என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy siva"

    • சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயர் அடிபடுகிறது.

    ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.

    தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பெயரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயரும், காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்குகள் பெற வைப்பதற்காக மத்திய மந்திரிகள் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார்.

    மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும் தமிழக எம்.பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி திமுகவிற்கு பாஜக தூது விடும் நிலையில், திமுக என்ன முடிவு எடுக்கும் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று மாலை கார்கே வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 21ஆம் தேதியாகும். அன்றைய தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவாவை இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்த திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இதனால் அவரை எதிர்த்து மற்றொரு தமிழகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் நினைக்கலாம்.

    இன்று மாலை டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா சுட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.
    • காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இன்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.முக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் கருத்து கூற மாட்டேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.

    தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும். அதனை பெரிய தலைவர்கள் பார்த்து கொள்வார்கள். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசிய கருத்து மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய தலைவரை கொச்சைப்படுத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அப்படியே விட்டு விடுங்கள் என்கிறார். முதலமைச்சரும் அவரை கண்டுகொள்ளாமல் இதில் சிலர் குளிர் காய நினைக்கிறார்கள் விட்டு விடுங்கள் என்கிறார்.

    அவர்களுக்கு யாருக்கும் பயம் இல்லை. ஓட்டுக்கு தான் பயம். காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.

    காமராஜர் திருச்சியில் பெல் தொழிற்சாலை ஏற்படுத்தினார். இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதை சிவா எம்.பி. முதலில் சென்று பார்க்க வேண்டும்.

    இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தி.மு.க.வுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்த மண்டல தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினரை வீடு, வீடாக சென்று பேசுங்கள். 1½ கோடி உறுப்பினரை சேருங்கள்.

    30 சதவீதம் வாக்காளர்களை சேருங்கள் என்று கூறி வருகிறார். மக்கள் தி.மு.க.வினரை நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.

    திருச்சி:

    பெருந்தலைவர் காமரஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி. பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சிவா எம்.பி. பேச்சை காங்கிரஸ் கட்சியும் கண்டித்து உள்ளது.

    அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் அறிவித்தார்.

    இதை தொடர்ந்து வக்கீல் சரவணன் தலைமையில், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    பின்னர் அவர்களை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு அரங்கில் அடைத்து வைத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.

    மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர். தமிழ்நாடு அரசின் விடுதியில் காமராஜருக்காக ஏ.சி. பொருத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.

    திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
    • தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர் இன்றைக்கும் அவரது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றுகிறோம். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டான தலைவராக தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர். பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.

    வருங்கால சமுதாயத்தினர் முன் மாதிரியான, நல்வழிகாட்டியான தலைவராக பெருந்தலைவரை ஏற்றுக்கொள்வது 100 சதவீதம் பொருத்தமானது. அப்பேற்பட்ட ஓர் உயர்ந்த தலைவரைப் பற்றி தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தவறான தகவலை பொதுவெளியில் தெரிவித்தது மிகுந்த வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது. அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது போன்ற உத்தம தலைவரை, தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • கல்விக்கண் திறந்த காமராசர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

    சென்னை பெரம்பூரில் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

    அக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, "தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு என காமராசர் மாநிலம் முழுக்க கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். காமராசருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். திமுக அரசை எதிர்த்துதான் காமராசர் பேசுகிறார். ஆனால், காமராசரின் உடல்நலன் கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்தச் சொன்னார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்" என்று தெரிவித்தார். .

    காமராசர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று எம்பி திருச்சி சிவா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காமராசர் குறித்து தான் பேசியது தொடர்பான விளக்கம் அளித்து எம்பி திருச்சி சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அவரது அறிக்கையில், "பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

    "குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!" என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

    நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!

    இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!

    • திராவிடத்தையும் அதன் கொள்கையையும் ஒழிப்பதற்கு வரும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்.
    • 2026 தேர்லில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே அவசியமானது.

    திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா கூறியதாவது:-

    திராவிடத்தையும் அதன் கொள்கையையும் ஒழிப்பதற்கு வரும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும். 2026 தேர்லில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே அவசியமானது. வெற்றி நமதே என்றாலும் எளிதில் கிடைக்காது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • சுற்றுலா பயணிகளாக சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழப்பு.
    • பஹல்காம் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பிறகு, திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது:-

    காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளாக சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சூழலில், இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    பஹல்காம் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்ததோடு, தனது மனவேதனையையும் தெரிவித்தார்.

    நம் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அப்பாடி பொது மக்கள் கொலை செய்யப்படுகின்ற நிலை தொடரக்கூடாது.

    அப்பாடி பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நம் கடமை. அந்த வகையில், இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை வெறும் வார்த்தைகளால் கண்டிப்பதோடு நிறுத்திவிடாமல், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.

    இதுதொடர்பாக மத்திய அரசு மேற்கொள்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடும், தமிழ்நாடு மக்களும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது.
    • இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" நிலவுகிறது

    உச்சநீதிமன்ற தீர்ப்பு

    தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழக்கில் மாநில ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்தது உச்சநீதிமன்றம். அதே தீர்ப்பில் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    ஜெகதீப் தன்கர் பேச்சு

    இது குறித்து பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவர் நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் ஆகியுள்ளது. இது நீதித்துறைக்கு இது 24x7 ஆக கிடைக்கிறது.

    அரசமைப்பின் 145ஆவது பிரிவை (முழுமையான நீதியை உறுதி செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம்) விளக்குவதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று விமர்சித்தார்.

    திமுக கண்டனம்

    இந்நிலையில் இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலமைப்பின் படி அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதன் கீழ், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. மூன்றும் அவற்றின் சொந்தத் துறைகளில் செயல்படும்போது அரசியலமைப்பு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.

    ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் பங்கு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பிரிவு 142 ஐப் பயன்படுத்தி, அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

    இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" நிலவுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார்.
    • இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, கழகத்தைப் பொறுத்தவரை உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு. இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

    தலைவர் கொடுத்துள்ள அங்கீகாரம் என்பது நான் இன்னும் கடுமையாக இந்த இயக்கத்திற்காக உழைத்து இன்னும் பல தோழர்களை இந்த இயக்கத்தில் இணைத்து திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதே எனது கடமை. பொறுப்பு வருகிறபோதே அதனுடன் கடமைகளும் அதிகமாக வருகின்றன என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனது கடமைகள் மேலும் வேகமாக தொடரும் என்றார். 

    • காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது.
    • போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிராட் டியூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார்.

    இந்த விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மேல் சபை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறித்து கறுப்பு கொடி காட்டினர்.

    இதனால் ஆத்திரமடைந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு புகுந்து போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

    இந்நிலையில் கருப்புக்கொடி காட்டிய சிலரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் சிலர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

    இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக சிலர் மீது ஒரு வழக்கும், சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், ராமதாஸ், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான துரைராஜ், மாநகராட்சி வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் திருச்சி காஜாமலை நீதிபதிகள் குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 2 நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி வருகிற மார்ச் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார்.
    • திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். திருச்சி சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவாவை அமைச்சர் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல் அமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

    கே.என்.நேரு கூறுகையில், 'திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். திருச்சி சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது' என தெரிவித்துள்ளார்.

    ×