search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue fever"

    • சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை.
    • குழந்தைகளுக்கு 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகி விடுகிறது.

    சென்னை:

    பருவநிலை மாற்றம் ஏற்படும்போது, தொற்று நோய்கள், காய்ச்சல் வருவது வழக்கமானது. அது ஒன்றிரண்டு நாட்கள் இருக்கும். அதன் பிறகு தானாகவே சீராகிவிடும்.

    ஆனால் தற்போது சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு களால் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேலாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    அவ்வாறு வருபவர்களில் பலர் கடுமையான காய்ச்சல் தலைவலி போன்ற டெங்கு அறிகுறிகளுடன் வருகிறார் கள். 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு அதன் பிறகு பரிசோதனை செய்கிறார்கள். அப்போது சிக்குன்குனியாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை. எனவே துணை மருந்துகளே கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் குணமடைந்த பிறகும் உடல்வலியால் முடங்கி விடுகிறார்கள்.

    சிக்குன்குனியா தாக்கத்தால் முடங்கிய செல்வம் என்பவர் கூறியதாவது:-

    தொடர்ந்து நான்கைந்து நாட்கள் காய்ச்சலில் அவதிப்பட்டேன். காய்ச்சல் முற்றிலுமாக குணமடைந்த பிறகும் தாங்க முடியாத உடல்வலி இருக்கிறது. ஒரு மாதமாகவே அவதிப்படுகிறேன் என்றார்.

    டெங்கு மற்றும் சிக்குன் குனியா தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தைகள்தான் 80 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகி விடுகிறது. அதன் பிறகும் கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.

    இதுபற்றி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மிதமான காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ பரிசோதனை எடுக்க தேவையில்லை. அவர்கள் தனிமைபடுத்திக் கொண்டு ஓய்வெடுத்தால் போதும்.

    தீவிர பாதிப்பு உடையவர்கள் முதியோர்கள், குழந்தைகள், இணை நோய் உடையவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் ஆகிய பாதிப்புகள் இருந்தால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.

    புளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இருமும்போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார்கள்.

    சித்த மருத்துவத் துறையினர் கூறும்போது, மிதமான பாதிப்பு இருப்பவர்கள் மருந்துகள் எடுக்க தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். ஆவி பிடிப்பது நல்லது. துளசி இலை, கற்பூரவல்லி இலைகளையும் சாப்பிடலாம் என்றார்கள்.

     

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான் பதற்றப்பட தேவையில்லை. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளன. தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.
    • கேரளா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் பொது சுகாதாரத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.

    சென்னை:

    சென்னை சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ- மாணவியருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் என்ற வரிசையில் நிதி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது. கேரளா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் பொது சுகாதாரத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.

    பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை குறித்த முழு உடல் வெப்ப பரிசோதனை முழு வீச்சில் உள்ளது. குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

    • புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத்தான் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மக்களுக்கு அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

    அதில் பெரும் பாலானவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்கள் தவிர, புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெங்கு குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரும் சுகாதாரத்துறை இயக்குனருமான (பொறுப்பு) டாக்டர் செவ்வேள் கூறியதாவது:-

    புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது கண்டறியப்படுகிறது. 100 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டால் அவர்களில் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத்தான் உள்ளது. அடுத்துவரும் நாட்களில் மழை அதிகமாக இருக்குகும் என்பதால் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று உயரும். டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுமருந்து தெளிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சுகாதாரத்துறையின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
    • கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.

    தமிழகத்தில் நிகழாண்டில் 11,743 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 4 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 25,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு வீடுகள்தோறும் மருத்துவ கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்க

    லாம். எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைநகர் பெங்களூருவில் தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
    • டெங்கு பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 25 ஆயிரத்து 408 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது நகரில் 11 ஆயிரத்து 590 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதம் தலைநகரிலேயே பதிவாகியுள்ளது.

    இந்த டெங்கு பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக அரசு, தொற்றுநோய் பரவல் சட்டம்-2020-ன் படி டெங்கு காய்ச்சல் பரவலை தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தால் அதன் உாிமையாளருக்கு நகரமாக இருந்தால் ரூ.400, கிராமமாக இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

    வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள், சுகாதார மையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ரெசார்ட், கடைகள், இளநீர் வியாபாரிகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பஞ்சர் சரிசெய்யும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் அவற்றுக்கு நகரமாக இருந்தால் ரூ.1,000-ம், கிராமமாக இருந்தால் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என்பன உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.

    • தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 11 துறைகள் இணைந்து இன்று ஆலோசனை நடத்தியது.

    பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளை விட மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 பேர் இறந்துள்ளார்கள்.

    இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டு 65 பேரும் இறந்தனர். அரசு எடுத்த தீவிர முயற்சியால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டும் பருவ மழை காலங்களில் பரவும் தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிகாய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 4,676 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படுகிறது.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.

    கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கும் தேவையான மருந்துகள், எந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது.
    • அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் பரவலாக மழை பெய்து வருவதால் சளி, இருமல், கை-கால் வலியுடன், காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பெரிய அளவில் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் வருகின்ற பருவமழை காலத்தில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை கருதுகிறது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் தொடங்கி கண்காணிக்கப்படுகிறது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. 30 முதல் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை. காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இல்லை. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.


    ஆனால் டெங்கு பாதிப்பு குறிப்பிடும் படியாக இல்லை என்று மருத்துவ மனை முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொது மருத்துவத் துறை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-

    வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தான் அதிகளவில் வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் 5 நாட்கள் இருந்து பின்னர் படிப்படியாக குறையும். காய்ச்சல் குறைந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க கூடாது. அந்த நேரத்தில் தான் வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டு உடலில் தட்டணுக்கள் குறைய தொடங்கும்.

    எனவே தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    டெங்குவை பொறுத்த வரை காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தான் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும்.

    வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பகலில் கடிக்கும் 'ஏடீஎஸ்' கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் உண்டாக்குகிறது. வீடுகளையும், சுற்று புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.

    சென்னை:

    தியாகராய நகரில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்கால நோய் பாதுகாப்புகள் கட்டுக்குள் இருக்கிறது. 2017-ல் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. 65 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது சென்னை, கோவை, திருப்பத்தூர், தேனி, தஞ்சை, நெல்லை, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதே போல் உன்னி காய்ச்சல் கடலூர், சென்னை, தஞ்சை மாவட்டங்களிலும், எலி காய்ச்சல் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மஞ்சள் காமாலை சென்னை, திருச்சி, தேனியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

    கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரை தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 6,566 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்-390 பேர், புளுயன்சா காய்ச்சல்-56 பேர், எலி காய்ச்சல்-1481 பேர், உன்னி காய்ச்சல்-2,639 பேர், வெறி நாய்கடி-22 பேர், மஞ்சள் காமாலை பாதிப்பு-17,500 பேர்.

    இதில் டெங்கு பாதித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் உரிய நேரத்தில் டாக்டர்களை அணுகாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுங்கள்.

    வரும் மாதங்களில் வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.

    அப்போது வீடு தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 2992 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் பற்றிய தகவலை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரசை தடுக்க எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று 2 ஆயிரத்து 731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2 ஆயிரத்து 731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 524 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.

    டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 270 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.

    • பல்வேறு மருத்துவ மனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. டெங்கு, காலரா, எலிக்காய்ச்சல், வெஸ்ட்நைட் காய்ச்சல் போன்றவை மக்களை தாக்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 438 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு எலிக்காய்ச்சலும், 4 பேருக்கு காலராவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஓரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பலியானவர்களில் கொல்லத்தை சேர்ந்த ஆசிரியர் அஜீஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நிலம்பூர், வள்ளிக்குன்னு, பொதுக்கல்லு, எடக்கரை பகுதிகளிலும் காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு காலரா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ளவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 26 வயது வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை தொடர்ந்து அங்கும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,

    அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் 97 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

    தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை அமீபாவின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது, அதில் குளிப்பவர்களுக்கு அமீபா என்னும் உயிரி மூலம் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தத் தொற்று நோய், சுகாதாரமற்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக உடலுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதால், தமிழ்நாட்டில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது மூக்கு கிளிப் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தவும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    ×