என் மலர்
இந்தியா

VIDEO: ஆர்.என்.ரவி பாணியில் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறிய கர்நாடக ஆளுநர்!
- ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
- கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது
முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இன்று (ஜனவரி 22) சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மரபுப்படி அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது.
தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த ஆளுநர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
வழக்கமாக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் ஆளுநர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.
முன்னதாக நேற்று முன் தின் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள், தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4 வது ஆண்டாக வெளியேறினார்.
அதேபோல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார்.
இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.






