்ளிட்ட அலுமினிய கூடைகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். காற்று, மழை, சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் தனது மீனவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

    மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடைப்பெற்றது.

    • கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பகுதிகளை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைக்க ஏதுவாக, மாவட்டத்தில் மண்டல அளவிலான குழுக்கள், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்படும் மக்களை மீட்டு தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    இதில் ஒரு முகாமில் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் மக்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு துணையாக 5000 முதல்நிலை பொறுப்பாளர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் 300 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 206 மரம் அறுக்கும் இயந்திரம், 4,300 மணல் மூட்டைகள், 40,000 சாக்கு பைகள், 2,115 சவுக்கு மரங்கள், 59 நீர் இறைக்கும் இயந்திரம், 24 நீர் உறிஞ்சும் இயந்திரம், 163 லைப்பாய், 142 லைப் ஜாக்கெட் மற்றும் தேவையான மீட்பு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாத்துறை சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் இதர வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

    மின் பகிர்மான கழகம் சார்பில் 4,500 மின் கம்பம், 100 மின்மாற்றிகள், 120கி.மீ. மின் கம்பிகள் போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல குறுவை நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் நிவாரண கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
    • நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது சேதமடைந்து உள்ளது.

    குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது அறு வடைக்கு தயாராக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் அழுகியது. இத னால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில் கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
    • தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி கடைதெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.ஜி. சண்முகசுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்:-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகி நாசமாகின. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களும், பயிர் காப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.

    நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக கேட்போம். கேட்பது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் அதிகாரத்திற்கும் கூடிய விரைவில் வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி நன்றி கூறினார்.

    ×