என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டது அம்பலம்- என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
    X

    டெல்லியில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டது அம்பலம்- என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

    • பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • வெடி பொருட்களை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டாக்டர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    மேலும் இந்த கும்பல் டெல்லியில் டிசம்பர் 6-ந்தேதி 6 இடங்களில் ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்க ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூர் அசாத் அழைப்பு விடுத்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்காக 5 கட்டங்களாக திட்டங்களை தயாரித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத தொகுதி உருவாக்கம், அரியானாவில் நூஹ் மற்றும் குருகிராமில் இருந்து பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை ஒன்று சேர்ப்பதற்கும், வெடி மருந்துகளை தயாரிக்க மூலப்பொருட்களை வாங்குவதற்கும் திட்டமிடுதல், ஆபத்தான ரசாயன வெடி பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் சாத்தியமான இலக்கு நிர்ணயிக்க இடங்களை உளவு பார்த்தல், இறுதியாக டெல்லியில் 6 முதல் 7 இடங்களில் ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகளை செயல்படுத்துதல் என 5 கட்டங்களாக இந்த கும்பல் திட்டம் தீட்டி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே தாக்குதல்களை நடத்துவது இவர்களின் அசல் திட்டமாக இருந்துள்ளது. இதற்காக செங்கோட்டையை சுற்றி பார்த்து வந்துள்ளனர்.

    ஆனால் தீவிர ரோந்து பணியால் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் கும்பல் டிசம்பர் 6-ந்தேதி அன்று குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக வெடிபொருட்களை சேமித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் வெடி பொருட்களை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த ஆத்திரத்தில் டெல்லியில் உமர் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×