என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- ராமதாஸ்
- சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது.
- டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகின்றன.
சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது. இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முழுமையான விழிப்பு ணர்வை அளித்தும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






