பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம்: அதிக பயனாளர்களுடன் முன்னிலையில் தமிழ்நாடு

நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனாளர்களை கடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம்: அதிக பயனாளர்களுடன் முன்னிலையில் தமிழ்நாடு
Published on

பாஸ்டேக் என்பது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நில்லாமலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாமலும் கட்டணம் செலுத்துவதற்காக, தேசிய மின்னணு சுங்க வசூல் திட்டத்தின் கீழ், ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்ப டுத்தி செயல்படும் ஒரு டிஜிட்டல் முறை ஆகும்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு 15-ந்தேதி முதல் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பாஸ் வாங்கிய நாளில் இருந்து, ஓராண்டுக்கு அல்லது 200 சுங்கச்சாவடிகள், இதில் எது அதிகமோ அதுவரை செல்லுபடியாகும்.

தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனாளர்களை கடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்தமாக 26.55 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. மாநிலங்கள் வாரியான பயன்பாட்டில், நாட்டின் மொத்த ஆண்டு பாஸ் பரிவர்த்தனைகளில் 14 சதவீதத்துடன் சண்டிகார் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு 12.3 சதவீதத்துடன் 2-ம் இடமும், டெல்லி 11.5 சதவீதத்துடன் 3-ம் இடத்தில் உள்ளன. டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடி, அந்த சாவடியில் இடம் பெறும் மொத்த கார் கடப்புகளில் சுமார் 57 சதவீதம் ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுவதால் முதலிடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள முண்டகா சுங்கச்சாவடி மற்றும் சோனிபட் மாவட்டத்தின் ஜின்ஜோலி சுங்கச் சாவடி, இரண்டிலும் வணிகமற்ற வாகனங்களின் சுமார் 53 சதவீத கடப்புகள் ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுகின்றன. அனைத்து வணிகமற்ற வாகனங்களுக்கும் இந்த பாஸ் பொருந்தும்.

ராஜ்மார்க் யாத்திரா செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய இணையதளம் மூலம் ஒருமுறை கட்டணம் செலுத்திய பின், அதே வாகனத்துடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக்கில் இரண்டு மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com