என் மலர்
நீங்கள் தேடியது "kamarajar"
- உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா?- அண்ணாமலை
- காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வச்சாச்சு- செல்வப்பெருந்தகை
கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை. வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?. உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். முதலமைச்சர் சந்தித்தப்பின் காமராஜர் விவகாரம் மற்றும் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்து கூறியதாவது:-
காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர் விடுமாம். அதேபோல் எங்களை பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு பெரிய கவலை.
பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்?. அவருடைய மூதாதையர்கள், அவர் (அண்ணாமலை) ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைவாதிகள் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
செய்து விட்டு வாக்குகளுக்காக அவருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, இறந்த தினம் அனுசரிப்பது என்ற வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். கோஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.
- பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது!
- காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!
கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!
உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி
அவர்கள், "காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்" என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.
ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.
இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?
ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!
இவ்வாறு அவர் கூறினார்.
- பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
- காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?
பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?
அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?
காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?
இவரே வெடிகுண்டு வைப்பாராம்..
இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க மு.க.ஸ்டாலின்.
அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!
ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது!
வாழ்க கர்மவீரரின் புகழ்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
- மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
- காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.
திருச்சி:
பெருந்தலைவர் காமரஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி. பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சிவா எம்.பி. பேச்சை காங்கிரஸ் கட்சியும் கண்டித்து உள்ளது.
அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் அறிவித்தார்.
இதை தொடர்ந்து வக்கீல் சரவணன் தலைமையில், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு அரங்கில் அடைத்து வைத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.
மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர். தமிழ்நாடு அரசின் விடுதியில் காமராஜருக்காக ஏ.சி. பொருத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.
திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர்.
- தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.
சென்னை சைதாப்பேட்டை கோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர்.
* கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை.
* வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?
* உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?
* தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்.
- நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுக.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மனது வேதனை அடைகிறது... எளிமையின் சிகரமாகவே வாழ்ந்த மாபெரும் தலைவனான காமராஜருக்கு ஏசி வைத்து கொடுத்தோம் என்றும் ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கலைஞரைப் பார்த்து சொன்னார் என்றும்.. கருத்துக்களை திருச்சி சிவா திருச்சி கூறியது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது..
இன்று பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அவர் மீதான பழி "சொற்களை" சரியாக எதிர்க்கவில்லை என்பதே மக்கள் கருத்து.. எல்லாவற்றையும் விட மனதை ரணப்படுத்துவது... அவரின் அறையில் ஏசி இருந்தது என்று திமுக 200 உடன்பிறப்புகள்.. அவர் இருந்த எளிய அறையில் ஏசியை வட்டமிட்டு போடுவதும்... கடைசி நாள்.. அவர் படுத்து இருக்கும்போது கூட ஏசி ஓடிக் கொண்டிருந்தது.. என்று கொச்சையாக.. பதிவு போடுவதும்.. மிகவும் கண்டிக்கத்தக்கது...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் நேரான இயக்க உடன்பிறப்புகளையும்.. 200க்கான இணைய உடன்பிறப்புகளையும்.. கட்டுப்படுத்த வேண்டும்.
நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுகவுடன்.. ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும்... காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது.
பெருந்தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதை காங்கிரஸ் எதிர்ப்பதும் வெறும் பெயரளவில் தான் இருக்கிறது என்பதும் வேதனை...
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
- தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர் இன்றைக்கும் அவரது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றுகிறோம். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டான தலைவராக தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர். பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
வருங்கால சமுதாயத்தினர் முன் மாதிரியான, நல்வழிகாட்டியான தலைவராக பெருந்தலைவரை ஏற்றுக்கொள்வது 100 சதவீதம் பொருத்தமானது. அப்பேற்பட்ட ஓர் உயர்ந்த தலைவரைப் பற்றி தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தவறான தகவலை பொதுவெளியில் தெரிவித்தது மிகுந்த வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது. அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது போன்ற உத்தம தலைவரை, தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை.
- காமராசர் உயிருடன் இருந்தபோதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கர்மவீரர் காமராசர் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது.
சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, ''காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை. காமராசர் எந்தக் காலத்திலும் ஆடம்பரங்களை விரும்பியதில்லை. முதலமைச்சராகவும், இந்தியாவையே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றிய காமராசர் அவர்கள் நினைத்திருந்தால் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவர் எளிமையின் வடிவமாகத் தான் வாழ்ந்து மறைந்தார். அதேபோல், காமராசர் உயிருடன் இருந்த போதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அப்படி இருக்கும் போதே கலைஞரின்ன் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று காமராசர் கூறியதாக திருச்சி சிவாவுக்கு யார் கூறியது என்று தெரியவில்லை.
பெருந்தலைவர் காமராசர் உயிருடன் இருந்தபோதே அவரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்தவர்கள் திமுகவினர் தான். அவர் மறைந்து அரை நூற்றாண்டாகியும் அவரை களங்கப்படுத்தும் செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த பொன்முடி அவர்கள், சில சமூகங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவாவும் அதே போன்று பேசுவதிலிருந்தே திமுக எத்தகைய நாகரீகத்தைக் கடைபிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
திமுக பொதுக்கூட்ட உரை குறித்து நேற்று இரவு அளித்த விளக்கத்தில் கூட, காமராசர் குறித்து தாம் பேசிய கருத்துகள் தவறு என்றோ, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவோ திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. அவரை கட்சித் தலைமையும் கண்டிக்கவில்லை. இதிலிருந்தே பெருந்தலைவர் காமராசரை திமுக எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பெருந்தலைவர் காமராசர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவா அவர்களை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.
- உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு
பாஜக சார்பாகக் கண்டனங்கள்.
மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.
தற்போது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. திருச்சி சிவா அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் புகழ்கிறேன் என கர்மவீரர் காமராஜர் அவர்களைக் குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
தன் மறைவுக்கு முன்பு திரு. கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகவும், மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் அவர்கள் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் திரு. கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளார்.
ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.
அதோடு எமர்ஜென்சியின் போது காமராஜரைக் கைது செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்த திருமதி. இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. திரு. காமராஜர் அவர்களை அன்று திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கைது செய்திருந்தால் தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும், இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவிற்கு எதிராகவும் நிச்சயமாக வெகுண்டெழும்.
மேலும், திருமதி. இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து தான் காங்கிரஸ் அன்று உடைந்தது. அப்போது திரு. காமராஜர் அவர்களை எதிர்த்துக் கொண்டு இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்தது யார்? இதே திரு. கருணாநிதி தலைமையிலான திமுகதானே?
காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான். அவர்களுடைய ஆழ் மனதின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது. சட்டமன்றத்திலேயே காமராஜரின் அருஞ்செயலை திரு. கருணாநிதி மீது ஏற்றிக் கூறினார் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள். காமராஜருக்கே கல்லறை கட்டினோம் எனக் கொச்சையாகப் பேசினார் திரு. RS பாரதி. அதே வரிசையில் அவதூறை அள்ளித் தெளித்துள்ளார் திரு. திருச்சி சிவா.
உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது. அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தப்படியே கூட்டணியில் தொடருகிறது.
கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பாஜகவும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.
- தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
- திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும்.
தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும். அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்விதான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர்.
- உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்விதான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை உருவாக்கியவர். தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர், பெருந்தலைவர் காமராஜர்.
கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர், தமது ஆட்சியில் மசச்சார்பின்மையையும் நிர்வாகத்தில் நேர்மையையும் கடைப்பிடித்தவர். சமூகநீதிக் கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரமளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, சென்னை, பனையூரில், கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.






