என் மலர்
நீங்கள் தேடியது "Rajnath Singh"
- வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது.
புவனேஸ்வர்:
ஒடிசா கடலோர பகுதியில் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. இந்திய விமானப் படையுடன் இணைந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து அஸ்தரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
ஒடிசா கடலோர பகுதியில் சுகோய் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம் இருவேறு இடங்களில் அனுப்பப்பட்ட இரு இலக்குகளையும் அஸ்தரா ஏவுகணை துல்லியமாக அழித்தது.
ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டபோது அவை மிகச்சிறப்பாக செயல்பட்டன என தெரிய வந்தது. இதன்மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது.
மத்திய பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் உள்பட 50க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அஸ்தரா ஏவுகணை உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளன.
இந்நிலையில், அஸ்தரா ஏவுகணை உருவாக்கம் மற்றும் வெற்றிகரமான சோதனையில் பங்கெடுத்த அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
- இந்தியாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெறச் செய்வதற்கும் நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கும் ராஜ்நாத் சிங் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
- ராஜ்நாத் சிங் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் மோடி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் தனது இயல்பான கடின உழைப்பால் தன்னை வேறுபடுத்திக் கொண்டவர். இந்தியாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெறச் செய்வதற்கும் நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
ராஜ்நாத் சிங் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர்மூழ்கிகள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலானது பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கவச மீட்பு வாகனங்கள், மின்னணு போர் அமைப்பு, முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த பொதுவான மேலாண்மை அமைப்பு மற்றும் தரையில் இருந்து வான் ஏவுகணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர்மூழ்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் கடற்படை மற்றும் வணிக கப்பல்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு உதவும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பீகாரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
- பா.ஜ.க.வின் நோக்கம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வது என்றார்.
பாட்னா:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பீகார் சென்றடைந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான், ஆட்சியில் நீடிப்பது.
ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடையும் கொள்கைகளை உருவாக்குவது. அனைவருக்கும் சுயமரியாதையுடன் வாழ உரிமை உண்டு என்பதை உறுதி செய்வது. எங்கள் அரசாங்கத்தால் இதுவும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடுகிறோம் என தெரிவித்தார்.
- ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றார்.
- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி குறிப்பிடாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ள நிலையில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகள் வெளிப்படையாகக் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவர் கையெழுத்திட மறுத்துள்ளார்.
ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து, சீனாவில் நடைபெற்ற S.C.O. பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேற்றுடன் கூட்டு அறிக்கை இல்லாமல் முடிந்தது.
மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதாகக் கூறினார். பயங்கரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் நிதி வழங்குபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.
பயங்கரவாதத்தின் மையங்கள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அவற்றை குறிவைக்க இனி தயங்க மாட்டோம்" என்று கூறினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
- சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
- பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாக உள்ளன.
பீஜிங்:
இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் கிங்டாவோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து ராஜ்நாத்சிங் பேசினார். அவர் கூறியதாவது:-
சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. அத்தகைய நாடுகளை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக்கூடாது. பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்கள் பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டும்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் வடிவம் இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒத்துப்போகிறது. மத அடையாளத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்கவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் உரிமை உண்டு.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்பேற்க வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கான மூல காரணம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலில் உள்ளது. பயங்கரவாதத்துடனும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்துடனும் அமைதியும் செழிப்பும் இணைந்து வாழ முடியாது. இந்த சவால்களைச் சமாளிப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கை தேவை ஆகும். நமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இந்தத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
சீனாவின் சாண்டோங் மாகாணம் குயிங்தவோ நகரத்திற்கு விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங்கை சீன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
சீனா சென்றுள்ள ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- சமீபத்திய முடிவு இந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.
- இது ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மத்திய அரசு முக்கிய சீர்திருத்ததை மேற்கொண்டுள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, மூன்று படைகளுக்கும் கூட்டு உத்தரவுகள் மற்றும் வழிமுறைகளை வெளியிடும் அதிகாரம் முப்படைத் தலைமை தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, ஒவ்வொரு படை வாரியாக அறிவுறுத்தல்கள் அல்லது வழிமுறைகளை தனித்தனியாக வெளியிடும் நடைமுறை இருந்தது.
சமீபத்திய முடிவு இந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளுக்கும் பொதுவான அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்க முப்படைத் தலைமை தளபதி (அனில் சவுகான்) மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளருக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். இது ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது.
- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகர்:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள உதம்பூர் மாவட்டத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படைவீரர்களைச் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிய அடைகிறேன் என தெரிவித்தார்.
அதன்பின், பாதுகாப்புப் படைவீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைமையில் பாகிஸ்தானுக்கு இடம்.
- அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.
பயங்கரவாதம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) சில முடிவுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று டேராடூனில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைப்பாட்டையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் பாகிஸ்தானுக்கு துணை இருக்கை அளித்ததையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
" அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது அனைவருக்கும் தெரியும்," என்று கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை "பயங்கரவாதத்தின் தந்தை" என்று தெரிவித்தார். எனவே "இது பாலை பாதுகாக்க பூனையை காவல் வைப்பது போன்றது" என்று கூறினார்.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து, புகலிடம் அளிக்கும் நாடுகளை அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐ.நா. உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் ஐ.நா. எடுத்த பல முடிவுகள் கேள்விக்குறியாகிவிட்டன என்றும் அவர் கூறினார்.
- ‘இந்தியாவின் மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
- இந்தியாவுக்கு அர்த்தமுள்ள வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன்.
லக்னோ:
'இந்தியாவின் மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
சிறுவயதில் இருந்தே மாம்பழ கலப்பினத்தில் பரிசோதனை செய்ய தொடங்கிய அவர் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இந்நிலையில் அவர் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'ராஜ்நாத் ஆம்' என்ற புதிய வகை மாம்பழத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்த புதிய வகை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மாலிகாபாத்தில் உள்ள அவரது பழத்தோட்டத்தில் அவரது தனித்துவமான ஒட்டு நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
முன்னதாக மாம்பழ வகைகளுக்கு சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய், அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பிரமுகர்களின் பெயரை சூட்டிய கலிமுல்லா கான், தோட்டக்கலை மற்றும் பழ வளர்ப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கலிமுல்லா கான் கூறுகையில், இந்தியாவுக்கு அர்த்தமுள்ள வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன். இந்த பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
- ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை.
- நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியளித்தால், அதை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.
முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஏற்படும் தாமதங்கள் குறித்து இந்திய விமானப்படைத் தளபதி அமர்பிரீத் சிங் விமர்சித்துள்ளார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், விநியோகங்கள் சரியான நேரத்தில் தொடங்காதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.
சிஐஐ ஆண்டு மாநாட்டில் பங்கேற்ற அமர்பிரீத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஒப்பந்தங்கள் பல முறை கையெழுத்திடப்படுகின்றன, ஆனால் ஆயுதங்கள் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை. காலக்கெடு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை.
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை. 83 தேஜாஸ் Mk1A போர் விமானங்களை வழங்குவதற்காக பிப்ரவரி 2021 இல் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
விமான விநியோகம் மார்ச் 2024 இல் தொடங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை, ஒன்று கூட வழங்கப்படவில்லை.
கடந்த காலங்களில், தேஜாஸ் எம்கே1 விமானங்களை வழங்குவதிலும் தாமதங்கள் ஏற்பட்டன. தேஜாஸ் Mk2 முன்மாதிரி இன்னும் பெறப்படவில்லை. ஆம்கா போர் விமானத்திற்கான முன்மாதிரி கூட தயாராக இல்லை. நம் நாட்டிற்குள் உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, நம் நாட்டிற்குள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இராணுவத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியளித்தால், அதை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பொது நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் முன்னிலையில் விமானப்படை தலைவர் அதிருப்தி தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.