search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "filing"

    • திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.
    • திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு குரைத்தோட்டம் பகுதியில் வீட்டு முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட தகராறில் அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அவரின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை, ஒரு கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கோவை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (வயது 24), திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (52), வெங்கடேஷ் (27), தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா, திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் அதிவேகமாக புலன் விசாரணை முடித்து சாட்சிகள் விசாரணை முடிந்து சாட்சியங்களுடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீதும் 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    • 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
    • விசாரணைக்கு ஆஜராவதற்கு பாபநாசம் கோர்ட்டு மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 2012-ல் உள்ள வழக்கு சம்பந்தமாக பாபநாசம் நீதிமன்றத்தில்
    2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கில் சாட்சியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அப்போது சப்-இன்ஸ்பெக்டராக ராஜா பணியில் இருந்த போது வழக்கு பதிவு செய்தமைக்காக வழக்கின் விசாரணைக்கு சாட்சி சொல்ல ஆஜராவதற்கு பாபநாசம் கோர்ட்டின் மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா ஆஜராகவில்லை.

    சாட்சி சொல்ல விசா–ரணைக்கு அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆஜராகாத காரணத்தால் பாபநாசம் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி ராஜா மீது பிடி கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    அம்மாபேட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தற்போது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசம் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். #IncomeTax
    சென்னை:

    வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

    வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

    அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

    வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

    மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர். 
    சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்தது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.#Pannerselvam #Cavery
    மதுரை:

    சென்னைக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வோம். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.

    தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுக்காத வகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடக்கின்ற தற்போதைய தமிழக அரசு கடைசி வரை போராடக்கூடிய வகையில் பதில் வரைவுத்திட்டங்களை சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி போராடி வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காப்பாற்றும் கடமையிலும் பொறுப்பிலும் தவறாது செயல்படுவோம்.

    ஒரு மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை அந்த மாநில அரசுக்கு உண்டு. காவிரி நதி நீர்பங்கீடு வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    ஆகவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்களது வெற்றி முயற்சிக்கு அவர்கள் ஆதரவு தந்தால், எதிர்க்கட்சி என்ற பணியை அவர்கள் செய்ய முடியாமல் போய் விடும் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள்.

    திவாகரன், தினகரன் பிரச்சினை என்பது அவர்கள் குடும்ப பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக பதில் கூற ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Pannerselvam #Cavery

    ×