என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து"

    • ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தாய்போ:

    சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தலா 35 மாடிகளுடன் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரம் வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பிடித்து கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. இதில் பலத்த காற்று காரணமாக 7 கட்டிடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    உடனே தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

    ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். குடியிருப்புகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. இதில் கீழ் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டனர். அதே வேளையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேல் தளங்களில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் கரும்புகை வெளியேறியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இதுவரை 75 பேர் பலியானதாக தெரிவிக்கப் பட்டது. ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாயமான 200 தேடும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    தீ விபத்து தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது

    ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது.
    • காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொயழுந்துவிட்டு எரிந்தது. இதில், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.

    விபத்தில், கார் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரில் இருந்து உடல் கருகிய நிலையில் ஓட்டுனரின் உடலை மீட்டனர்.

    மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    சரஜெவோ:

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
    • பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
    • பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
    • தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர்.

    வங்கதேச தலைநகர் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

    விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இடத்தில தீ விபத்து ஏற்பட்டது.

    விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர். 

    • அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

    • ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    டாக்கா:

    வங்கதேசம் தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நச்சுப் புகையை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

    • தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.

    தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.

    தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது.
    • தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாட்டுத்தாவணி அருகே மேலூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றில் பல்வேறு பொருட்களை அட்டைப் பெட்டியில் எடுத்து செல்லப்பட்டன.

    இந்நிலையில் வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது. இதனால் வாகனத்தில் இருந்த பொருட்களிலும், அட்டை பெட்டிகளில் தீ மளமளவென எரிந்தது.

    வாகனத்தில் இருந்த பொருட்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் சில பொருட்கள் வெடிக்க தொடங்கியதால் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறியடுத்து அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடினர்.

    நல்வாய்ப்பாக தீ விபத்தில் இருந்து தப்பிய ஓட்டுநர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மதுரையில் உள்ள பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாநகர் மீனாட்சி பஜார் பகுதியில் உள்ள செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் பஜாரில் அமைந்துள்ள 184-ம் எண் கொண்ட செல்போன் விற்பனை கடையில் ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் மாலை சென்றுள்ளனர்.

    இந்நிலையில் விளக்கில் தீயானது காற்றில் பரவ தொடங்கி கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.

    மேலும் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த மூன்று கடைகளில் பரவத் தொடங்கிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

    பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலை அளித்து பெரியார் பேருந்து நிலையம் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தீயை தண்ணீர் தெளித்து அணைத்தனர். பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 4 செல்போன் கடைகளில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தன.

    இது குறித்து திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் வீணாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
    • பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.

    திசையன்விளையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் வாரச்சந்தையும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், கருவாடு, மீன், சிக்கன், மட்டன், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதோடு குளிர்பான கடைகள், டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகள் வியாபாரிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் தரை வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு கடைகள் வைத்திருப்போர் தற்காலிகமாக தென்னந்தட்டி மற்றும் தகர சீட்டு கொண்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில் அதிகாலை பேரூராட்சி சந்தையின் வெளிப்புறம் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென சந்தையின் உள்புறம் இருந்து புகை மண்டலமாக வருவதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது சந்தை வடக்கு வாசல் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

    இதனை கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அங்கு இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் சந்தை முழுவதும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் திசையன்விளையை சேர்ந்த ராபர்ட் பாக்கியசீலன்(வயது 30) என்பவரின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பழக்கடை, வாகனேரியை சேர்ந்த அன்னக்கிளி(48) என்பவரின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிக்கடை மற்றும் தராசு, மர அலமாரி, தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

    தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான திசையன்விளை தினசரி மற்றும் வாரச்சந்தையில் இது போன்று தீ விபத்து அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. பேரூராட்சி சந்தையினை நவீனப்படுத்திட ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே ஸ்மார்ட் மார்க்கெட்டாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்தை தடுக்க முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×