என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்
    X

    புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

    • முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.
    • தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்குப் பறைசாற்றும் முத்திரையாகச் செயல்படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

    இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது.

    அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல்சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றன.

    இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினை பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளி விவரங்களாக தெரிவித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகழ்பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றன.

    இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது.

    Next Story
    ×