search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Rumor"

  • கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.
  • வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

  சென்னை:

  தமிழக அரசியலில் தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கலைஞர் நீண்ட காலம் முதலமைச்சராக பணியாற்றினார்.

  அவரது காலத்திலேயே மு.க.ஸ்டாலின் கட்சியில் இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றார். அதன் பிறகு சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி தனது ஆளுமை திறனை வெளிப்படுத்தினார்.

  இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கலைஞர் வழங்கினார். கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.

  தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸடாலினும் தந்தை வழியில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.

  அதன் பிறகு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார்.

  அடுத்த மாதம் (பிப்ரவரி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

  உதயநிதியின் தீவிரமான கட்சி பணியை பார்த்து அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

  இது தொடர்பாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "நானும் என் தந்தை வழியில் துணை முதலமைச்சர் ஆக போகிறேன்" என்பது வதந்தி. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது முதலமைச்சர்தான் என்றார்.

  • 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர்.

  சங்கராபுரம்:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டது.

  இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சத்தம் கேட்பதற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் காட்டு தீ போல் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பகண்டை கூட்டுரோடு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனத்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

  ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இதேபோல் பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

  இந்நிலையில், இது குறித்து இந்திய விமானப்படை விமான தளம் சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித்ததில், இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை என்றும், நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உறுதி செய்யப்பட்டது.

  எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர். எனவே இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  • திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
  • அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை.

  காங்கயம் :

  கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

  இது தொடா்பாக பாசன விசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டம், பவானி சாகா் அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், மண் வாய்க்காலாக இருப்பதால் அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

  இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கு விவசாயிகளிடையே பெரும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. கான்கிரீட் தளம் அமைக்கப்படாது என்று நீா்வளத் துறை சாா்பில் அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுவதாக தற்போது ஒருசிலா் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை திசைத்திருப்பி வருகின்றனா். எனவே, இதுபோன்ற வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றனா். 

  • வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
  • பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர்.

  திருப்பூர்:

  வட மாநில தொழிலா ளர்கள், தமிழர்களால் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை, சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

  இச்சூழலில், பல்வேறு மாநில தொழிலாளர்கள், மக்கள் வந்து செல்லும் திருப்பூர் ரெயில், பஸ் நிலை யங்களில், பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர். அதில் 'வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்; அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டும் வகையில், சித்திரிக்கப்பட்ட வீடியோவை, யாரும் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டு வருகிறது.

  • புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
  • தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தரங்கம்பாடி:

  மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் வந்து தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  இவர்களில், மேற்கு வங்காளம், பீகார், உத்தர–காண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்ணை பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சில இடங்களில் துன்புறுத்தப்படுவதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெறும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு நடத்தியதுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

  அப்போது கலெக்டர் பேசுகையில், இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலா–ளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  எனவே, எந்த பயமும் இன்றி சுதந்திரமாக பணியாற்றலாம். மேலும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார். கலெக்டர் பேசியதை யுவா ஜெயின் சங்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தியில் மொழி பெயர்த்தார்.

  அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாது–காப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கோட்டாட்சியர் வ.யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார், துணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு) ராஜேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ்பேகம் தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
  • காய்ச்சலுக்கு வருபவர்களுக்காக தனிவார்டு செயல்பட்டு வருவதாக டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

  நெல்லை:

  தென்மாவட்டங்களில் முக்கியமான மருத்துவ மனைகளில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

  1200 உள்நோயாளிகள்

  இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அந்த வகையில் 1,200 உள்நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

  நோயாளிகளின் உறவினர்களும் பெரும் அளவில் வருவதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனி காணப்படுகிறது. இதனால் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக தினமும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு 50 க்கும் மேற்பட்டோர் செல்வதாக தகவல் வெளியானது.

  அதே நேரம் தினமும் காய்ச்சலுக்கு அதிகமானோர் சிகிச்சைக்காக வருவதால் போதிய படுக்கை வசதி இன்றி ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

  தற்போது பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதி கரித்துள்ளது. டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை. காய்ச்சலுக்கு வருபவர்களுக்காக 30 படுக்கைகள் கொண்ட தனிவார்டு செயல்பட்டு வருகிறது.

  மேலும் 30 படுக்கைகள் கொண்ட 'ஸ்டெப்டவுன்' வார்டு என்ற சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரு பவர்களை காய்ச்சல் வார்டில் 2 நாள் வைத்து சிகிச்சை அளிக்கிறோம். பின்னர் அவர்கள் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  அதன்பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தற்போது 15 பேர் மட்டுமே காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 3 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளது. மற்றவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்தான் இருக்கிறது.

  தற்போது அதிக மானோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதும், ஒரே படுக்கையில் 2, 3 பேருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுவதும் வதந்தி. காய்ச்சலுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள் அந்த படுக்கையில் படுத்திருந்திருக்கலாம். அதனை பார்த்து 2,3 பேருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுகின்றனர். அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தாலும் அவர்களுக்காக சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கோவை ஆத்துப்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்தனர். #ContainerLorry
  கோவை ஆத்துப்பாலம் அருகே சாலையில் தாறுமாறாக கண்டெய்னர் லாரி சென்றது.  அப்போது லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடினர்.

  அப்போது லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை களைந்து செல்லுமாறு அறிவித்தனர்.  

  பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசரணை செய்து வருகின்றனர்.  அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறப்பது சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

  தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பொது மக்கள் லாரியை சூழ்ந்து கொண்டு அவ்விடம் விட்டு செல்ல மறுத்துவரும் நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Congress
  பெங்களூரு :

  கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தராமையாவிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

  அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் எதற்காக அவர்கள் மும்பை செல்கிறார்கள்?. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுபற்றி அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.

  அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. கூறுகையில், “நான் எங்கும் போகவில்லை. செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்சி தலைவர்கள் பிரச்சினையை தீா்ப்பார்கள்” என்றார். #Siddaramaiah #Congress
  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #Sasikala #Pugazhendhi
  தருமபுரி:

  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

  கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #Pugazhendhi