search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    • மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார்
    • பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்

    சிவசேனா தேர்தல் பிரச்சார பாடலில் இருந்து 'இந்து தர்மா' மற்றும் 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த வாரம், கட்சியின் பிரச்சார பாடலாக 'மஷல் கீத்' பாடலை வெளியிட்டோம். அதில் 'இந்து தர்மம்', 'ஜெய் பவானி' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது. பாடலில் 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' என்ற முழக்கம் உள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தியின் பெருமை.

    மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு, மகாராஷ்டிராவின் குலதெய்வமான துல்ஜா பவானி தேவி மீது இவ்வளவு வெறுப்பு இருப்பதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று 'ஜெய் பவானி'யை நீக்கச் சொல்கிறார்கள், நாளை 'ஜெய் சிவாஜி'யை நீக்கச் சொல்வார்கள். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நரேந்திர மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த இரண்டு பேச்சுகளையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே தேர்தல் ஆணையம் இப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அந்த ஆணையம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பிரதமர் மோடியின் தீவிர பக்தரான வர்ணேகர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார்
    • பிரதமராக மோடி வந்ததால்தான் நமது நாடு வல்லரசு நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது

    பிரதமர் மோடியின் தீவிர பக்தரான வர்ணேகர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார்.

    கர்நாடகா மாநிலம் சோனார்வாடா பகுதியைச் சேர்ந்தவர் அருண்.எஸ்.வர்ணேகர். இவர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர். பிரதமர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் தேசிய தலைவர்களின் படத்தை ஒட்டியுள்ளார்.

    இந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று தனது விரலை துண்டித்து பிரார்த்தனை செய்தார். மேலும், விரைல வெட்டும்போது, வெளியேறிய இரத்தம் மூலம் சுவரில் காளிமாதா மோடியைக் காக்க எனவும், 'மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்' எனவும் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த, அருண்.எஸ்.வர்ணேகர், பிரதமராக மோடி வந்ததால்தான் நமது நாடு வல்லரசு நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது.

    தேசத்தையும், நாட்டு மக்களையும் மற்றவர்களைவிட மோடி அதிகமாக நேசிப்பதால், அவரே மீண்டும் பிரதமராக வரவேண்டும். இதற்காகத்தான் எனது விரலை துண்டித்தேன் என்றார்.

    அருண்.எஸ்.வர்ணேகர் கத்தியால் தன் விரலை வெட்டிக் கொள்ளும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
    • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் - என்.ஐ.ஏ

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் ஷிவமோகா பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தியதில் 2 இளைஞர்களை கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • பிப்ரவரி, மார்ச்சில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரை தடையின்றி திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
    • கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா குழுவினர் இன்று காலை மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு 13 சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமை தாங்கி உள்ளனர்.

    இதில் பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பீன்யா போலீஸ் நிலையம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பவர் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு அவரிடம் கேட்டனர்.

    இதையடுத்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உதவி கமிஷனர் ஜீப் டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோர் சேத்தனிடம் இருந்து முன்பணமாக ரூ.50,000 வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணா தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோலார் மாவட்டம் பங்கராபேட் தாலுகாவின் ஜே.குல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தப்பா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரிடம் பஞ்சாயத்தில் கணக்கு தொடங்க ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முனியப்பா முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அவர் மீதி பணம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்ட பள்ளாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளர் வீரண்ணா விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார். 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கும்போது அவர் பிடிபட்டார். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு, உத்தர கன்னடா, பிதர், ராமநகரா, கார்வார், சன்னபட்னா உள்ளிட்ட 60 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள், சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    • புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.
    • தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

    புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டை போல ரசாயனம் சேர்க்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதே போல், கடந்த வாரம் கோவாவில் உள்ள மபுசா நகரின், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மீண்டும் பெரியார், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • நீக்கப்பட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி தொடர்பான பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை

    2022-23 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக அரசு மாற்றம் செய்தது. அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டது. இது கர்நாடகா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், 2024-25 கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது. அதில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில், மீண்டும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம் சாவித்ரிபாய் பூலே அவர்களின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு, இத்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

    இருப்பினும், நீக்கப்பட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி தொடர்பான பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இக்குழு பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'எல் நினோ' என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது

    'எல் நினோ' கால நிலை முடிவுக்கு வந்தது. வரும் தென்கிழக்கு பருவமழைக்குப் பின் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    'எல் நினோ' என்பது பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. இதனால் அதீத மழை, திடீர் புயல், கடுமையான வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

    கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது.

    மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

    அவர் தனது X பக்கத்தின் பதிவில் "எல் நினோவிற்கு குட் பை. வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.


    • இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த 12-ந் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதமும், 1 கோடிக்கு மேல் வருவாய் வரும் கோவில்களில் 10 சதவீதத்தையும் வரியாக வழங்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்று இருந்தது.

    இதற்கு பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் வருவாயை அரசு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மேல்சபையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது.

    மேல்சபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்து.
    • அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள் உயிர் தப்பியது.

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளனதாக கூறப்பட்டுள்ளது.

    ×