என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு காய்ச்சல்"

    • எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
    • உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பிரேசில் அரசாங்கம் புதன்கிழமை உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன்-டிவி' எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.

    தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.

    பிரேசிலில் 16,000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.

    2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேசிலில் நிகழ்ந்தன. 

    • கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.
    • வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு.

    தஞ்சாவூா்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி பிள்ளையார் நத்தம் பகுதியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்து 1-வது பயனாளிக்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மருந்து பெட்டகங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தென்னங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில், கடைக்கோடி மனிதர்களுக்கும், மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒரு திட்டம் துவங்கிய பிறகு, அந்த திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா என ஆய்வு செய்வதில், நமது முதலமைச்சருக்கு நிகர் அவர்தான். இரண்டு கோடி பயனாளர்களை கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தொற்றா நோய்களை தடுப்பதில் எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்த போது, இந்தியாவில், தமிழகம் தான் என கண்டறியப்பட்டு, யுனைடெட் நேஷன்ஸ் இன்டர் ஏஜென்சி டாஸ்க் போஸ்ட் என்ற விருது கிடைத்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியில் இரண்டு கோடியே 50-வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு பாதிப்பினால், 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டில் 65 பேர் உயிரிழந்தார்கள். இது தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால், உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., தான். கடந்த 11 மாதங்களில், வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த 9 பேருக்கும் இணை நோய் பாதிப்பு இருந்து, சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ளதாவர்கள் என தெரியவந்தது. தி.மு.க., பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், ஒரு இலக்கு எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.

    வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது.
    • ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சரளா (வயது 45). அவரது கணவர் ராமு ஏற்கனவே இறந்து விட்டார்.

    இவர்களது மூத்த மகள் லோகேஸ்வரி (21), இவர் கோரிமேடு அன்னை தெரசா அரசு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி பலியான சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-ம் ஆண்டு 2029 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அது 2024-ல் 1403 ஆக குறைந்தது. இந்த ஆண்டு சற்று உயர்ந்துள்ளது.

    ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

    டெங்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் விரைவாக குணம் அடைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெங்குவை பரப்பும் கொசுக்களை லார்வா பருவத்திலேயே அழிக்க அவை உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், கழிவு பொருட்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே அந்த மாதிரி பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும் படி சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

    • சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது.
    • டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகின்றன.

    சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது. இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முழுமையான விழிப்பு ணர்வை அளித்தும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும்.
    • டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது.

    "கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!"

    என்ற நகைச்சுவையை எல்லோரும் கேட்டு இருப்பீர்கள்.

    இப்போது இருக்கும் இந்த பருவநிலை, வெயிலும் மழையுமாக, கொசுவுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

    கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும். 1897வது வருடம் டாக்டர் ரோனால்ட் ராஸ் என்பவர் தான் மலேரியா நோய் கொசுவால் தான் பரவுகிறது, கொசுவை ஒழித்தால் மலேரியா நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து கொசுவால் பரவும் மற்ற நோய்கள் டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால் நோய், எல்லோ ஃபீவர், ஜிக்கா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் எப்படி ஒருவருக்கு வந்தது என்பதை கீழே படியுங்கள்.

    மோகனாவிற்கு திடீரென தலைவலி அதிகமாக இருந்தது. அடிக்கடி வருவது தானே தலைவலி என்று தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இரவில் காய்ச்சல் அதிகமானது. தன்நிலை மறந்து முனகத் தொடங்கினார். உடல் வலி மற்றும் வயிற்று பிரட்டல், வாந்தி. எதுவும் சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் மாத்திரை எடுத்தால் சரியாகிவிடும் என்று மாத்திரையை போட்டுக் கொண்டார். அன்று இரவு காய்ச்சல் கடுமையானது. உடல் வலி மிக அதிகம். எழும்பவே முடியவில்லை. கண்களை திறக்க முடியாத அளவுக்கு கண்ணுக்கு பின்னே கடும் வலி. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். மூன்று நாட்கள் கழித்த பின் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.

    ஜெயஸ்ரீ சர்மா

     

    அதே நேரத்தில் ரத்த தட்டுகளும் குறைய ஆரம்பித்தன. வயிற்றில் ஸ்கேன் செய்ததில் வயிற்றில், நெஞ்சுக்கூட்டில் நீர் சேர்ந்து இருந்தது மற்றும் இருதயத்தை சுற்றியும் நீர் சேர்ந்து இருந்தது. கல்லீரல் என்சைம்கள் ஆயிரத்தை கடந்திருந்தன. பொதுவாக முப்பது நாற்பது தான் இருக்கும்.

    முழு உடல் பாதிப்பாக டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தது. ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் ரத்த தட்டுகள் மிகவும் குறையவில்லை. மோகனாவிற்கு டெங்குவிலிருந்து வெளியே வர இரண்டு வாரங்கள் ஆனது.

    எப்படி வருகிறது?

    டெங்கு ஒரு வைரஸ் காய்ச்சல். டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது. கொசுவுக்குள் வைரஸ் பல மடங்காக பெருகிறது. இதே கொசு இன்னொரு வரை கடிக்கும் போது அவர் உடம்புக்குள் வைரஸ் எளிதாக நுழைந்து விடுகிறது. 3 -14 நாட்களுக்குள் அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.

    என்னன்னு அறிகுறிகள்?

    பொதுவான அறிகுறிகள் -

    கடுமையான காய்ச்சல்(104*)

    தாங்க முடியாத தலைவலி

    கண்களுக்கு பின்னால் வலி மூட்டு வலி, தசை வலி வாந்தி, தலைசுற்றல், சோர்வு உடல் முழுவதும் தடிப்புகள். இது எல்லாமே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த அளவுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் என்பது மாறுபடும்.

    மருத்துவமனையில் சேர வேண்டுமா? அல்லது வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாமா?

    முதல் மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் இருக்கும். பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மிகவும் கடுமையான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் சேரலாம். ஆனால் உண்மையில் மிகவும் பிரச்சினையான காலம், காய்ச்சல் குறையும் போது தான். அதாவது மூன்று நாட்களுக்கு பிறகு. ரத்த தட்டுகள் குறைய ஆரம்பிக்கும். (பிளேட்லட்ஸ்) அந்த சமயத்தில் மருத்துவமனையில் இருப்பது நல்லது.

    எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?

    முதலில் நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் கொசு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்பழுக்களை கண்டுபிடிக்க. குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கொசு புழுக்களை கண்டால் உடனே அழித்து விடுங்கள். எங்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதில் நெளிவதை காணலாம். குடிக்கும் நீர் எனில் மூடி வையுங்கள். சங்கு பூக்களை போட்டு வைத்தாலும் கொசுப்புழுக்கள் வராது (என் பாட்டி சொல்லிக் கொடுத்தது). கொசு வலை தான் கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான மிகச் சிறந்த வழி.

    குழந்தைகளுக்கு வந்தால் எப்படி?

    நான்கு வயதான சூர்யாவுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். குழந்தை மருத்துவரை பார்த்து விட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மூன்று நாட்களில் காய்ச்சல் குறைந்து, வீட்டிற்கு அனுப்பலாம் என்று முடிவு. அன்று குழந்தை அரக்கு கலரில் வாந்தி எடுத்தது. அது வயிற்றில் ரத்தம் கசிவதற்கான அறிகுறி. ரத்த பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் உறுதியானது. உடல் முழுவதும் எங்கும் ரத்த தடிப்புகள் இருந்தது. ரத்த தட்டுகள் மிகவும் குறைய ஆரம்பித்தது. ரத்தத் தட்டுகள் ஏற்றப்பட்டன. குழந்தைக்கு நீர்ச்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் டெங்குவின் தீவிரம்குறைந்து நல்வாய்ப்பாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை. குழந்தைகளுக்கு வயதானவர்களுக்கு, இணை நோய் உள்ளவர்களுக்கு டெங்கு வந்தால் மிகவும் தீவிரமாகி இறந்து போக வாய்ப்பு உண்டு. காய்ச்சல் வந்தால் இவர்களை உடனே கவனிப்பது நல்லது. கொசு வலையை பயன்படுத்துங்கள்.

    மற்றவருக்கு பரவுமா?

    ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. கொசுவினால் மட்டுமே பரவும்.

    டெங்குவினால் ஏன் இறந்து போகிறார்கள்?

    பெரும்பாலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சலை போல வந்துவிட்டு சென்று விடும். ஆனால் நூறில் ஒருவருக்கு 'டெங்கு ஷாக் சின்றோம் 'அல்லது 'டெங்கு ஹெமரேஜிக் டிசீஸ்', எனப்படும் கடும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரத்தம் மற்றும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

     

    ஒருமுறை வந்தால் மீண்டும் வருமா?

    அவரவர் உடலினுடைய எதிர்ப்பு சக்தியை பொறுத்து மீண்டும் வரலாம்.

    தடுப்பூசி உண்டா?

    இதுவரை தடுப்பூசி இல்லை. டெங்கு வைரஸை நேரடியாக கொல்லும் மருந்துகள் இல்லை. சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்ட் எனப்படும் குளுக்கோஸ் ஏற்றுவது, காய்ச்சலை குறைப்பது மற்றும் பிளேட்லெட்ஸ் அளவை கண்காணிப்பது போன்ற சிகிச்சைகள் மட்டுமே செய்கிறோம்.

    நிலவேம்பு கஷாயம் பயன் தருமா? பப்பாளி இலை பயன்படுமா?

    சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம் பரிந்துரைக்கப்படுகிறது எல்லா வகையான வைரஸ் காய்ச்சலுக்கும். மருத்துவரின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு. பப்பாளி இலை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ரத்தத்தில் உள்ள பிலைட் லிஸ்ட் அளவை மிகவும் கீழே போகாமல் காப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து தயாரிக்கப்படும் சிரப் கொடுக்கப்படுகிறது.

    காய்ச்சல் வந்தால் என்ன செய்யக்கூடாது?

    காய்ச்சல் டெங்குவா? என்று தெரியாத வரை வலி மாத்திரைகளை எடுக்கக்கூடாது. எந்த ஒரு ஊசியும் போட்டுக் கொள்ளக் கூடாது . மருத்துவமனையில் சென்று ரத்தத்தில் ஏற்றும் ஊசிகளை மட்டுமே எடுக்கலாம். இதை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் . அதுபோல காய்ச்சல் அதிகமாகும் போது தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. இப்போது தமிழ்நாட்டில் வெகுவேகமாக டெங்கு பரவி வரும் நிலையில், இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டால்தான், நோய் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.

    வாட்ஸ்அப்: 8925764148

    • சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
    • நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும்.

    சென்னை:

    பருவ கால மாற்றத்தால் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் காய்ச்சல் பரவுவது வழக்கமாகி விட்டது. கேரளாவில் ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாக காணப்படுகிறது.

    சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பரவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நீடித்தது. இந்த ஆண்டும் காய்ச்சல் மற்றும் சுவாச சம்பந்தமான வைரஸ் தொற்றுக்கள் பரவி வருகின்றன. சாதாரண சளி, காய்ச்சல், இருமல் என்ற அறிகுறிகளுடன் வரும் பலருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இன்புளூயன்சா வகை காய்ச்சல் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வரும் நிலையில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தினசரி 60 முதல் 70 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

    வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் இன்னும் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று கணித்து உள்ளார்கள்.

    இன்புளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல்வலி, சோர்வு காணப்படும்.

    சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும். எனவே தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திரவ நிலை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் உள்ள 'பிரிட்ஜ்' பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒரு முறையாவது தூய்மை செய்ய வேண்டும்.

    மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக் கூடிய வகையிலான பொருள்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போதுதான் 'ஏடிஸ்' கொசு பரவலைத் தடுக்க முடியும். 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது மக்களிடையே உள்ள பொறுப்பு என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    • வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

    எனவே டெங்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ராகஸ்ரீ (வயது6). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமி ராகஸ்ரீக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெற்றோர் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு காய்ச்சல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ராகஸ்ரீ நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். டாக்டர்களின் பரிசோதனையில் சிறுமி ராகஸ்ரீக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உடல் நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர்.
    • மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வக ங்கள், நூலகம் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவ தேர்வுகள் தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், குழுக்களை அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ள து" என்றார்.

    • கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் இப்போது மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • தண்ணீர் தேங்கும் இடங்களையும், கொசு உற்பத்தியாகும் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி காய்ச்சல் பரவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் இப்போது மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதார துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தண்ணீர் தேங்கும் இடங்களையும், கொசு உற்பத்தியாகும் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ×