என் மலர்
நீங்கள் தேடியது "மயில்சாமி அண்ணாதுரை"
- சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயர் அடிபடுகிறது.
ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பெயரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயரும், காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்குகள் பெற வைப்பதற்காக மத்திய மந்திரிகள் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும் தமிழக எம்.பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி திமுகவிற்கு பாஜக தூது விடும் நிலையில், திமுக என்ன முடிவு எடுக்கும் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- நமது தாய் மொழியை மறக்க கூடாது.
- அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.
பெங்களூரு :
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவை, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர், பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து தமிழ் புத்தக திருவிழா குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் சுந்தரவேலு, ஆர்.ஆர்.இன்டஸ்டரீஸ் தலைவர் துரை, தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி, கர்நாடக தமிழ்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 'தினத்தந்தி' உள்பட 25 புத்தக அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராம்பிரசாத் மனோகர் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ் புத்தக திருவிழாவை தலைமை ஏற்று நடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்த விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா ஒரு புத்தக திருவிழா மட்டும் இல்லை. நமது உறவுகளை புதுப்பித்து கொள்ளும் விழா.
கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் நான் தமிழ் பேசுகிறேன் என்று சொல்லி கொள்ளவே தயங்குகின்றனர். இந்த விழாவை தலைமை ஏற்று நடத்த சிலர் தயங்கினர். ஆனால் நான் தலைமை ஏற்கிறேன் என்று கூறினேன். தமிழ் என்பது எனது முகம், தமிழ் என்பது எனது அடையாளம். தமிழ் எனது முகவரி. எனது முகவரியை மறைத்து வாழ வேண்டிய தவறை நான் செய்யவில்லை. நான் தைரியமாக, சந்தோஷமாக, ஆர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
சிலர் என்னிடம் தமிழ் மொழியில் படித்து எப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனீர்கள் என்று கேட்டது உண்டு. அவர்களிடம் நான் தமிழ் மொழியில் படித்ததால் தான் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனேன் என்று பெருமையுடன் கூறி இருக்கிறேன். தாய் மொழி உணர்வு பூர்வமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில் கூறியதாவது:-
புதிய முயற்சியாக, புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்து உள்ள முதல் தமிழ் புத்தக திருவிழா உண்மையில் நம்பிக்கை தருகிறது. தமிழ் எனது அடையாளம், தமிழ் எனது முகம் என்று ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். எனது முகவரி தமிழகம் என்றாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பெங்களூருவில் தான் உள்ளேன். நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூருவில் வைத்து தான் எழுதப்பட்டது. நமது தாய் மொழியை மறக்க கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்க கூடாது. அந்த மொழி நமது தாய். அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.
நான் முழுக்க படித்தது எனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான். நான் படித்தது தமிழ்வழியில் தான். தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்டு உள்ளனர். தமிழில் படித்ததால் தான் நான் சாதித்தேன் என்று கூறினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் முடிவில் கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.
- உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது.
- நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம்.
கோவை:
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக வேலை பார்த்தார். அப்போது அவர் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார்.
தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ளது. இந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தரையிறங்க முடியாமல் நொறுங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி தரலாம். சர்வதேச விண்வெளி துறையில் மிகுந்த அனுபவம் உடைய தேசம் எப்படி தோல்வியை தழுவியது என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது.
சந்திரயான்-2 விண்கலத்துக்கு ஏற்பட்ட அதேகதி தான், லூனா-25 விண்கல த்துக்கு ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம். அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும்.
நிலவின் சமவெளி பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போல இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அங்கு விண்கலத்தை தரையிறக்கும் போது கரடுமுரடான இடங்களில் சிக்கி அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உண்டு.
ரஷியாவின் லூனா-25 விண்கலத்துக்கு அந்நிலையில் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நாட்டின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் கானல் நீரானது மிகவும் வருத்தம் தருகிறது. நாம் இதுவரை பார்த்திராத இடத்தில், ஒரு சவாலான காரியத்தை மேற்கொள்ளப் போகிறோம்.
லூனா-25 விண்கலத்தின் வேகத்தை குறைக்கும்போது ரஷியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் நாம் சந்திரயான்-3 விண்கலத்தின் வேகத்தை 2 நாட்களுக்கு முன்பே குறைத்து வெற்றிகரமாக இயக்கி வருகிறோம்.
சந்திரயான்-2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் உடன், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது வரை நடப்பது எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உலக நாடுகளிடம் சந்திரயான்-3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.
- சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்தது.
கோவை:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.
14 நாட்கள் நீடிக்கும் நிலவு இரவில், சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, நிலவில் நேற்று சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரக்யானைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரைப் பொறுத்தவரை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.
- அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது
- உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்.
ஓசூர்:
ஓசூர் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கையறுகே நிலா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சிறகை விரி சிகரம் தொடு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பூமியிலிருந்து 400 கி.மீ தூதரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுள் காலம் விரைவில் முடிவடைகிறது.
அதனால் புதிதாக அமைக்க வேண்டிய சர்வதேச விண்வெளி மையத்தை நிலவில் ஆரம்பிப்போம் என நான் பல இடங்களில் கூறி வருகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலவுக்கு விரைவாகவும் சிக்கனமாக போக முடியும். அனைத்து நாடுகளும் இணைந்து இதனை செய்தால் சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பூமிக்கு தேவையான எரிபொருட்களை அங்கிருந்து சிக்கனமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பூமியை துல்லியமாக அறிவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் நிசார் ஆகும், நாசா இஸ்ரோ சிந்தடிக் அப்பர்சர் ரேடார் என்று சொல்லக்கூடிய அதன் கடைசி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலமாக பூமியில் இயற்கை வளங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளை துல்லியமாக பார்ப்பதற்கான வாய்ப்பை இந்த கலன் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சந்திரன் 3 பிரக்யான் ரோவர் உயிர்ப்பித்தாலும் விக்ரம் லேண்டர் வழியாகத்தான் செய்தி பரிமாற்றத்தை கொடுக்க முடியும். பூமிக்கு இன்னும் புதிதாக செய்திகள் வரும் என்ற நம்பிக்கை இனிமேல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை, அண்டத்தில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளது அங்கு உயிர்கள் உள்ளதா என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் சந்திராயன் 3ல் அனுப்பி உள்ள கலனில் இருந்து பூமியை நோக்கி அனுப்பும் சமிக்கைகள் மூலம் ஆராய்ச்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
- நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம்.
கோவை:
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மயில்சாமி அண்ணாதுரை 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
- படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மைய திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்று நினைப்பவர்களாக உருவாக வேண்டும். கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும்போது உதவியாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அளவில் 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் முதன்முறையாக ஆகஸ்டு 24-ந் தேதி திரவ, திட எரிபொருள் இருண்டும் கலந்து செய்யப்பட்ட ராக்கெட் சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு அனுப்பும் முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கிணத்துக்கடவு பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாணவர்கள் பாடங்களை படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம். மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உலக அளவில் போட்டி உள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க அரசு உதவ முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






