search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.
    • வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட "188 வயது முதியவர்" எனக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் வீடியோ கிட்டத்தட்ட 30 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.

    இது தொடர்பான பதிவில், "இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது. பைத்தியம் பிடித்தது," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

     


    24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு ஆண்கள் முதியவருக்கு நடக்க உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதியவர், கூன்விழுந்த நிலையில் வெள்ளை தாடியுடன், தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.

    இந்த வீடியோ பற்றிய இணைய தேடல்களில், உண்மையில் இந்த வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு 110 வயது ஆகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு இந்து மத துறவி என்று கூறப்படுகிறது. இதே தகவல் இந்த ஆண்டு ஜூலை மாதம் சில தனியார் செய்தி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    அந்த செய்தியின் படி, வீடியோவில் உள்ள நபர் சியாராம் பாபா என்றும் அவருக்கு வயது 109 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கர்கோன் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.

    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.

    புதுடெல்லி:

    ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

     

    மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.

    2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.

    கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம்.
    • இந்த டிக்கெட்டுகளை வணிகரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரெயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்.

    புதுடெல்லி:

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரெயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவற்றுக்கு ரெயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இ-டிக்கெட் எடுக்கலாம்.

    ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிகரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரெயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை.
    • நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

    90-க்களில் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது. தனது கம்பீர குரலால் அறியப்படும் அப்துல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யாரும் மறந்துவிட முடியாது. அப்துல் ஹமீது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை என அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று முதல் இன்று வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து நான் என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

    சிலர் என் குரலை கேட்டு கதறி அழுததை கேட்டேன். என்னால் அதை தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தேன் என்று நினைத்துக் கொண்டேன் என்று பேசினார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.
    • தமிழ்நாடு கவர்னர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.

    சென்னை :

    கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு கவர்னர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது,

    "குலதெய்வவழிபாட்டை தடை செய்ய வேண்டும்!" தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்! கவர்னர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

    இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை கவர்னர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையைஉருவாக்குகிறது.

    இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கவர்னர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.

    இந்தப் பிரச்சனையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக்கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சானியா மிர்சா பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார்
    • 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிக்கு செல்ல காரணமானவர் ஷமி.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது.

    இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார்.

    டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • எல்லையை கடக்க முயலும் மக்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி முன்னேறினர்
    • 25 அடி உயர முட்கம்பியை சேதப்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்தனர்

    கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பாலஸ்தீன மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் கொடிகளை கைகளில் வைத்திருக்கும் ஒரு கும்பல், கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேல் எல்லை பகுதியை கடந்து உள்ளே செல்ல முயல்வது தெரிந்தது. அந்த வீடியோவுடன் இணைக்கப்பட்ட செய்தி குறிப்பில் பாலஸ்தீனத்தை காக்க இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் இஸ்ரேலுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது.

    உண்மை என்னவென்றால் இதில் காணப்படும் சம்பவம் தற்போது இஸ்ரேல்-காசா போர் நடைபெறும் காலகட்ட சம்பவமே அல்ல.

    2021 வருடம், லெபனான் நாட்டை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காசா பகுதி மக்களின் உரிமைகளுக்காக லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உள்ள 25 அடி உயர முட்கம்பி வேலியை பல உபகரணங்களால் அறுத்து, இஸ்ரேலி எல்லைப்படை வீரர்கள் மேல் கற்களை எறிந்து, கையெறி குண்டுகளை வீசி உள்ளே நுழைய முயற்சித்த போது எடுக்கப்பட்டது.

    2021ல் நடைபெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, தவறாக 2023 அக்டோபர் மாத சம்பவமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • எனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
    • தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

    பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் உயிரிழந்துவிட்டதாக இன்று மாலை முதலே தகவல்கள் வெளியாகி வந்தன. பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உயிரிழந்ததாக எக்ஸ் தளத்தில் வெளியான தகவல் காட்டுத்தீ போன்று வேகமாக பரவியது.

    இந்த நிலையில், அமர்த்தியா சென் உயிரிழக்கவில்லை என்று அவரின் மகள் நந்தனா சென் தெரிவித்து உள்ளார். மேலும் தனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். இத்துடன் தனது தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், " கவலை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ஆனால் அது ஒரு பொய்யான செய்தி. பாபா நலமுடன் இருக்கிறார். கேம்ப்ரிட்ஜ்-இல் கடந்த வாரம் தான் நாங்கள் அருமையான நாட்களை குடும்பத்தோடு கழித்தோம்."

    "அவரின் அரவணைப்பை போன்று அவர் உறுதியாகவே இருக்கிறார். அவர் ஹார்வார்டில் வாரத்திற்கு இரண்டு முறை பாடம் எடுத்து வருகிறார். அவர் எப்போதும் போன்று பிசியாகவே இருக்கிறார். அவர் தனது புத்தகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
    • ஆக்லேண்டு பகுதியில் 249 மில்லிமீட்டர் மழைபொழிவு ஏற்பட்டது

    கடந்த செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவின் முக்கிய பெருநகரமான நியூயார்க் நகரில் திடீரென பெய்த பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நகரின் ஒரு சில பிராந்தியங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

    நகரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் பயனர்களால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு பல்பொருள் அங்காடியில் முழங்கால் அளவு வரை நீர், நதி போல் ஓடுவதும், அதில் மிதக்கும் பொருட்களை தாண்டி அக்கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் நடுவே மெதுவாக நடந்து செல்வதையும் காண முடிந்தது.

    மேலும் அந்த வீடியோவில், "பிரளயத்தை போன்ற வெள்ளத்தில் நியூயார்க் மக்கள் ஒரு பெரிய மளிகை கடையில், ஓடி வரும் தண்ணீரில், மிதக்கும் மளிகை பொருட்கள், மிருகங்களுக்கு நடுவே பொருட்களை வாங்கி செல்கின்றனர்" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. உண்மையில், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் பல மாதங்களுக்கு முன் 2023 ஜனவரி 28 தேதியிட்ட ஒரு வீடியோவில் உள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லேண்டு நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 24 மணி நேர இடைவெளியில் 249 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்ட போது அங்குள்ள கிலென்ஃபீல்டு சூப்பர் மார்கெட் (Glenfield Super Market) எனும் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வந்தவர்கள் சிக்கி கொண்டு மெதுவாக வெளியேறியது வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டது.

    அந்த சம்பவம் குறித்த வீடியோவைத்தான் நியூயார்க் நகர வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறுதலாக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.


    • இரு நாட்டு உறவுகளும் சீராகாத நிலையில் இந்த வீடியோ பரவியுள்ளது
    • 2023 மார்ச் மாதம் இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது

    2020-ஆம் ஆண்டு, இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் பயங்கரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

    இரு நாட்டு உறவுகளும் இன்னமும் சீராகாத நிலையில் கனடாவில் நடைபெற்ற சம்பவம் என குறிப்பிடப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் சாலையில் சென்று கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை வழிமறித்து மிரட்டுகிறார்.

    இந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தியையும் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். அதில் "அப்பாவி குஜராத்தி தொழிலதிபரை காலிஸ்தானி 'எலிகள்' வெளிப்படையாக மிரட்டுகிறது. ஆனால் இதே 'எலிகள்' இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை கண்டதும் எங்காவது பொந்துக்குள் ஒளிந்து கொள்கின்றன" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்திய மாநிலமான பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் எனும் பயங்கரவாதிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    2023 மார்ச் மாதம், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வெளியே புறநகரில் சவுத் ஆல் எனும் பகுதியில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினார். அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் மிரட்டினார். இது அப்போதே வீடியோவாக வலைதளங்களில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    மார்ச் மாதம் இங்கிலாந்தில் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ கனடாவில் நடைபெற்றதாக தவறுதலாக பகிரப்பட்டுள்ளது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×