search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "charge sheet"

    • திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.
    • திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு குரைத்தோட்டம் பகுதியில் வீட்டு முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட தகராறில் அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அவரின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை, ஒரு கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கோவை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (வயது 24), திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (52), வெங்கடேஷ் (27), தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா, திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் அதிவேகமாக புலன் விசாரணை முடித்து சாட்சிகள் விசாரணை முடிந்து சாட்சியங்களுடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீதும் 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    • வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்.
    • நகல் எடுக்க மட்டும் ரூ.14 லட்சம் செலவு

    கோவை.

    சேலத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வின்ஸ்டார் இந்தியா மற்றும் சவுபாக்கியா புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம் குறைந்த முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறினார். மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

    இதை நம்பி கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய உறுப்பினர்கள், புரோக்கர்கள் என 28 பேர் பணம் கட்டிய பொதுமக்களுக்கு தவணை முடிந்தும் எவ்விதமான பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

    தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்களில் 1686 பேர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ.175 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் குற்றப்பத்திரிகை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 29 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை நகல்கள் தயார் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் இன்று கோவையில் உள்ள கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கப்பட்டது.

    2 நபர்கள் வராததால் இன்று மாலை 5.30 மணிக்குள் இரண்டு நபர்களும் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து குற்ற நகல்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

    29 பேருக்கு வழங்க க்கூடிய குற்றப்ப த்திரிக்கை நகல்களுக்கு ஜெராக்ஸ் எடுக்க அரசு 14 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்ப ட்டு ள்ளது. ஒரு குற்ற வழக்கிற்காக அரசு அதிகபட்ச தொகையான 14 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது இதுவே முதல்முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
    • வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 4-ந் தேதி நடக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதில் ஒருவர் மைனர் ஆவார்.

    இந்த பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி 2 வழக்குகளை பதிவு செய்தனர். 18 வயதுக்குட்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவாகி இருந்தது.

    பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப் பதிவு செய்திருந்தாலும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீதான பாலியல் புகாரில் டெல்லி போலீசார் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அதில் 18 வயதுக்குட்பட்ட சிறுமி பிரிஜ்பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லையென்று டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாலியல் புகாரில் சிறுமியின் தந்தை முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 4-ந் தேதி நடக்கிறது. மற்ற மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் குறித்து அப்போது விசாரணையில் தெரியவரும்.

    • விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா்.
    • தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூண்டி தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி) படித்து வந்தார்.

    இவர் சிறுமிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்தது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ அலுவலா்கள் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் விக்டா் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பா்களுடன் இணைந்து சிறுமிகள் பாலியல் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தாா். இதை இண்டா்போல் அமைப்பினரின் தரவுகளும் உறுதிப்படுத்தின. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ அலுவலா்கள் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜா்படுத்தினா். பின்னா், விக்டா் ஜேம்ஸ் ராஜா தஞ்சாவூா் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.

    இதுதொடா்பாக, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தஞ்சாவூரில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ அலுவலா்கள் தாக்கல் செய்தனா்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
     
    இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #PNBScam
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.  #NiravModi #PNBScam 
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசிய கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று கோர்ட்டில் 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #JNUSUpresident #KanhaiyaKumar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர்.

    அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.

    கண்ணையா குமார் கைதை கண்டித்து டெல்லி மற்றும் வேறுசில பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும் வெடித்தது.


    இந்நிலையில், கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்திய குற்றவியல் சட்டம் 124A 323, 465, 471,143, 149, 147, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக கோர்ட் நாளை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்ணையா குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கண்ணையா குமார் குறிப்பிட்டுள்ளார். #JNUSUpresident #KanhaiyaKumar 
    இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பதிவு நகலை டி.டி.வி. தினகரன் பெற்றுக்கொண்டார். #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

    இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைதானார். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


    இந்த வழக்கின் நிலை குறித்து டிசம்பர் 5-ந்தேதிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலை சம்பந்தப்பட்டவர்கள் நாளை (5-ந்தேதி) பெற்றுக்கொள்ளலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார்.

    இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #TwoLeaves #TTVDhinakaran
    கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #Karunas #MaduraiHC
    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த ஆண்டு நடைபெற்ற பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் நான் பங்கேற்று மரியாதை செலுத்தினேன். அப்போது எனது ஆதரவாளர்கள் தாக்கியதில் தேவர் பேரவை தலைவர் கார் சேதப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. இந்த வழக்கில் என்னை சேர்க்க முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். #Karunas #MaduraiHC
    கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா ஆகஸ்ட் 29-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #JammuKashmir #FarookAbdullah
    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் 113 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் குறித்து உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு முதல் விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மஜித் யாகூப் தார், நிசார் அகமது கான் ஆகியோர் ஐம்மு காஷ்மீர் ஐகோர்ட்டில் பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, ஸ்ரீநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரியும், வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் பரூக் அப்துல்லா சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணைக்கே பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டும் எனவும், ஆகஸ்ட் 29-ம் தேதி பரூக் அப்துல்லா நேரில் ஆஜராகி தனது தரப்பு கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  #JammuKashmir #FarookAbdullah
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.



    இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப,சிதம்பரம், சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், மதிப்புமிக்க அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது சி.பி.ஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #JammuKashmir #FarookAbdullah #CBI
    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் 113 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் குறித்து உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு முதல் விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மஜித் யாகூப் தார், நிசார் அகமது கான் ஆகியோர் ஐம்மு காஷ்மீர் ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பால் வசந்தகுமார், நீதிபதி பன்சிலால் பத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.



    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, ஸ்ரீநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #JammuKashmir #FarookAbdullah #CBI
    ×