என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"தமிழ்நாடு தலைவர்கள் வடநாட்டில் கண்டுகொள்ளப்படுவதில்லை" - திருச்சி சிவா!
- தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும்
- நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தேவனூர்புதூரில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்று பேசியதாவது:-
"மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது மேலும் 17 லட்சம் மகளிருக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. சிப்பாய்கள் களப்பணியாற்றி வருகின்றனர். தேர்தலில் நமக்கு எதிராக போட்டியிடுபவர்கள் வல்லவர்களா, என்றால் இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சிக்காரர்கள். மரபுகளை மீறி வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.
வரும் தேர்தலில் தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும். தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம். உற்பத்தியை பெருக்குகிறோம். வேலைவாய்ப்பை பெருக்குகிறோம். மத்திய அரசு இதை செய்தால்தான் உங்களுக்கு காசு தருவேன் என்றால் அதனை நீங்களே வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கு தேவையில்லை. கல்விக்கு தர வேண்டிய பணத்தை தருவதில்லை.
100 நாள் வேலை திட்டத்துக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை. கேட்டால் இந்தி படி என்கிறார்கள். நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல. ஆனால் அதை படி என நிர்பந்தித்தால் முடியாது என்போம். வட நாட்டு தலைவர்களை தமிழ்நாட்டில் மதிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு தலைவர்களை வடநாட்டில் கண்டுகொள்வதில்லை. இதை நாடாளுமன்றத்தில் பேசினேன். நாங்கள் தோற்க மாட்டோம். எதிரிகளையும் வெற்றிபெற விடமாட்டோம்." இவ்வாறு அவர் பேசினார்.






