search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIA Probe"

    • கடந்த ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் என்.ஐ.ஏ. குழுவினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
    • சையது நபீல் அகமதுவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் கால்பதித்து பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மாநிலங்களிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கேரளாவில் ஐ.எஸ். இயக்க பயங்கரவாத ஆதரவாளர்கள் தனி குழு அமைத்து செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உஷாரான என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கினர்.

    ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி நாச வேலையில் ஈடுபட ஏற்கனவே சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சூரில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலின் ஆதரவாளர்கள் திரண்டு திட்டம் தீட்டியது வெளிச்சத்துக்கு வந்தது.

    இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோவில்கள் மற்றும் குறிப்பிட்ட மத தலைவர்களை கொல்வதற்கு திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து தங்களது சதித்திட்டத்தை தொடங்க பயங்கரவாத ஆதரவு கும்பல் முடிவு செய்து காய் நகர்த்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்களது சதி திட்டத்துக்கு அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறிப்பாக வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவில் கால்பதித்த ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் பின்னணி குறித்தும், அதற்கு மூளையாக செயல்படுபவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சையது நபீல் அகமது என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலுக்கு தலைவன் போல செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பில் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பிரிவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு களம் இறங்கியது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சையது நபீல் அகமது தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை தேடி கண்டுபிடிப்பது என்.ஐ.ஏ. தனிப்படைக்கு பெரிய சவாலாக இருந்தது.

    இந்நிலையில் சென்னை பாடியில் சையது நபீல் அகமது பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சையது நபீல் அகமது பாடியில் தங்கும் விடுதி ஒன்றில் மாத வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து சையது நபீல் அகமதுவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து போலி சான்றிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கைதான சையது நபீல் அகமது நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

    சையது நபீல் அகமது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களின் கிளைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் கிளை அமைப்பு ஒன்றை தொடங்கி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியை பயங்கரவாத கும்பல் வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரிய வந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கொச்சி என்.ஐ.ஏ. அதி காரிகள் கடந்த ஜூலை மாதம் முதல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்தான் தற்போது கும்பல் தலைவன் போல செயல்பட்ட சையது நபீல் அகமது கைதாகி இருக்கிறார்.

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முச்சந்தி காடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்து உள்ளது. இதற்காக வீரப்பன் சுற்றி திரிந்த காட்டுப் பகுதியை அவர்கள் தேர்வு செய்து அடிக்கடி அங்கு சென்று ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் என்.ஐ.ஏ. குழுவினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சையது நபீல் அகமதுவின் கூட்டாளியான ஆசீப் என்பவர் கைதானார்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது முக்கிய குற்றவாளியான சையது நபீல் அகமதுவை பிடித்திருக்கிறார்கள்.

    சையது நபீல் அகமதுவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் என்.ஐ.ஏ. பிடியில் சிக்குகிறார்கள்.

    • கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த முபின் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
    • முபினுக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

    கோவை:

    கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

    அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

    இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

    அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார்.

    ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

    கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார்.

    அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

    மேலும் முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது.

    பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

    இந்த நிலையில் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து 'சிலேட்' ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன.

    மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், 'அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்' என்று கூறி இருந்தார். மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    அதில் ஒரு தாளில், 'ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு' என்று எழுதி இருந்தார். மேலும் 'புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை' என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் சேகரித்துள்ளனர். அந்த பட்டியலை வைத்து அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×