என் மலர்
இந்தியா

'குருட்டுத்தனமாக இந்தியை எதிர்க்கக்கூடாது' - வெங்கையா நாயுடு
- 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'
- தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் தாய்மொழியில் பேசுங்கள்
இந்தியை யார்மீதும் திணிக்கக்கூடாது, அதேசமயம் கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பட்டமளிப்பு விழா ஒன்றில் மாணவர்களிடையே பேசிய அவர்,
"இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணம் கொள்ளாதீர்கள், அதே சமயம், இந்தித் திணிப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்; திணிப்பை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் நீங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால், இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.
அதேபோல், ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்றாலும், அது ஒரு சர்வதேச இணைப்பு மொழியாக இருப்பதால், மாணவர்கள் அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், அதில் புலமை பெறுங்கள். ஆனால் அதே சமயம் இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது எதிர்காலத்திற்கு உதவும்.
முதலில் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள், அதன் பிறகு மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் தாத்தா பாட்டியுடனும், அண்டை வீட்டாருடனும் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ளுங்கள். அதுவே மொழியைப் பாதுகாப்பதற்கான வழி.
நீங்கள் ஆச்சர்யப்படலாம். நான் பொறியியல் கல்லூரிக்கு வந்துள்ளேன், பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளேன், ஆனால் தாய்மொழி குறித்துப் பேசுகிறேன் என்று. ஆம், ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும். முதலில் தாய்மொழி அதன் பிறகு சகோதர மொழி (அண்டை மாநில மொழிகள்), அதன்பின் பிற மொழிகள். இதுவே உங்கள் அனைவருக்கும் நான் வழங்கும் அறிவுரை. உங்களால் முடிந்தவரை அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் பேசும்போது உங்கள் மொழியைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். கோவில் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என நீங்கள் எங்கு சென்றாலும், அவர்களிடம் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள். தாய்மொழியை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அதுவே ஒரு வழி.
இரண்டாவது உங்களால் முடிந்தவரை பல மொழிகளைக் கற்க முயற்சி செய்யுங்கள். நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல. ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், ஆங்கிலத்தைக் கற்பதற்கு முன்பாக மற்ற மொழிகளை, அதாவது இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அசாமி, பஞ்சாபி, சந்தாலி என நம்மிடம் அழகான மொழிகள் உள்ளன. நம் நாட்டில் அழகான மொழிகள் பல உள்ளன. நம்மிடம் இந்தியும் உள்ளது.
இந்தியை நாம் எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டாம். இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன். 'திணிப்பு வேண்டாம்' என்று நான் எப்போதும் கூறுவேன். நான் அப்படிச் சொல்லும்போது சில நேரங்களில் குழந்தைகள் கைதட்டுகிறார்கள். பிறகு நான் சொல்கிறேன், 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'. இதுதான் என்னுடைய கருத்து. அதுதான் உங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும்.
உங்களுக்கு அண்டை மாவட்டமான நெல்லூரிலிருந்து நான் வருகிறேன். தொடக்கத்தில், நான் இந்தி கற்கவில்லை. பின்னர், நான் டெல்லிக்குச் சென்றபோதுதான் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஏனெனில், நீங்கள் ஒரு தேசிய அளவிலான தலைவராக மாற விரும்பினால், பிற மாநிலங்களில் பணியாற்ற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தொடர விரும்பினால், நீங்கள் இந்தியையும் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு, மனிதர்கள் மற்றும் உலக விஷயங்களைப் பற்றிய உங்கள் பொது அறிவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இது எனது இரண்டாவது அறிவுரை. முதலாவது - தாய், தாய்நாடு, ஆசிரியர் மற்றும் நீங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தை மதியுங்கள்" எனப் பேசினார்.






