என் மலர்
நீங்கள் தேடியது "students"
- ஜாம்ஷெட்பூரில் பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அங்குள்ள குடியிருப்புப் பள்ளியில் 162 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.
ராஞ்சி:
வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. ஜார்க்கண்ட் முழுதும் பருவமழை தீவிரமாகி உள்ளது. ஜூலை 5-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராஞ்சி வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் 162 மாணவர்கள் சிக்கித் தவித்தனர்.
பள்ளி கட்டிடம் நீரில் மூழ்கியதால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் மேல் தளத்துக்கு மாற்றினர். அங்கு அவர்கள் இரவு முழுவதும் இருந்தனர்.
தகவலறிந்து அதிகாலையில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் கிராம மக்களின் உதவியுடன் மாணவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணிக்காக படகுகள் பயன்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
- ஜூம்பா நடனப் பயிற்சிக்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
- மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.
அரசின் இந்த முயற்சிக்கு இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்துள்ளார்.
- சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
- நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12), கீழ பத்தையை சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12). இவர்கள் 4 பேரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மருத்துவக்குழுவினர் சென்று மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்தனர். அப்போது சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுபோல சந்துரு, நந்த பெருமாள், நரேஷ், வெற்றி மதன் ஆகியோருக்கும் மருத்துவ குழுவினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.
இந்நிலையில் மாலை இடைவேளையின்போது 4 பேரும் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் 4 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு சென்றதும் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் வயிற்று வலியும் ஏற்பட்டது.
இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
- படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 23,49,616 பள்ளி மாண வர்களுக்கும் சுமார் 2,00,000 கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது புத்தகப்பை மற்றும் உணவுப் பைகள் கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கூட்ட நெருக்கடியால் மாணவ, மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
ஆகவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது. பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்கு பதிவு கூட செய்யலாம்.
ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
- கட்-ஆப் மதிப்பெண்களுக்குமேல் மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
- பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டு ஜூன் மாத சுழற்சிக்கான தேசிய பட்டியல் சாதியினர் பெல்லோஷிப் (உயர்கல்வியை தொடர நிதி உதவி) முடிவுகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பட்டியல் சாதி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் கவனத்தை கொண்டு வர இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கடந்த மார்ச் மாதம் யு.ஜி.சி-நெட் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 865 மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்களுக்குமேல் மதிப்பெண் பெற்ற சில மாணவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பலர் திருத்தம்கோரி அணுகினர்.
கடந்த ஆண்டும், ஜூன் 2023 சுழற்சிக்கான பட்டியலில் தகுதியான சிலர் விடுபட்டபோது, 44 மாணவர்களுடன் கூடுதல் பட்டியல் வெளியிட்டது. ஆனால் இந்த ஆண்டு தகுதி வாய்ந்த மாணவர்களின் கூடுதல் பட்டியலை வெளியிடுவதற்கு பதிலாக கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த பேரின் எண்ணிக்கை 865 இருந்து 805-ஆக குறைக்கப்பட்டது. மார்ச் மாதம் தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் வழங்கப்பட்ட பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 487 பேர் திடீரென்று விளக்கம் இல்லாமல் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர். இது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாத முடிவுகளின் அடிப்படையில் பலர் ஏற்கனவே பி.எச்.டி படிப்புகளில் சேர்ந்தனர். தற்போது இந்த தன்னிச்சையான மாற்றத்தால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
எனவே காலியிடங்களின் அசல் எண்ணிக்கையை 865 ஆக மீண்டும் உயர்த்த நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டை போலவே 60 மாணவர்களை கொண்ட கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடித்தில் கனிமொழி எம்.பி கூறி உள்ளார்.
- சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
- மாணவர்கள் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார்
- ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாக புகார் அளித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் பள்ளியில் படிக்கும் 24 சிறுமிகளை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிய வந்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் சிர்மௌர் மாவட்டத்தில் நடந்தது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாகச் சென்று பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை முதல்வர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பினார். அதே நேரத்தில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதை அறிந்த பெற்றோர்கள், பள்ளிக்கு பெருமளவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
- சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
- ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை (3,12,881) கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கேஜி வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைந்த அளவில் சேர்க்கை நடைபெற்றுள்ள மாவட்டங்களில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
+2
- அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்தனர்.
- இந்த விமான விபத்து இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமானத்தில் பயணம் செய்த 241 பேர் மற்றும் அகமதாபாத்தில் விமானம் விழுந்த பயிற்சி டாக்டர்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விமானம் விழுந்த நேரத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சில மாணவர்கள் இரண்டாவது மாடியில் இருந்து பெட்ஷீட் மூலம் கீழே குதித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் உலா வரும் புலி கடந்த சில நாட்களில் இரண்டு மாடுகளை தாக்கி கொன்றது.
பகல் நேரத்தில் உலா வந்த அந்த புலியை சிறுவன் உள்ளிட்ட சிலர் பார்த்துள்ளனர். அச்சமடைந்த பொதுமக்கள், புலியைப் பிடிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து, வனச்சரகர் தனபால் தலைமையில் 20 வன ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 24 தானியங்கி கேமராக்கள் வைத்துள்ளனர். மேல்கம்மநல்லி கிராம மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
புலி நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில், நேற்று காலை முதல் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வன ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில் புலி நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முட்புதர்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானியங்கி கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை. பொது மக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
- வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.
- விண்ணப்பம் செய்தவர்களில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் .
பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர் 1,61,324 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
- மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
- குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி சோபனா சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த சோபனா வீட்டின் நிலையை உணர்ந்து நன்று படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சூழலால் படிப்பை தொடரமுடியாமல், தவித்த ராமநாதபுரம் மாணவி சோபனாவிற்கு உயர்கல்விக்கான உதவிகளைச் கமல்ஹாசன் செய்துள்ளார்.
மேலும், மாணவியின் கனவை எட்ட, குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் கமல்ஹாசன் செய்து கொடுத்துள்ளார்.