என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஹல்காம் தாக்குதல்"

    • பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
    • மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    பேஸ்புக்கில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாகக் கூறி அபிஷேக் சிங் பரத்வாஜ் என்பவர் மீது இமாச்சலப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

    அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும், பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்போது பேசிய நீதிபதிகள், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும், இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.

    குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    மேலும், அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை.

    மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல" என்று தெரிவித்தனர். 

    • கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
    • 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா சென்றார்.

    அங்கு பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்துப் பேசினார். கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது வெறும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளது.

    இத்தகைய பலதரப்பு நிகழ்வுகளில் சந்திப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்று என்றும், இது முறையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.  

    • NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும்.

    ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம் பள்ளாத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் குதிரை ஓட்டியை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் செய்ததாக குற்றம்சாட்டிய இந்தியா, மே 7 ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவதாக தளங்களை தாக்கி அழித்தது.

    மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4இல் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

    இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகாமையான NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    1597 பக்க குற்றப்பத்திரிகை ஜம்மு NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆறு நபர்கள் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது.

    அந்த அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும். இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சதியில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    பயங்கரவாதியாகக் கருதப்படும் சஜித் ஜாட்டைத் தவிர, ஜூலை 29 அன்று ஸ்ரீநகரின் டாச்சிகாமில் இராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் என்ற இருவரின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 22 அன்று கைது செய்யப்பட்டனர்.  

    • விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர்
    • இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.

    இந்த ஆண்டு ஏப்ரலில் 26 பேர் கொல்லப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக  மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.

    இதற்கு பதிலடியா இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியது.

    இந்த டிரோன்களை இந்திய ராணுவம் திறம்பட சுட்டு வீழ்த்தியது. தற்போது, அவற்றில் ஒன்றை டெல்லியில் ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி காட்சிப்படுத்தியுள்ளார்.

    துருக்கியில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களைப் நடுவானில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் அதில் ஒரு டிரோனை துண்டுகளிலிருந்து மீண்டும் உருவாக்கியது.

    இன்று நவம்பர் 15 விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது.

    பஞ்சாபில் உள்ள ஜலந்தரை குறிவைத்து லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த வகை டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.

    மே 10 அன்று விமானப் படையால் 2000 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.  

    • ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
    • ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    அது ஒரு பரபரப்பான ரெயில் நிலையம். ரெயில் எப்போது புறப்படும் என அதில் உட்கார்ந்திருக்கும் பயணிகளும், சீக்கிரம் ரெயிலைப் பிடிக்க வேண்டுமே என ஓடி வரும் பயணிகளுமாக அந்த ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

    எஸ் 4 கோச்சில் அமர்ந்திருந்த கேசவனை வழியனுப்ப வந்திருந்தார் சுதர்சன். வண்டி புறப்பட 20 நிமிடங்கள் இருந்ததால் இருவரும் அங்கிருந்த கேண்டீனில் டீ குடிக்கச் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகை விற்கும் கடையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் என்ற செய்தியைக் கண்டு வருத்தப்பட்டனர்.

    யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தீரமாட்டேங்குதே என அங்கலாய்த்தார் கேசவன்.

    அப்போது, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ஆனாலும் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்ச்யில் ஆழ்த்தியது என வேதனையுடன் தெரிவித்தார் சுதர்சன்.

    அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்:

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.

    இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.


    இந்தக் கொடிய தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இரு வாரங்களுக்குப் பிறகு மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது என தெரிவித்தார்.


    இதைக் கேட்ட கேசவன், யார் ஆட்சியில் இருந்தாலும் குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கேசவன்.

    அப்போது ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் விழுந்ததால் கேசவன் தனது சீட்டில் சென்று அமர்ந்தார். ரெயில் புறப்பட்டுச் சென்றதும் கேசவனை வழியனுப்பிய சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பினார் சுதர்சன்.

    • சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பரப்பி வருகிறது.
    • கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது.

    கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் நிபுணர் குழு தனது ஆண்டறிகையில் தெரிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தங்கள் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கும் பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகிறது.

    இதற்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாகவும், இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் உலகளவில் ரஃபேல் போர் விமானங்கள் மீதான நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும் அறிக்கை நம்புகிறது.

    அதே நேரத்தில், சீனா தனது சொந்த J-35 போர் விமானங்களுக்கான தேவையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. நேரடி இராணுவ மோதல் இல்லாமல் புவிசார் அரசியல் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த சீனா உத்திகளை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.  

    • இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
    • அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

     கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    இந்நிலையில் 60வது முறையாக டிரம்ப், வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், "மோதல்களை தீர்ப்பதில் நான் ஒரு நிபுணர். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.

    நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது என சொன்னேன்.

    நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களை கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன்.

    350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால் நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்று கூறினார்.

    போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய கருத்தை பாகிஸ்தான் ஆமோதித்த நிலையில் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 93-வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.
    • இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.

    இந்நிலையில் நேற்று விழாவின் ஒரு பகுதியாக இரவு விருந்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயரால் பல உணவுகளுக்கு பெயரிடப்பட்டது.

    மெனுவில் உள்ள உணவுகள்: ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தல் மக்கானி, ஜகோபாபாத் மேவா புலாவ், பகவல்பூர் நான்.

    இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.

    மெனுவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஏப்ரல் 22 இல் 26 உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

    • இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்.
    • கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்

    இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.

    இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.

    பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. 

    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
    • ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசி வருகிறார்.

    இதில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேசினார்.

    அவர் பேசியதாவது, சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு உள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது.

    பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டில் இருந்து தான் வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மிகச் சமீபத்திய உதாரணம் கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது ஆகும்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. மேலும் பயங்கரவாத தாக்குதல் அமைப்பாளர்களையும் குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நமது உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், அச்சுறுத்தல்களையும் நாம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பது ஒரு முன்னுரிமை ஆகும்.

    ஏனென்றால் அது வெறி, வன்முறை, சகிப்புத்தன்மை மற்றும் பயத்தை ஒருங்கிணைக்கிறது. பயங்கரவாதத்தை நாடுகள் வெளிப் படையாக அரசுக் கொள்கையாக அறிவிக்கும்போது, பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தப்படும்போது, அத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும்.

    பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதும் இடைவிடாத அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும்.

    உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நமது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    நமது எல்லைகளை வலுவாகப் பாதுகாத்தல், அதற்கு அப்பால் வெளிநாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது அங்கு வசிக்கும் நமது சமூகத்திற்கு உதவியாக இருக்கும்.

    ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீர்திருத்தப்பட்ட கவுன்சில் உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்பட வேண்டும். இந்தியா அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  

    • பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

    இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
    • கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று தெரிவித்தார்.

    கஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படாமல், இந்தியாவுடனான இயல்பான உறவு பகல் கனவாகவே இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனில் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் , வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    அப்போது, "இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்களின் தியாகங்கள் வீணாகக் கூடாது. அவர்களின் இரத்தம் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அமைதி சாத்தியமில்லை. இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

    மேலும், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், அந்தப் பணத்தை பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக செலவழித்திருந்தால், நாடு அதிகம் வளர்ந்திருக்கும் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், அன்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டுமா அல்லது சண்டையிலேயே தொடர வேண்டுமா என்பது நம் கைகளில்தான் உள்ளது.

    காஷ்மீர் மற்றும் காசா ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.  

    ×