என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • காலனித்துவ கால "மெக்காலே மனநிலையை" மாற்றும் நோக்கிலான சீர்திருத்தத்தை தமிழகச் சமூகம் ஏற்றுக்கொண்டது.
    • திமுகவின் எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான்

    தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைமீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா முழுவதும் அறிவர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இக்கொள்கையை ஏற்றால்தான் கல்விநிதி என ஒருசில நிதிகளையும் பிடித்தம் செய்துவைத்துக்கொண்டு விடுவிக்க மறுத்து வருகிறது மத்திய அரசு.

    இதுதொடர்பாக பலமுறை திமுக தலைவர்களுக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வார்த்தைபோர் நிலவியுள்ளது. அதன் விளைவுதான் தற்போது நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த எம்.பி. கமல்ஹாசனின் உரையும். தற்போதுவரை இது தொடர்கிறது. என்ன நிகழ்ந்தாலும், நிதியே ஒதுக்காவிட்டாலும் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

    இந்நிலையில், மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு மக்கள் பன்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், திமுகதான் அதை அரசியலாக்குகிறது எனவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த எதிர்ப்பு அரசியல் இயல்பானதுதான் என்றும், பன்மொழி அறிவு என்பது புதிய உலகின் ஒரு ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார். 

    • நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது.
    • அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனாளர்களை கடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    பாஸ்டேக் என்பது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நில்லாமலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாமலும் கட்டணம் செலுத்துவதற்காக, தேசிய மின்னணு சுங்க வசூல் திட்டத்தின் கீழ், ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்ப டுத்தி செயல்படும் ஒரு டிஜிட்டல் முறை ஆகும்.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு 15-ந்தேதி முதல் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பாஸ் வாங்கிய நாளில் இருந்து, ஓராண்டுக்கு அல்லது 200 சுங்கச்சாவடிகள், இதில் எது அதிகமோ அதுவரை செல்லுபடியாகும்.

    தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனாளர்களை கடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் மொத்தமாக 26.55 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. மாநிலங்கள் வாரியான பயன்பாட்டில், நாட்டின் மொத்த ஆண்டு பாஸ் பரிவர்த்தனைகளில் 14 சதவீதத்துடன் சண்டிகார் முதலிடத்தில் உள்ளது.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு 12.3 சதவீதத்துடன் 2-ம் இடமும், டெல்லி 11.5 சதவீதத்துடன் 3-ம் இடத்தில் உள்ளன. டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடி, அந்த சாவடியில் இடம் பெறும் மொத்த கார் கடப்புகளில் சுமார் 57 சதவீதம் ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுவதால் முதலிடத்தில் உள்ளது.

    இதனைத் தொடர்ந்து டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள முண்டகா சுங்கச்சாவடி மற்றும் சோனிபட் மாவட்டத்தின் ஜின்ஜோலி சுங்கச் சாவடி, இரண்டிலும் வணிகமற்ற வாகனங்களின் சுமார் 53 சதவீத கடப்புகள் ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுகின்றன. அனைத்து வணிகமற்ற வாகனங்களுக்கும் இந்த பாஸ் பொருந்தும்.

    ராஜ்மார்க் யாத்திரா செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய இணையதளம் மூலம் ஒருமுறை கட்டணம் செலுத்திய பின், அதே வாகனத்துடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக்கில் இரண்டு மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படுகிறது.

    • வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
    • 2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, மாநிலத்தில் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,097ஆக உயர்ந்துள்ளது. இது நிகழ்வுகளில் கூர்மையான மற்றும் தொடர்ச்சியான அதிகரிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை திறன் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே கவலைகளை எழுப்புகிறது. வலுவான பரிசோதனை திட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் தலையீடுகள் இல்லாமல், வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீராக இருந்தது. 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும்; 2023-ல் 92,816 ஆகவும்; 2024-ல் 96,486 ஆகவும் இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

     

    இந்த தொடர்ச்சியான அதிகரிப்பு, அதிகரித்து வரும் நோய் சுமையையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர். தமிழ்நாட்டில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,097-ஐ எட்டியுள்ளது.

    அதன்படி, சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,505. காஞ்சிபுரத்தில் 7,295பேரும், வேலூரில் 6,525பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் 10,821 இறப்புகள் கருப்பை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களால் மட்டுமே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    • 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கைத் தாக்கல் செய்தது.
    • மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி

    தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் முறையான அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட்டது.

    மேலும், தமிழ்நாட்டின் புகாரை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டம், 1956-ன் பிரிவு 5-ன் கீழ் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கவும் உத்தரவிட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு அந்த மனுவில், குறிப்பாக மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாகத் தீர்ப்பாயம் அமைப்பதே தீர்வாகும் என நீதிமன்றம் முடிவு செய்தது.

    கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீரைத் திசைதிருப்பும் பணிகளை மேற்கொள்வது, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பாதிப்பதாகக் கூறி 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. 

    • மத்திய அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமில்லை.
    • டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை தந்து ஏமாற்றுகிறது பாஜக அரசு

    பாஜகவிற்கு சித்தாந்த ரீதியாக சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழர்கள் மீது பாஜக கொண்டுள்ள வன்மம் தீராது என்பதை இந்த ஒன்றிய பட்ஜெட் நிரூபித்து விட்டது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

    பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்!

    எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்

    ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்!

    வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை. பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.

    தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டிற்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

    கடந்த காலத்தில் பீகார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக 'பீகார் பட்ஜெட்டா!' என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க 26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி எனச் சுமார் 70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.

    மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.

    விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.

    பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா? ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?

    பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அதன் விளைவு என்ன தெரியுமா? பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச் சந்தையே பறைசாற்றிவிட்டது.

    தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கைவிடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி.

    அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார். 

    • பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
    • அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

    சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

    தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.

    சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,

    இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்.

    அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

    ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது.
    • திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் வரவேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன்,

    "மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. தே.ஜ.கூட்டணி கூட்டம் நடக்கிறது; சூரியன் இல்லவே இல்லை. இந்த இயக்கம் மாபெரும் இயக்கம். ஆட்சி மாற்றம் நிச்சயம் உறுதி. அதற்காக வேலையை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை ஒழிக்க வேலை நடந்துகொண்டிருக்கிறது.

    11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்கள். 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். இந்த 11 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு நிதி அளித்துள்ளார்" என தெரிவித்தார். 

    • முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.
    • தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் முத்திரையாகச் செயல்படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

    இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது.

    அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றன.

    இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினை பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளி விவரங்களாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றன.

    இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.

    • சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
    • காலக்கெடு முடிந்துவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

    தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் திருத்தப் பணிகளின்போது (SIR), போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    நீக்கப்பட்ட இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.

    இன்று (ஜனவரி 18) பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான கடைசி நாள். காலக்கெடு முடிந்துவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

    அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம்
    • தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக மாற்றம்

    தமிழ்நாட்டில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராகவும்,

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ், தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும், சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளர் உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



     


    • நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது.
    • தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. .

    பீகாரில் நகைக்கடைகளில் பெண்கள் முகத்தை மூடி வர தடை விதிக்கப்பட்டது. அதே போல் உ.பி. வாரணாசியிலும் ஹிஜாப் அணிந்து வர நகைக்கடைகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழகத்தில் நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    ஆனால் இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 

    இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை - தமிழ்நாட்டில் அல்ல!

    'பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்' என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

    ஆனால், நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று கூறப்பட்டுள்ளது. 

     

    • மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர்.
    • சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    சென்னை:

    புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனால், சிகரெட் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.

    இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.

    அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ''மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை'' என தெரிவித்தனர்.

    சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    ×