search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hijab"

    • ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும்.
    • மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    தெக்ரான்:

    ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணி யாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது. துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. அந்த அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறும் போது, துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் அதிகாரிகள் சென்று ஊழியர்கள் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதல் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் ஊழியர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணிய வில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனால் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.
    • கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

    ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசெஸ்கியன் பெற்றுள்ள வெற்றி வரும் காலங்களில் அந்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1954 செப்டம்பர் 29 ஆம் தேதி மேற்கு அஜர்பைஜானை ஒட்டியுள்ள மஹாபத் நகரில் அசர்பைஜானிய தந்தைக்கும் குர்து இனக்குழுவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் மசூத் பெசெஸ்கியன்.

    வரலாறு நெடுகிலும் இன்னலைகளை சந்தித்த ஈரானில் சிறுபான்மையாக உள்ள குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.

     

    1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் ஈர்க்க - ஈரான் போரில் ராணுவ சேவை ஆற்றிய மசூத், தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிமுபாரகாவும்தாபிர்ஸ் பல்கலைக்கழகக்த்தின் மருத்துவ படிப்புகள் பிரிவின் தலைவராகாவும் பணியாற்றியவர் ஆவார்.

    கடந்த 1994 ஆம்ஆண்டு நடந்த கார் விபத்தில் தனது மனைவி மற்றும் மகளை இழந்த மசூத், அதன்பின் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அதிபர் முகமது கதாமியின் ஆட்சியில் 2001 முதல் 2005 வரை சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார் மசூத். அதன்பின் பாராளுமன்ற எம்.பியாக தேர்வான மசூத், கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

    அதிபர் முகமது ரைசி ஹெலிகாப்ட்டர் விபத்தில் இறந்ததால் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கிய மசூத் முக்கிய போட்டியாளரான தீவிர வலதுசாரி கொள்கைகள் உடைய சயீத் ஜலீலிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

    முந்தைய அரசுகளை போல் அல்லாமல் மேற்கு நாடுகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த விழைபவராக மசூத் உள்ளார். மேலும் ஈரானில் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த 1079 முதல் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியதற்கு எதிராக மசூத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

     

    கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குள்ளும, மருத்துவமனைகளுக்குள்ளும் ஹிஜாப் அணியாத பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக மாஷா ஆமினி என்ற இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மசூத் ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்துக்காக பெண்ணை கைது செய்து உயிறற்ற உடலாக அவரை குடும்பத்திடம் திருப்பியளிப்பது என்பத , இஸ்லாமியக் குடியரசில் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது ஈரான் அதிபராக உள்ள மசூத் பெசெஸ்கியன் கட்டாய ஹிஜாப் கொள்கைகளை தளர்த்துளார் என்றும், முற்போக்கான சீர்த்திருத்தங்களை கொண்டு வருவார் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. 

    • இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
    • தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

    தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 3 லட்சமும் மத தலைவர்களுக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்நாட்டில் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

    கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளது.

    • ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது.
    • மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதலை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது.

    சந்து குழுவின் பரிந்துரைகள்:

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. அவை அரசு பள்ளிகளாக மாற்றம் செய்யப்படவேண்டும்.
    • தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
    • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
    • ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
    • மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
    • மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
    • பள்ளி வளாகத்தில் உள்ள சாதி தொடர்பான பெயர்களை அகற்ற வேண்டும். பள்ளிக்கு நன்கொடை வழங்கி இருந்தாலும் அவர்களின் பெயரையும் அகற்ற வேண்டும்.

    ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை பலரால் வரவேற்பை பெற்றாலும் சிலர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சந்துரு குழு அறிக்கையை எதிர்க்கும் பாஜக:

    பாஜகவை சேந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி இந்த அறிக்கையை ஊராட்சிக்குழு கூட்டத்திலேயே கிழித்து எரிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

    நெற்றியில் திலகம் இடக்கூடாது கையில் கயிறு கட்டக்கூடாது என கூறுவது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்தார்.

    ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என நிர்வாகம் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிந்து வர ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொட்டு வைக்கக் கூடாது, திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக்கூடாது என்று சொல்வது தவறானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. வண்ணக்கயிறுகளை சாதிகளோடு அடையாளப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவை சேர்ந்த பலரும் சந்துரு குழு அறிக்கையைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்து மாணவர்களை இது பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வண்ணக்கயிறும் நெற்றி திலகமும் ஹிஜாபும் ஒன்றா?

    வண்ணக்கயிறு, நெற்றித் திலகம், போட்டு ஆகியவை இந்து மத அடையாளங்கள். வண்ணக்கயிறை போல ஹிஜாபை, சிலுவையை தடை செய்வீர்களா என்று வாதம் செய்கின்றனர்.

    ஹிஜாபும், சிலுவையும் மத அடையாளங்கள். அவற்றில் சாதி இல்லை. ஆனால் வண்ணக்கயிறுகளிலும் நெற்றித் திலகத்திலும் சாதி இருக்கிறதே. ஒவ்வொரு சாதியையும் குறிப்பிட்ட நிறத்திலான கயிறுகளையும், குறிப்பிட்ட வண்ணத்திலான நெற்றித் திலகத்தையும் வைப்பதே இங்கு பிரச்சனையாக மாறுகிறது.

    ஒருவர் ஹிஜாப் அணிந்தோ, சிலுவை அணிந்தோ வந்தால் தான் அவரின் மதத்தை கண்டுபிடிக்க தேவை இங்கு இல்லை. ஒருவரின் பெயரை வைத்தே அவரின் மதத்தை நம்மால் அடையாள காணமுடியும். ஆனால் பெயரை வைத்து தமிழ்நாட்டில் சாதியை கண்டுபிடிக்க முடியாது.

    பெயர்களுக்கு பின்னர் சாதிப்பெயரை சேர்க்காத பெருமை தமிழ்நாட்டிற்கு உள்ளது. அப்படியொரு மாநிலத்தில் எந்த ஊர், என்ன குலசாமி, அம்மா அப்பாவுக்கு என்ன வேலை போன்ற கேள்விகளிலும் சாதிக்கயிறு, சாதி பொட்டுகளிலும் சிலர் சாதியை அடையாளம் காண்கின்றனர்.

    இதன் மூலம் ஒரே சாதியை சேர்ந்த சிலர் ஐக்கியமாகி மற்ற சாதியை அடையாளம் கண்டு அவர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தும் சம்பவங்கள் பள்ளி கல்லூரிகளில் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது.

    அதனை தடுப்பதற்கு இத்தகைய பரிந்துரைகள் அவசியம். ஆகவே சந்துரு குழுவின் இந்த பரிந்துரைகள் இந்து மதத்திற்கு எதிரானது கிடையாது, சாதிய அணிதிரட்டலுக்கு சாதிய வன்முறைக்கு எதிரானது என்று சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    சாதியை குறிக்கும் விதமாகவும் அரசியல் கட்சிகளின் கொடியின் வண்ணத்தை குறிக்கும் விதமாகவோ வண்ண கயிறு அணிந்து வந்தால் பிரச்சனை. மற்றபடி கருப்பு, சிவப்பு போன்ற சாதாரண நிறத்தில் வண்ணக்கயிறு கட்டுவதாலோ, குங்குமம் சந்தன அபோட்டு வைப்பதாலோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆகையால் அதற்கு தடை விதிப்பது சரியல்ல என்றுதான் வாதம் செய்கிறோம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் - சாதிய அடையாளமா?

    தலித்துகளுக்கும் கள்ளர் சமூக மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவை நேரடியாக பள்ளிக்கல்வித்துறையில் கீழ் வராது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆதி திராவிடர் பள்ளிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் கள்ளர் பள்ளிகளும் வரும்.

    இந்நிலையில், ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துரையின் கீழ் கொண்டு வரலாம் என்று சந்துரு குழு பரிந்துரைத்தது.

    ஏனெனில் ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அந்த பள்ளிகளின் பெயரால் சாதி ஒடுக்குமுறை நிகழ்த்த வாய்ப்புள்ளது ஆகவே அந்த பெயர்களை நீக்க அக்குழு பரிந்துரைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

    தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதும் நல்ல கோரிக்கையாக உள்ளது என்று பலரும் இந்த சந்துரு குழுவின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    • சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
    • அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

     

    இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

    சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார். 

     

    முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடகாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே மாணவிகள் ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக கல்வித்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகளில் மட்டுமின்றி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மாணவிகள் ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    எனவே, காங்கிரஸ் அரசு எடுத்துள்ள முடிவு எந்த விதத்திலும் தவறு கிடையாது என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஹிஜாப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    • ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
    • ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும்.

    டெஹ்ரான்:

    ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய மசோதாவை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது.

    இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் "தகாத முறையில்" உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

    ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

    இந்த மசோதா அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என்று கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இந்த ஹிஜாப் மசோதா 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    மேலும் பெண் டிரைவர் அல்லது பயணிகள் ஆடைக்கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும். அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

    முறையற்ற ஹிஜாப் அணிந்ததற்காக போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமினி மரணம் தொடர்பாக எதிர்ப்புக்கள் வெடித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார்.
    • சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டதால் அவருக்கு குடியுரிமை

    ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.

    இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (Guidance Patrol) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த அமைப்புக்கும் மத கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கும் அதிகாரம் உள்ளது. பெரும்பாலும் பெண்களின் உடை விஷயங்களில் ஷரியா சட்டத்தின்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளையே இந்த அமைப்பு எடுத்து வருகிறது.

    கடந்த செப்டம்பரில் 22 வயதான ஈரானிய-குர்திஷ் பெண்ணான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்பவர் ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக இந்த அமைப்பு அவரை கைது செய்தது. காவலில் இருந்தபோது காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

    இந்த கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஈரானிய பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஃபைட் வேர்ல்ட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க போட்டியில் (FIDE World Rapid and Blitz Chess Championship) ஈரான் நாட்டை சேர்ந்த 26 வயதான சரசதத் கதேமல்ஷரி (Sarasadat Khademalsharieh) பங்கேற்றார்.

    அப்போது அவர், ஈரான் நாட்டின் பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமான ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார். இதனையடுத்து அந்த ஈரானிய செஸ் வீராங்கனைக்கு ஈரானில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் சரசதத் இதற்கு அஞ்சவில்லை. தன் நாட்டின் மத அடிப்படைவாத தலைமைக்கு கீழ்படியாமல் வாழ்வதையும் அவர் மாற்றி கொள்ள விரும்பவில்லை. 2023 ஜனவரியில் ஸ்பெயின் நாட்டிற்கு அவர் குடிபெயர்ந்தார்.

    தற்போது அவருக்கு ஸ்பெயின் அரசாங்கம் குடியுரிமை வழங்கியிருக்கிறது. சரசதத்தின் வழக்கில் சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என்று ஸ்பெயின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது.

    • பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
    • தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.

    ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

    முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார்.
    • நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் ஜன்னத் (வயது 29). இவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இரவில் நள்ளிரவில் திருப்பூண்டி சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்ராம் (35) என்பவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.

    அப்போது சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார். இதனை கேட்ட புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும். பணியின்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? நீங்கள் டாக்டராக என்று சந்தேகம் உள்ளது. ஹிஜாப்பை கழற்றுங்கள் என கூறி ஜன்னதிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.

    அதற்கு ஜன்னத், நள்ளிரவில் ஒரு பெண்ணிடம் வீணாக தகராறில் ஈடுபடாதீர்கள் என கூறியும் புவனேஷ்ராம் தொடர்ந்து ஹிஜாப் குறித்து பேசி தகராறில் ஈடுபட்டார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, ம.ம.க, ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமையில் ஆஸ்பத்திரி அருகே வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்வராமை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
    • தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து ஈரானில் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிராக பெண்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் திரண்டு போராடி வருகிறார்கள்.

    பெண்கள் ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    இதனால் போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

    தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தலைவர்கள் சிலைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

    ஈரான் தலைவர் ருஹோல்லா கொமேனியின் சிலைக்கு சிலர் தீ வைத்தனர். இதில் அந்த சிலை கொளுந்துவிட்டு எரிந்தது. சிலை தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதற்கு மூத்த மத குருக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் சில இடங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஈரானில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    • ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
    • தலைநகர் தெக்ரானில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

    இதனால் ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    தலைநகர் தெக்ரானில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குர்திஸ்தானில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×